தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் தோன்ற தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் பாபி சிம்ஹா.
ஆந்திராவைச் சேர்ந்த பாபி சிம்ஹா, குடும்பத்தினருடன் 25 ஆண்டுகளுக்கு முன்பே கொடைக்கானலில் செட்டிலாகியுள்ளனர்.
கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்த பாபி சிம்ஹா, நடிகராகும் முயற்சியில் சென்னை வந்துள்ளார்.
ஒருபுறம் வேலை செய்துகொண்டே வாய்ப்புகளைத் தேடி வந்த பாபி சிம்ஹா பல குறும்படங்களில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்கள் இயக்கம் என்பது ட்ரெண்டாகி இருந்தது.
இயக்குநர் நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், அல்போன்ஸ் புத்திரன் உள்பட பலரும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி, சினிமா இயக்குநர்கள் ஆனார்கள். அவர்களைப் போல் பாபி சிம்ஹாவும் தனது நடிப்பால் கவனத்தை ஈர்த்தார்.
பாலாஜி மோகன் இயக்கிய ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற குறும்படத்தில் தோன்றினார் பாபி. பின்னர் அதே தலைப்பில் முழு நீளப் படமாக உருவானபோது அதிலும் நடித்தார்.
அதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜின் பீட்சா, நலன் குமாரசாமியின் சூது கவ்வும் என நடித்த இவர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் காமிக்கல் வில்லனாக காமெடி கலந்து வில்லத்தனத்தில் மிரட்டினார்.
இதன் விளைவாக கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற ரவுடி கதாபாத்திரத்தில் தோன்றினார்.
தனது வயதை மீறிய கதாபாத்திரத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த பாபி சிம்ஹாவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்த கதாபாத்திரம் அமைந்தது. இந்தப் படத்துக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருதையும் வென்றார்.
ஜிகர்தண்டா படத்துக்கு பின்னர் நன்கு கவனம் பெற்ற நடிகராக உருவெடுத்த பாபி சிம்ஹா, ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து, வில்லன், ஹீரோ, ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என நடித்து வரும் பாபி சிம்ஹா, கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி ஸ்கோர் செய்யும் நடிகராகவே உள்ளார்.
தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கும் இவர், வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோயினாக இருந்த ரேஷ்மி மேனனை கதாலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
ஸ்டார் தம்பதிகளாக இருக்கும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட, தெலுங்கில் சீரஞ்சிவியுடன் இணைந்து வால்பூர் வீரய்யா படங்களில் நடித்திருக்கும் இவர், கமல்ஹாசனுடன் இந்தியன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிப்பு தாண்டி தனித்துவமான குரல் அமைப்பு, டயலாக் டெலிவரி, மாடுலேஷன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் பாபி சிம்ஹாவின் படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும்.
– நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்