இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் தன் பத்து வயதிலேயே பாடகனாகவும் பதினோராவது வயதில் நாடக நடிகனாகவும் ஆகிவிட்ட நிலையில், அப்போதே பாடல்களுக்கு இசையமைக்கும் ஞானம் இயற்கையாக இவருக்கு வந்துவிட்டது.
கதாநாயகன், நகைச்சுவை, ஸ்த்ரீ பார்ட் ஆகிய எல்லா வேடங்களும் போட்டுள்ளார். கதை எழுதுவார், தயாரிப்பாளராக இருந்த இவர் நாடகக் குழு வைத்திருந்தார்.
பம்பாயில் இவர் ஒரு சமூகப் படத்திலே நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சண்டைக் காட்சியில் நடித்தபோது ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது.
அதனால் மனமொடிந்த இவர் திரைப்படமே வேண்டாம் என்று விரக்தியோடு இருந்தார்.
அந்த சமயத்தில் ஏ.வி.எம். செட்டியார்தான் இவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். அவர் தயாரிக்க இருந்த ‘நந்தகுமார்’ படத்திற்கு உடனிருந்து எல்லாவற்றையும் கவனிக்கும்படி கூறினார்.
புனாவில் இருந்தபோது அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யாரென்று அங்கிருந்தவர்கள் கேட்டபோது, எஸ்.வி.வெங்கட்ராமன்தான் இசையமைப்பாளர் கூறியதையடுத்து இசையமைப்பாளராகவும் உருவாகினார்.
‘மீரா’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களை அந்தக் காலத்திலேயே பயன்படுத்தியவர்.
15 தம்புரா, 4 வீணைகள், 15 வயலின்கள், தபலாதரங் இன்னும் எத்தனையோ வாத்தியங்கள்.
அத்தனையையும் ஒழுங்குபடுத்தி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாட ஒரே ஒலிவாங்கியில் ஒலிப்பதிவு செய்தவர்.
இன்னொரு பாடலில் வேத மந்திர ஒலி, நாதஸ்வர இசை, பூஜை, பாட்டு பின்னணி இசை அத்தனையையும் இணைத்து ஒலிப்பதிவு செய்தவர்.
‘மனோகரா’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் இவரேதான் இசையமைத்தார். ஏ.பி.நாகராஜனின் ‘கிருஷ்ண லீலா’ படத்திற்கு இசையமைத்தவரும் இவர்தான்.
சில படங்களில் இவர் இசையமைத்ததை இந்தி, ஆங்கிலப் படங்களில் கேட்டு இவரே ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
உதாரணமாக ‘கண்கள்’ படத்தில் ‘பிஸ்மில்லா இர் ரஹிமான்’ பாடலை இசையமைத்து இவரே பாடியிருந்தார்.
சுரையா நடித்த படம் அப்புறம் வந்தது. அதைப் பார்த்துவிட்டு வந்த இயக்குநர் பஞ்சுவின் நண்பர் ஒருவர் இவரது இசையமைப்புப் போலவே ஒரு பாடல் இருந்ததென்று கூறியுள்ளார். ஆனால், அதை இவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
‘எல்லோரும் நல்லவரே’ என்று ‘கிருஷ்ண பக்தி’ படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய பாடல் இவர் இசையமைத்தது தான்.
இவரது காலத்தில் பதிவு செய்த பாடலைப் போடுக்கேட்க பதினைந்து நாட்களாகுமாம்.
தமிழ்தான் வேண்டுமென்று நாம் சொல்வது மாதிரி கர்நாடக இசையை முக்கியமாக வைத்துக்கொண்டுதான் இசையமைப்பது தான் இவரது பாணி.
ஹரிச்சந்திராவில் சந்திரமதியை விற்பதற்காக ஒரு பாட்டு இவர் போட்டிருந்தார்.
‘சத்திய நீதி மாறா இம் மாதை வாங்குவார் உண்டோ’ என்ற பாடல், ‘கண்ணகி’ ‘மகா மாயா’ படங்களில் சில பாடல்கள், ‘மனிதன்’ படப்பாடல்கள். இப்படி சில பாடல்கள் இவருக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
இவர் இசையமைத்த ‘மீரா’ படத்தின் பாடல்கள் மூன்று முறை இசைத்தட்டுக்கள் போட்டு விற்றிருக்கிறார்கள். 1978 –களிலும் எல்.பி. இசைத்தட்டாக வெளி வந்திருக்கிறது.
அதே மாதிரி ‘கிருஷ்ண பக்தி’ படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய காலட்சேபம் பல முறை இசைத்தட்டுக்களாக வந்து விற்றிருக்கின்றன.
1938 இல் துவங்கிய இவரது திரை வாழ்க்கை 1978 வரை நீடித்தது. 200-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அறிவாளி, மருதநாட்டு வீரன், ஒன்றே குலம், பானை பிடித்தவள் பாக்கியசாலி, இரும்புத்திரை, நன்னம்பிக்கை, கல்யாணம் செய்துக்கோ, கோடீஸ்வரன், கண்ணின் மணிகள், மாமன் மகள், பணக்காரி, கண்கள், லாவண்யா, சிங்காரி, வனசுந்தரி, லைலா மஜ்னு, பாரிஜாதம், ஸ்ரீகிருஷ்ண விஜயம், ஞான சௌந்தரி, நவ ஜீவனம், சகுந்தலை முதலிய படங்கள் இவரது இசையமைப்பில் வெளிவந்த படங்களில் சில.
- டிசம்பர் 1978 ‘பேசும் படம்’ திரையிதழிலிருந்து.