Take a fresh look at your lifestyle.

துண்டு நிலம் வாங்கத் துடிக்கும் இளைஞனின் வேட்கை!

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம் Youtubeல் விஜய் சேதுபதியின் சேனலில் இலவசமாகவே காணக் கிடைக்கிறது.
 
சும்மா ஒரு ஐந்து நிமிடம் பார்க்கலாமே என்று ஆரம்பித்தால் நிறுத்தமுடியாது. பரிச்சயம் இல்லாத நடிகர்களும், கதையும், களமும், மலையும் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும்.
 
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுதான் படத்தின் முதல் நாயகன். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்ற மலையை நம்பி வாழும் மக்களின் வறண்ட வாழ்வை லெனின் பாரதி சொல்லியிருக்கும் விதமே அற்புதமானது.
 
படத்தின் பின்னணி இசை மொத்தமே ஐந்து நிமிடம் இருந்தால் ஆச்சர்யம்தான்.
 
பூச்சிகள், பறவைகளின் ஒலிகள், இலைகளின் சரசரப்புகள், நீரின் சலசலப்புகள் என்று இயற்கையின் இசை மட்டுமே பெரும்பாலும் வியாபித்து இருக்கும்.
 
எப்போதெல்லாம் கேமரா கழுகுப் பார்வை கோணத்தில் சென்று மேலிருந்து நிலத்தைக் காண்பிக்கிறதோ அங்கு மட்டுமே இசையைத் தருகிறார் ராஜா!
 
அவ்வளவு உயரத்தில் இயற்கையின் ஒலிகளைக் கேட்கமுடியாத போது ராஜாவின் இசை வந்து நிரப்புகிறது.
 
ஏதோ ஒரு திரைப்படம் பார்க்கிறோம், நாயகன் நாயகி இருக்கிறார்கள் என்றெல்லாம் தோன்றவே இல்லை.
 
ஒரு வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஒரு துண்டு நிலம் வாங்கத் துடிக்கும் இளைஞனின் வேட்கையைப் பார்க்கிறோம்!
 
நிலம் வாங்க எல்லாம் கூடிவருகையில் கைவிட்டுப் போய்விடும் துயரைப் பார்க்கிறோம்.
 
அவனைச் சுற்றி நடைபெறும் கதையில் கதைமாந்தர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.
 
அந்தக் கதைகளின் ஊடாகத்தான் படம் பயணிக்கிறது.
 
நேர்மையான படைப்பு!
 
லெனின் பாரதி மிகச் சிறந்த இயக்குநர்!