பூவையார், அஜய் அர்னால்டு, அர்ஜுன், சவுந்திர ராஜா, வேல ராமமூர்த்தி, வினோதினி வைத்யநாதன் நடிப்பில் ஜெயவேல் எழுதி இயக்கி இருக்கும் படம் ராம் அப்துல்லா ஆண்டனி.
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் கிளமெண்ட் சுரேஷ் தயாரித்து இருக்கிறார்.
ஒரு பிராமணத் தம்பதிக்கு (ஜாவா சுந்தரேசன் – வினோதினி வைத்தியநாதன்) மகனாகப் பிறந்த ராம் (அஜய் அர்னால்) என்ற சிறுவன்,
இஸ்லாமியரின் (தலைவாசல் விஜய்) தாயில்லா இரண்டு மகன்களில் இளைய மகன் அப்துல்லா (அர்ஜுன்),
ஒரு கிறித்தவ தம்பதிக்கு (கிச்சா ரவி – ஹரிதா) மகனாகப் பிறந்த ஆண்டனி (பூவையார்),
என இந்த மூன்று சிறுவர்களும் பள்ளிக்கூட வயதிலேயே பாட்டில்களை உடைத்து மாஞ்சா செய்கிறார்கள். போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்கள். வெட்டிப் புதைக்கிறார்கள்.
ஒரு மோசமான அரசியல்வாதி ஒருவரின் (வேல ராமமூர்த்தி) பேரனைக் கடத்துகிறார்கள்.
பொறுக்கியாக இருந்து போலீசாக மாறிய இன்ஸ்பெக்டர் (சாய் தீனா) ஒருவரை, பேரனைக் கண்டுபிடிக்க நியமிக்கிறார் அரசியல்வாதி.

இதற்கிடையில் பேரன் துண்டுத் துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமாக இருக்கிறான் என்று போலீஸ் கண்டுபிடிக்கிறது.
அந்த சாக்குப் பை ராமின் வீட்டில் இருந்து போனது தெரிகிறது.
விசாரணையைத் தொடர்ந்து மூன்று சிறுவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.
அவர்களை வெட்டிக் கொல்ல இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடுகிறார் அரசியல்வாதி.
சீர்திருத்தப் பள்ளியில் அவர்களிடம் வம்பு இழுக்கும் ரவுடி சிறுமிகள், சிறுவர்களை இந்த மூன்று சிறுவர்களும் ஓடவிட்டு உதைக்கிறார்கள்.
இந்நிலையில் ராம் மட்டும் குற்றத்தை நேரடியாக செய்யவில்லை என்று முடிவாகி விடுதலை செய்யப்படுகிறான்.
மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் போட்டியில் 1330 குறள்களையும் தலைகீழாக சொல்லி முதல் பரிசு பெறுகிறான் அவன்.
அவனை மேற்கொண்டு தன் பள்ளியில் படிக்க வைக்க விரும்பும் தனியார் பள்ளித் தாளாளர் ஒருவர் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்.
அவரிடம் ராம், “நான் உங்கள் பள்ளியில் சேர வேண்டுமானால் குற்றவாளியாக இருக்கும் தனது நண்பர்கள், தான் போட்டியில் வென்றதற்காகப் பரிசு பெறும் விழாவுக்கு வரவேண்டும்’’ என்கிறான்.
தனியார் பள்ளித் தாளாளர் அவரது பண பலத்தை வைத்துக் குற்றவாளியாக இருக்கும் அப்துல், ஆண்டனி இருவரையும் விழாவுக்கு வர வைக்க, அங்கே கலெக்டரிடம் ராமும் அப்துல்லாவும் ஆண்டனியும் சொல்லும் விஷயங்கள் முற்றிலும் வேறானவை.
நடந்தது என்ன? சிறுவயது முதலே திருக்குறள் மீது காதல் கொண்ட ராம், அப்பாவுக்கு எப்போதும் உதவும் அப்துல்லா, குடிகார அப்பனிடம் இருந்து நோயாளி அம்மாவைக் காப்பாற்றும் ஆன்டனி ஆகியோர் ஏன் இப்படி மாறினார்கள்? நடந்தது என்ன? என்பதே இந்த ராம் அப்துல் ஆண்டனி.

காட்சிகளை அடுத்தடுத்து அடுக்கி, சுமாரான படமாக்கல் காட்சிகளோடு கொண்டு போகிறது படம்.
படத்தின் பெயரில் ஒரு சுவாரசியம் உண்டு. பாலுமகேந்திரா அப்துல் ராமன் என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார்.
அப்போது இஸ்லாமியர்கள் எல்லோரும் பாலுமகேந்திராவிடம் போய், “அப்துல் என்றால் அடிமை என்று பொருள். அப்துல் ராமன் என்றால் ராமருக்கு அப்துல் அடிமை என்று பொருள் வரும். அப்துல்லா என்றால் இறைவனுக்கு அடிமை என்று பொருள்” என்று சொல்ல, பெருந்தன்மையோடு ராமன் அப்துல்லா என்று படத்தின் பெயரை மாற்றிக் கொண்டார் பாலு மகேந்திரா.
ஆனால், இந்தப் படத்தில் ராம் அப்துல்லா ஆண்டனி என்று வருகிறது. எனில் ஆண்டனிக்கு அப்துல் அடிமை என்று பொருள் வருகிறது.
ஆனால் இதற்கு ஏன் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, அப்துல் முன்பு ராமன் இருந்தால்தான் பிரச்னையா?.
இல்லை, ஆண்டனி இருந்தால் தப்பில்லையா என்ற கேள்வி வருகிறது. ஒருவேளை சென்சார் போர்டு பின்னால் இருக்கும் இன்றைய அரசியல், மாற்ற முடியாது என்று சொன்னதா? தெரியவில்லை.
சிறுவர்கள் ஆரம்பக் காட்சிகளில் செய்யும் காட்சிகள் பகீர்.
அப்துல்லாவின் பெரிய மகன் கத்தியில் கயிறு சுற்றத் தெரியாமல் முழிக்க, இளைய மகன் அப்துல்லா சர்வ சாதரணமாக கத்தியைக் கையாண்டு கயிறு சுற்றுவதைப் பார்த்து அப்துல்லா ஷாக் ஆவது சிறப்பான காட்சி
எப்போதும் காலியாக இருக்கும் லாக்கப் ரூமில் இருந்து வேலைகளைப் பார்க்கும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சாய் தீனா பாராட்டுப் பெறுகிறார்.
ஆண்டனி அம்மாவின் பிளாஷ்பேக் நெகிழ்ச்சி. கிளைமாக்ஸ் உருக்கம்.

சிறுவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் எனும் காரணம் ஓகேதான்.
எனினும், சிறுவர்கள் நல்லவர்கள், ஒரு நல்ல நோக்கத்துக்குத்தான் அப்படி செய்கிறார்கள், எனில் அதற்குப் பொருத்தமாக அவர்கள் ஆரம்பத்தில் செய்யும் காட்சிகள் இருக்க வேண்டும்.
ஒரு நல்லவன், சந்தர்ப்பவசத்தால் திருடன் என்று சொல்வதற்கும், அவன் மோசமான திருடன். ஆனால் அதற்குக் காரணம் இருக்கு என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு.
இதில் சிறுவர்களை அவ்வளவு மோசமாகக் காட்டிவிட்டு அப்புறம் ரொம்ப நல்லவர்கள் என்பது ஏற்கும்படி இல்லை.
இந்தக் கதைக்கு ஏற்ற படமாக்கல் இல்லை. சாதாரணமாக காட்சிகள் நகர்கிறது.
இன்னும் கொஞ்சம் ஆளுமை, தொழில்நுட்பம், கேரக்டர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் மூன்று மத ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் இந்தப் படம்.
எனினும் புகைப்பழக்கத்துக்கு எதிரான இந்தப் படத்தின் தீவிரத் தன்மை பாராட்டுக்குரிய ஒன்று.
– சு. செந்தில் குமரன்