Take a fresh look at your lifestyle.

என்னை நல்லவனாக்கியது சினிமா தான்!

இயக்குநர் செல்வமணி செல்வராஜ்

116

ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரபலங்களின் பேச்சுக்களிலிருந்து சில:

இயக்குநர் செல்வமணி:

சிறுவயதில் இருந்தே சினிமா பார்க்க ரொம்பப் பிடிக்கும். எந்தப் புத்தகமும் தனி மனிதனும் சொல்லித் தராத பல விஷயங்களை சினிமா சொல்லித்தந்தது. நேற்று இருந்ததை விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என சொல்லித் தந்தது இந்த சினிமாதான்.

சினிமா நான் விருப்பப்பட்டு பற்றிக் கொண்ட ஆசான். அதனால் என்னுடைய முதல் படமே சினிமா பற்றியதாக எடுத்துக் கொண்டேன்.

1950களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் இவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன்.

என்னைவிட இன்னும் அதிகம் சினிமாவை நேசித்த ஒரு அணி இருந்ததால்தான் என்னால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது.

2016-ல் நான் எழுதிய இந்தக் கதையை 2019-ல் ராணாவிடம் சொன்னேன். அவருக்கு உடனே பிடித்துவிட்டது. அவர் என் கதையை நம்பியதால்தான் ‘காந்தா’ ஆரம்பிக்க முடிந்தது.

ராணாவும் துல்கரும் என் போன்ற புதுமுக இயக்குநருக்கு அமைந்தது பெரிய விஷயம். அய்யா கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாக்கியஸ்ரீ தமிழைக் கற்றுக் கொண்டு சின்சியராக நடித்துள்ளார்.

நடிகர் சமுத்திரக்கனி:

என்னுடைய சினிமா பயணத்தையே ‘காந்தா’ படத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். ‘சுப்ரமணியபுரம்’ டிரெய்லர் வெளியாவதற்கு முன்னால் எனக்கு காய்ச்சல் வருவது மாதிரி இருந்தது. அதேபோன்ற உணர்வு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பும் இருந்தது.

சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற படங்களில் நான் இருப்பது பெருமை.

என் பிள்ளை மகாதேவன், குமாரி, என் தம்பி ராணா, செல்வாவுடன் பயணப்பட்டது பெருமை.

துல்கரின் மகாதேவன் என்ற கதாபாத்திர பெயரை உச்சரிக்கும்போதே எனக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்தப் படைப்பு எங்களை இயக்கியது. சினிமா மாறிக்கொண்டிருப்பதை ‘காந்தா’வில் உணர்ந்தேன்.

இயக்குநர் செல்வா பெரிய இடத்திற்குப் போவார். துல்கர் சிறப்பாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். நல்ல படைப்பில் இருக்க வேண்டும் என்பது ராணாவின் எண்ணம்.  படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்”.

நடிகை பாக்கியஸ்ரீ:

புதுமுகமான என்னை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி.

துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும் அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதட்டம் இருந்தது.

ஆனால், எனக்கு முழு ஆதரவு கொடுத்தார்.

என்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்த ராணாவுக்கு நன்றி.

‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை.

நடிகர் ராணா:

“சிறுவயதில் சினிமா பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்தப் படம் மூலம் நேரில் இயக்குநர் செல்வா என்னைப் பார்க்க வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு பாக்கியஸ்ரீயை வரவேற்கிறேன். சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். துல்கர் நடிப்பு சக்ரவர்த்தியாக இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். .

நடிகர் துல்கர் சல்மான்:

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாகக் காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும்.

‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்கியஸ்ரீ நடித்திருக்கிறார்.

ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார்.

டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார்.

கலை இயக்குநர் ராமலிங்கம்:

தமிழில் தொடர்ச்சியாக பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன்.

சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா.

மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன்.

சினிமாவைக் காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தேவையான சுதந்திரம் கொடுக்கும்போதுதான் அந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது.

அந்த வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி.