Take a fresh look at your lifestyle.

29 : நெரிசலான பேருந்து பயணத்தில் ரசிக்கும் பாடல்!

விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், ஆதிரா, அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா, நடிப்பில் ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம் ‘29’.

ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜி ஸ்குவாட் சார்பில் லோகேஷ் கனகராஜ் இணைந்த தயாரிப்பு.

29 வயது வரை ஒருவனை இளைஞனாக பார்க்கும் சமுதாயம் அடுத்த ஒரு வருடத்தில் அவனை நடுத்தர வயது ஆளாகப் பார்க்கத் துவங்கி விடுகிறது என்ற பார்வையோடு வந்திருக்கும் படம்.

கிராமத்தில், சமூக சேவையில் ஆர்வம் உள்ள அம்மாவுக்கு (ஆதிரா) மகனாகப் பிறந்து, வாழ்வைத் தேடும் வேளையில் அதெல்லாம் வேண்டாத வேலை என்று எண்ணும் இளைஞன் சத்யாவுக்கு (விது), தான் என்னவாகப் போகிறோம்; தனது அடையாளம் என்ன என்பதிலேயே குழப்பம்.

இடம் விட்டு விலகி நிற்கச் சொல்வதற்காக எக்ஸ்கியூஸ்மீ கேட்பது தவிர, வேறு எந்த வார்த்தையையும் பெண்கள் தன்னிடம் பேசியதே இல்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் அவனுக்கு, விஜி (ப்ரீத்தி அஸ்ராணி) என்ற யதார்த்த தேவதை காதலியாக அமைகிறாள்.

காதலிப்பது, விஜிக்காக உருகுவது என்று வாழ்வதைத் தவிர வேறு எந்த உணர்வும் இல்லாதவன் விது.

சிறுவயதிலேயே அப்பா விட்டு விட்டுப் போய்விட, வாழ்வின் சவால்களோடு அம்மாவால் வளர்க்கப்பட்ட விஜிக்கும் அவளது அம்மாவுக்கும், விஜி படித்து ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது ஆசை.

சத்யாவின் – காதல் தோல்வி – நண்பன் ஒருவன், ”காதலுக்கு கெமிஸ்ட்ரி போதும் ஆனால் வாழ்வதற்கு மேத்ஸ் (அதாவது பொருளாதாரம்) வேணும்” என்று ஒரு சோக தருணத்தில் சொல்ல, தூண்டப்பட்ட விஜி படிப்பின் மீதான கவனத்தில் சத்யாவின் சந்திப்பதற்கான அழைப்புகளைகூட தவற விடும் நிலை.

அப்படி ஒரு சூழலில், விஜி மேல் மிகவும் பாசமாக இருக்கும் சத்யாவின் அம்மாவை சந்திக்கும் அழைப்பையே விஜி தவற விட்டுவிட, சத்யா கோபத்தில் உதிர்க்கும் சில வார்த்தைகள் விஜியை பூகம்பக் காயப்படுத்துகின்றன.

அதற்கு முன் இருவருக்குள்ளும் நடக்கும் – காதலை மெய்ப்பிக்க முயலும் சில உரையாடல்களும் அதற்கு காரணமாகிறது. இருவருக்கும் பிரிவு.

படிப்பதில் கவனம் செலுத்த முயன்று முடியாமல் விஜி தவிக்க, சமூக சேவையே தனது அடையாளமென்று உணரும் விது, பாழ்பட்ட ஏரி ஒன்றைப் புதுப்பிக்க களம் இறங்க, அங்கே அரசியல் மற்றும் பழைய பிரச்சினை, பகைகள் ஒன்று சேர்ந்து வர, என்ன நடந்தது என்பதே படம்.

டேட்டிங் தளங்கள் இல்லாத காலத்தில் நடந்த பீரியட் கதை. காதலின் நுண்ணிய உணர்வுகளை காட்சியாக்கி இருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

பல இடங்களில் வசனங்கள் பிரமாதம். எத்தனை இடங்கள்ல என்னை மாத்தி மாத்தி புடுங்கி நடுவீங்க என்பது போன்ற வசனங்கள் ஆழம்.

பந்தி சீன் பக்கா.

இடியாப்பம், குஸ்கா வசனங்கள் ரகளை.

”என்னைப் பாக்க வரும்போது வெறுங்கையோடு வரவே மாட்டியா” என்ற வசனத்தை தொடர்ந்து பல காட்சிகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதம் கவிதை.

நெரிசலான பேருந்து பயணத்தில் காதல் (இல்ல இல்ல. அப்படி இல்ல. அப்படி இல்ல) போன்ற காட்சிகள் சிறப்பு.

பல காட்சிகள் மிகுந்த ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கின்றன. மிக சிறப்பான படமாக்கல் செய்திருக்கிறார் ரத்னகுமார்.

மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் மிக முக்கியமான காரணம். மிக சிறப்பான ஒளிப்பதிவு.

ஷான் ரோல்டனின் இசை காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது.

நாட்டுப்புறப் பாட்டுக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளை கட் செய்தது உட்பட பல இடங்களில் சிறப்பாக இருக்கிறது சதீஷ்குமாரின் படத்தொகுப்பு.

சண்முகராஜாவின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது.

மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார் பிரீத்தி அஸ்ராணி. so cute நடிப்பு.

விது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறார். வாழ்த்துகள்.

”அவ உதடு திருப்பிப் போட்ட திருக்குறள் மாதிரி. மேல் உதடு சின்னது கீழ் உதடு பெருசு” என்ற வசனம் கேட்கும் நொடி அட என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆனால், யோசித்தால் தவறு புரிகிறது.

திருக்குறள் வரிகளை பெருசு சிறுசு என்று சொல்வது உவமைக்கு பொருத்தம் இல்லை. நீளம்தான் அங்கே அளவீடு.

பொதுவாகவே மேல் உதவு நீளம் அதிகமாகவும் கீழ் உதடு சற்று நீளம் குறைவாகவும் இருக்கும்.

எனவே ”அவ உதடுகள் கூட திருக்குறள் மாதிரிதான். மேல் உதட்டுல முக்கால்வாசிதான் கீழ் உதடு…” என்று சொல்வதே சரி.

கடற்கரையில் ஒரு இடத்தில் நிற்கும் நாயகன் – நாயகியிடம்,

“இந்த இடத்தில் இருந்து அஞ்சு அடி ரோட்டுப் பக்கம் போனா கார், பஸ் சத்தம் கேட்கும். அதே இந்த இடத்தில் இருந்து அஞ்சு அடி கடல் பக்கம் போனா அலைகள் அடிக்கிற சத்தம் கேட்கும். ஆனா இந்த இடத்தில் நின்னா காற்றின் சத்தம் மட்டும் தான் கேட்கும்” என்று சொல்கிறான்.

உண்மையில் அட்டகாசமான சீன் அது. எழுத்தாக அபாரம். ஆனால் எடுத்த விதம்?

அவன் சொன்னதை உடனே நாயகி சோதித்துப் பார்க்கிறாள். அப்போது நாயகன் நிற்கும் இடத்தில் அதாவது காற்று மட்டுமே கேட்கும் இடத்தில் கேமரா இருக்கிறது.

நாயகி சாலையை நோக்கி ஐந்தடி நடந்து போகிறாள். அவள் அங்கு போய் நிற்கும்போது திரையில் கார் பஸ் சத்தம் கேட்கிறது. எப்படிக் கேட்கும்?

கேமரா காற்று மட்டும் கேட்கும் இடத்தில் இருக்கும்போது, அவள் மட்டும் ஐந்தடி சாலை பக்கம் தள்ளிப் போவதால் கேமரா இருக்கும் இடத்தில் எப்படி கார் பஸ் சத்தம் கேட்கும்?

இந்த ஷாட்டே தப்பு. உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்?

கதாநாயகி சாலை பக்கம் நடக்கும்போது அவளுடனேயே கேமராவும் போகவேண்டும். அவள் ஐந்தடி சாலைப் பக்கம் போகும் இடம் வரை கேமராவும் போக வேண்டும்.

அப்போதுதான் அவளுக்கு கேட்கும் கார், பஸ் சத்தம், கேமரா இருக்கும் இடத்திலும் கேட்கும்.

இந்தக் காட்சியைப் பொறுத்தவரை கேமரா இருக்கும் இடத்தில் கேட்பதைத் தான் திரையில் உணர்த்த முடியும்.

எனவே, கேமரா கதாநாயகி நிற்கும் இடத்தில் இருந்தால்தான் திரையில் கார், பஸ் சத்தம் கேட்க, அதை படம் பார்ப்பவர்களும் கேட்பதாக வைத்து அவர்களும் கேட்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இவை எல்லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால், இதைவிட சில பெரிய பிரச்சினைகள் உண்டு.

கதையை நியாயப்படுத்த பீரியட் படமாக எடுத்திருக்கிறார். பல விஷயங்கள் இன்று கனெக்ட் ஆகும் அளவுக்கு இல்லை.

பிரச்சனைக்கான காரணம் இருவருக்குள் வரும் கருத்து வேறுபாடுகள்தான் என்பதால் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் படம் போகிறது. சில விசயங்கள் ரொம்ப அப்-நார்மலாகவும் உணர வைக்கிறது.

காட்சிகளை எடுத்த விதத்தில் இருக்கும் கனம் கதை, திரைக்கதையில் இல்லை. இந்தக் கதைக்கு இவ்வளவு மெதுவாக நகர்வு என்பது பொருந்தவில்லை. தவிர பல வழக்கமான காதல் படங்களின் டெம்ப்ளேட்கள் வேறு.

படம் ஒரு கவிதைதான். ஆனால், இதை பொறுமையாகப் படித்து முடிக்க இப்போ யாரும் ரசிகன் இல்லை, படித்து முடிக்கும் அளவுக்கு கவிதையில் ஈர்ப்பும் இல்லை.

மொத்தத்தில் 29-ல் 19 தான் இருக்கு. 10 காணோம்.

– சு. செந்தில் குமரன்