‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், வெளி நாடுகளுக்கு அடிக்கடி பறந்து வருகிறார்.
சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று, வெற்றிகள் குவித்து வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை ஆரம்பித்துள்ளார்.
இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.
துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அஜித் ரேஸிங் அணி, பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் அண்மையில் கலந்து கொண்டது.
இந்த புகைப்படங்களும், அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களும் அவ்வப்போது அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவால் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோக்கள் அஜித், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தற்காலிமாக சினிமாவை மறந்து விட்டாலும், அவ்வப்போது சென்னை வந்து தன் குடும்பத்தினரைச் சந்தித்து செல்கின்றார்.
சமீபத்தில் அஜித், தன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றார்.
குடும்பத்துடன், அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தார். காணிக்கை செலுத்தினார். ரசிகர்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் தன் நெஞ்சில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.
கடவுள் படம் போல தோற்றமளிக்கும் அது உண்மையான டாட்டூ தானா? அல்லது அடுத்த படத்துக்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த டாட்டூ குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த டாட்டூ, ஒட்டுகுலங்க பகவதி அம்மனின் டாட்டூ என தெரிய வந்துள்ளது.
அஜித், இப்போது ஆன்மீகவாதியாகி விட்டார் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
– பாப்பாங்குளம் பாரதி