Take a fresh look at your lifestyle.

மற்றவங்கள சந்தோஷப்படுத்துறது எவ்ளோ பெரிய பாக்கியம்!

கே.பாக்யராஜ் நெகிழ்ச்சி

“மூன்றாவதும் பையன்தான்…”

குழந்தை பிறந்ததும் ஈரோட்டிலிருந்த அந்த ஆஸ்பத்திரியில் அப்படித்தான் சொன்னார்கள்.

களைத்துப் படுத்திருந்த அமராவதிக்குப் பிரசவம் பார்த்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவரான ‘போலாடு’ அம்மாள்.

விவசாயத்தில் ஈடுபட்டிருந்த தகப்பனாரான கிருஷ்ணசாமி நாயுடு வந்து பார்த்தார். பெயர் வைத்தார்கள். ‘பாக்யராஜ்’. ஆனால், வீட்டில் சுருக்கமாக ராஜன்.

ஈரோடு பிரசவ ஆஸ்பத்திரியில் ‘மிட்-ஒய்ப்’ (midwife) ஆக இருந்த அமராவதி, கோபிசெட்டிப் பாளையத்திற்கு அருகிலிருந்த வெள்ளாங்கோவிலுக்கு மாற்றலாகிப் போனபோது, மூத்த பையன்கள் செல்வராஜும் தனராஜும் உடன் போகவில்லை.

நேரே கோவையில் மாமா வீட்டில் படிக்கப் போய்விட்டார்கள். தாயாருடன் போனது கடைக்குட்டியான பாக்யராஜ்.

கோவை மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்திற்கு அருகிலிருக்கிறது சின்ன கிராமமான வெள்ளாங்கோவில்.

“பாக்யராஜின் அம்மா அமராவதி இங்கே உள்ள ஆஸ்பத்திரிக்கு மிட்-ஒய்ப்பாக வந்தபோது அவருக்கு நல்ல ஆதரவு.

சுற்றியுள்ள பதினெட்டுக் கிராமங்களுக்கும் போய்ப் பிரசவம் பார்ப்பார். டாக்டரம்மான்னு அவரைக் கூப்பிடுவாங்க. ரிட்டையர்டு ஆகிற வரைக்கும் இங்கேதான் இருந்தாங்க…

பாக்யராஜுக்குச் சின்ன வயசிலேயிருந்து விளையாட்டுப் புத்தி… சதா ஏதாவது பண்ணிக்கிட்டிருப்பார்.

துறுதுறுன்னு இருந்த பாக்யராஜுக்குப் பல பேர் வைச்சிருந்த பேர் ‘ராவு காலம்’ ” என்று சிரித்தபடி சொல்கிறார் பாக்யராஜ் குடும்பத்துக்கு நெருக்கமானவரான வெள்ளாங்கோவிலைச் சேர்ந்தவரான நஞ்சம்மாள்.

வெள்ளாங்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாக்யராஜ் படித்தாலும், அப்போதே சேட்டைகள் அதிகம்.

மருத்துவ வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் தாய் அமராவதியால் பிள்ளையின் மீது அதிகம் கவனம்கொள்ள முடியவில்லை.

வெள்ளாங்கோவிலுக்கு வந்திருந்த பாக்யராஜின் தாத்தாவுக்குத் தனது பேரன் இப்படி வளர்வது பிடிக்காமல் நேரே கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று முனிசிபல் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

ஆரம்பக் காலத்தில் சில வருஷங்களே இந்தக் கிராமத்தில் இருந்தாலும் வெள்ளாங்கோவில் பாக்யராஜ் மனதில் பதிந்துபோன கிராமம்.

“அவர் முதல் படமான ‘ஒரு கை ஓசை’ டைரக்ட் பண்ண இங்கு வந்தபோது, இந்தக் கிராமத்திலேயே தங்கிப் படப்பிடிப்பை நடத்தினார். ஜனங்களும் அவருக்கு நல்லா ஒத்துழைப்புக் கொடுத்தாங்க.

தான் படிச்ச பள்ளி உயர்நிலைப்பள்ளியாக மாறினப்போ, பொதுமக்களிடம் நிதி திரட்டினாங்க. அப்போ ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் பாக்யராஜ் கொடுத்தார்.

கார் ஷெட்டோட இங்கே இருந்த அவங்களோட சொந்த வீட்டை முன்னாடியே வித்துட்டாங்க…

சின்ன வயசிலே அவரோட பழகினவர்களை இன்னும் மறக்காமல் நினைவு வைச்சிருந்து பழகுறார்…” என்கிறார் சிறு வயதில் பாக்யராஜுடன் படித்த, வெள்ளாங்கோவிலைச் சேர்ந்தவரான அப்புச்சாமி என்கிற சதாசிவம்.

கோவை மணி உயர்நிலைப்பள்ளி. அதில் எட்டாம் வகுப்பிலிருந்து கோ-எஜுகேஷன். பாக்யராஜின் உற்சாகம் அதிகரித்தது.

சக மாணவர்களைவிடத் தன்னை உயர்த்திக் காட்ட வேண்டுமென்கிற வேகம்.

சக அன்ட்ராயர்களுடன் பந்தயம் கட்டிக் கூடப் படித்த சிறு பெண்களுக்கு ‘லவ் லெட்டர்’ கொடுக்கிற சாகசம் எல்லாம் ஆரம்பித்துவிட்டது.

பள்ளியில் நாடகம் போட்டார்கள். சீனியர் மாணவர்கள் நடிக்க அவர்களுக்குப் பள்ளியில் ஏகப் பாராட்டு; தனி மரியாதை.

நாமும் ஏதாவது போட்டு இப்படிப் பெயர் வாங்க வேண்டுமே! ஒரு வழியாக, கதாநாயகனாக நாடக மேடையில் நடித்தபோது அதற்கு வரவேற்பு.

எஸ்.எஸ்.எல்.சி. தேறி, கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் பி.யூ.சி படிப்புப் படித்தபோது, படிப்பைவிட கேரம்போர்ட் விளையாடிக்கொண்டு, வெளியே ரோந்து சுற்றுவதுடன் சினிமாக்களும் தொடர்ந்து பார்த்தபடி இருக்க, சமயங்களில் இடையில் பிடிபட்டபோது வீட்டில் – பாக்யராஜ் வார்த்தையிலேயே சொன்னால் – ‘தர்ம அடி!’

பி.யூ.சி.யில் தோல்வி. பாக்யராஜின் அண்ணன் வம்படியாக இவரைச் சேர்த்துவிட்டது கோவை அரசு பாலிடெக்னிக்கில்.

அங்கும் ‘கல்யாணப் பரிசு’ கதையாகப் படிப்பதாகச் சொல்லிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை, சினிமா என்று போக, அதுவும் அண்ணன் கண்ணில் பட்டு ரத்தம் வருகிற அளவுக்குச் செம அடி.

டாக்டரிடம் மருந்து போட்டுக்கொண்டு வீட்டுக்கு நண்பர்கள் மூலமாகச் சொல்லி அனுப்பினார்.

“இனிமேல் இப்படி அடித்தால் தற்கொலை பண்ணிக்கொள்வேன்.”

இந்த மிரட்டலுக்குப் பிறகு வீட்டில் – படிப்புக்குத் தண்ணீர் தெளிவித்துவிட்டார்கள். அதோடு முடிந்தது படிப்பு.

“வீட்டிலே அம்மாவுக்கு இவன் செல்லம். எங்க குடும்பத்திலே எங்க பெரியப்பா ஒருத்தர் நாடகத்திலே ஈடுபாடா இருந்திருக்கார். மற்றபடி குடும்பத்தில் எல்லோரும் பிசினஸ்தான்.

அப்போ ஜெட் பம்பு தயாரிக்கிற பேக்டரி வைச்சிருந்து, வட இந்தியா வரைக்கும் விநியோகம் பண்ணினோம். நூற்றுக்கணக்கானவங்க எங்க பேக்டரியிலே வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க.

இந்தச் சமயத்திலே ராஜன் சரியாகப் படிக்கவும் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து சுத்திக்கிட்டிருந்தான்.

அப்படியே நம்ம குடும்பத்திலே ஒன்னுக்கும் லாயக்கில்லாம ஆயிடுவானோன்னு எனக்குப் பயம். அப்பவே தெருவிலே போய் நாடகம் போடுவான்.

இவனே கதை வசனமெல்லாம் எழுதுவான். அப்புறம் என்னோட, பேக்டரியிலே வந்து வேலை பார்க்கச் சொன்னேன். கொஞ்ச காலம் இருந்தான். ஒருநாள் யாரிடமும் சொல்லிக்காம ஆந்திரா – விஜயவாடாவுக்குப் போயிட்டான்.

அங்கே போய் ஹோட்டல்லே கொஞ்சநாள் வேலை பார்த்திருக்கான். சர்க்கஸிலே பபூனா வேஷம் போட்டிருக்கான். அப்புறம் கண்டுபிடிச்சு இவனைக் கூட்டிக்கிட்டு வந்தேன்.

இவன் போற பாதை சரியில்லையோ, எங்கே மாறிப் போயிடுவானோன்னு தோனினதாலேதான், அவ்வளவு கண்டிப்புக் காட்டினேன்…” என்கிறார் கோயம்புத்தூரில் இருக்கும் பாக்யராஜின் மூத்த சகோதரரான கே.செல்வராஜ்.

அப்புறம் சென்னைக்குப் படையெடுப்பு.

வீட்டில் தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு சென்னை வந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததோடு சரி. யாரும் சட்டை பண்ணவில்லை.

பணம் தீர்ந்து சென்னை பாண்டிபஜாரில் இருந்தபடி சிறுசிறு வேலைகள் செய்திருக்கிறார்.

அப்போது இவரை மாதிரியே அறையில் தங்கிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போதைய டைரக்டரான ஆர்.சுந்தர்ராஜனும் சங்கிலி முருகனும்.

பக்கத்து வீட்டில் தங்கிச் சான்ஸ் தேடிக்கொண்டிருந்த இன்னொருத்தர் கவுண்டமணி.

இதற்கிடையில் பாக்யராஜின் அண்ணன் வந்து, நாலு போடு போட்டுக் கோவைக்கு இழுத்துக் கொண்டுபோயிருக்கிறார்.

திருந்தாமலிருக்கிற தம்பிக்காக ஜோசியரைக் கூப்பிட்டு ஜாதகம் பார்த்தார் அண்ணன்.

“பையன் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்லதான் இருந்தாகணும்” என்று கறாராக ஜோசியர் சொன்னதும் மறுபடி பாக்யராஜைத் தன் பேக்டரிக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார் அண்ணன்.

‘அங்கங்கே திடகாத்திரமாக உட்கார்ந்திருக்கிற ஜெட் பம்புகளுடன் தானும் ஒரு இயந்திரமாக உட்கார வேண்டுமா?’ – யோசித்து அண்ணனிடம் ஒரு வருஷ தவணை கேட்டார்.

“அதற்குள் சென்னையில் சினிமா சான்ஸ் கிடைக்கவில்லையென்றால் ஊருக்கு வந்துவிடுகிறேன்” – திரும்பவும் அதிகாரபூர்வமாகச் சென்னை.

“அப்பவே கோவையில் நாங்கள் போட்ட நாடகங்கள் வித்தியாசமா இருக்கும். இவர்தான் கதை, வசனம், டைரக்ஷனெல்லாம்.

அப்போது சினிமா பார்க்கிறப்போ ‘இதை வேறமாதிரி எடுத்திருக்கலாமே’ன்னு வசனத்தோடு இரண்டு மணி நேரம் கதை சொல்வார்.

அந்த மாதிரி கற்பனைத் திறன் அதிகம். காட்சியமைப்புகளை நன்றாக அமைப்பார். வசனம் ஷார்ப்பா இருக்கும். இதுதான் அவருக்குப் பெரிய பலம்.

வீட்டிலே ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் பாக்யராஜுக்கு இருந்த இரக்க சுபாவம், எதையும் ஏதோ நடந்துடுச்சின்னு நினைச்சுட்டு முன்னேறுகிற சுபாவம்… அதுவும், அவரோட ஈடுபாடும்தான் அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கு…” என்கிறார் பாக்யராஜின் நெருங்கிய நண்பரான பழனிச்சாமி.

கதை வசனகர்த்தா தூயவன் நட்பு கிடைத்து பாக்யராஜ் கதை சொல்லப் போனது தேவர் ஃபிலிம்ஸ் தேவரிடம்.

“வழவழான்னு இருக்கக்கூடாது… நறுக்கா… இரண்டு வரியில் கதை சொல்லணும். என்ன… சரி… சொல்லு” – வெற்றிலை துப்பினபடி சொன்னார் தேவர்.

பாக்யராஜுக்கு வியர்த்துப் போய்விட்டது.

“ஒரு குப்பைத் தொட்டி” என்று மெதுவாக ஆரம்பித்தார்.

“என்ன… குப்பைத் தொட்டியா… வேணாம்… வேணாம்பா…” என்று ‘த்தூ’ என்று வெற்றிலை எச்சிலைக் கீழே தேவர் துப்ப, நொந்து போய் வந்தார் பாக்யராஜ்.

பிறகு ‘ஏழை பணக்காரன்’ படத்தில் தூயவன் கதை – வசனம் எழுத, அதை காப்பி பண்ணுகிற வேலை இவருக்கு. அப்போதுதான் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்டாக இருந்த பாலகுரு மூலம் பாரதிராஜா அறிமுகமானார்.

படப்பிடிப்புத் தளத்தில் பாக்யராஜ் சொன்ன வசனங்களில் ஒரு கூர்மை தெரிந்தது. பாரதிராஜா வியப்புடன் சொன்னார், “பரவாயில்லைப்பா…”

“நான்தான் பாரதிராஜாவிடம் இவரை அறிமுகப்படுத்தினேன். ‘பதினாறு வயதினிலே’ படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இவரது திறமையை இனம் கண்டுவிட்டார் பாரதிராஜா.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வசனத்திற்கு உதவி; ‘சிகப்பு ரோஜாக்களில்’ இவரே வசனம்; ‘நிறம் மாறாத பூக்களில்’ கதை என்று படிப்படியான வளர்ச்சி.

‘புதிய வார்ப்புகள்’ பட பூஜையெல்லாம் முடிந்து ஹீரோ முடிவாகாத நேரம்.

பூஜையின்போது எடுத்த போட்டோக்களைப் பார்த்துக்கொண்டு வந்த பாரதிராஜா பாக்யராஜை ஃபோட்டோவில் பார்த்ததும் ஹீரோவாக நடிக்கச் சொல்ல, படம் ஹிட்டானதும், பாக்யராஜ் வெளியுலகிற்கு முழுமையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டார்” என்கிறார் தூயவன்.

இள வயதிலிருந்து கொஞ்சம் நோஞ்சான் உடம்புடன் இருந்து சற்று உடம்பைத் தேற்றிப் ‘புதிய வார்ப்பு’களில் கதாநாயகன் ஆனபோது பாக்யராஜுக்கு 26 வயது.

சிகப்பு ரோஜாக்களில் வசனத்தில் ஆரம்பித்துத் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் இவர் சம்பந்தப்பட்டு வெளிவந்திருக்கின்ற படங்களின் எண்ணிக்கை 51.

தான் படங்களுக்குச் சான்ஸ் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் பிரவீணாவுக்குத் தமிழ் ட்யூஷன் சொல்லிக் கொடுக்கப் போய், 80ல் மணந்துகொண்டு, பிரவீணா 83ல் இறந்ததும் பூர்ணிமா ஜெயராமைத் திருமணம் செய்திருக்கிறார். இரு குழந்தைகள் இப்போது.

சிறந்த கதாசிரியர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பல அரசு விருதுகள்; அதோடு பத்தாண்டுகளாக வெளிவரும் ‘பாக்யா’ இதழுக்கு ஆசிரியர்; ‘திரைக்கதை அமைப்பதில் நிபுணர்’ என்ற பாராட்டு என்று பல படிகளைக் கடந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கிப் பிறகு பின்வாங்கியிருக்கிறார்.

அவ்வப்போது ஏற்ற இறக்கங்களிருந்தாலும் தன்னை வளர்த்த ‘கொங்குத் தமிழில்’ உற்சாகத்துடன் சொல்கிறார் :

“சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே மற்றவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்குறதுதான். அதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன்.”

எழுத்தாளர் மணாவின் ‘நதிமூலம்’ நூலிலிருந்து… (பென் பேர்டு பதிப்பகம்)
📖 Price: ₹ 245
📞 Orders: 8220063246