பாலிவுட் பாட்ஷாவாக இருந்துகொண்டே, பாலிவுட்டை படு தில்லாக கிண்டலடிக்கும் Ba***ds of Bollywood என்ற வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார் ஷாரூக் கான்.
பாலிவுட் ஸ்டார்களின் வாரிசுகளை விமர்சிக்கும் இந்த தொடரை, இயக்கியிருப்பது ஷாரூக்கின் மகன் ஆர்யான் கான்.
7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் தொடரின் கதை சிறியதுதான்…
டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்து, முதல் படத்திலேயே ஸ்டார் ஆகிறார் நாயகன் ஆஸ்மான் சிங். அந்த படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் நடிக்காமல், கரண் ஜோஹரின் காதல் படத்தில் நடிக்கச் செல்கிறார் ஆஸ்மான்.
அதனால் ஆஸ்மானின் சினிமா வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறார் அந்த தயாரிப்பாளர்.
அதே நேரத்தில் கரண் ஜோஹரின் படத்தில் நாயகியாக பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகள் நடிக்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது.
ஆஸ்மான் சிங் தன் மகளை காதலிப்பது சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கவில்லை. நாயகனை திரையுலகில் இருந்தே விரட்ட நினைக்கிறார். அதற்காக அவனது முதல் பட தயாரிப்பாளருடன் கைகோர்க்கிறார்.
இருவரும் சேர்ந்து ஹீரோவை பாலிவுட்டில் இருந்து விரட்டினார்களா என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை.
இதில் கரண் ஜோஹராக அவரே நடிக்கிறார். சூப்பர் ஸ்டாராக பாபி தியோல் நடிக்கும் இந்த வெப் தொடரில்
சல்மான் கான், ஷாரூக் கான், ஆமிர் கான், ரன்பீர் கபூர், எஸ்.எஸ்.ராஜமவுலி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தன் அப்பாவின் நண்பர்கள் அனைவரையும் வெப் தொடரில் நடிக்கவைத்த ஆர்யான் கான், அவர்களை போற்றும்படியான காட்சிகளை வைக்காமல், கிண்டலடிக்கும் காட்சிகளை அவர்களை வைத்தே எடுத்திருப்பதுதான் இந்த வெப் தொடரின் பிளஸ் பாயிண்ட்.
உதாரணமாக சூப்பர் ஸ்டார் நடத்தும் விருந்துக்கு வரும் சல்மான்கான், வெளியில் அவருக்கு நண்பராக காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவரைப் பார்த்து பொறாமைப்படும் நடிகராக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு இசையமைப்பாளர் தன்னை மதிக்கவில்லை என்பதால் ப்ளே லிஸ்டில் இருந்து அவரது பாடலை நீக்கச் சொல்லும் கோபக்கார ஹீரோவாக ஷாரூக் வந்து போகிறார்.
ராஜமவுலியின் படத்தில் நடிப்பதற்காக, ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்த தயாரிப்பாளரிடம் கால் உடைந்ததுபோல் நடிக்கும் ஹீரோவாக ரன்பீர் கபூர் வருகிறார்.
ஆமிர்கானும், ராஜமவுலியும் தீவிரமாக விவாதம் நடத்திக்கொண்டு இருக்க, அவர்கள் படத்தைப் பற்றி விவாதிப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அருகில் சென்று பார்த்த பிறகே அவர்கள் சாப்பிட ருசியாக இருப்பது இட்லியா – வடா பாவா என்று விவாதிப்பது தெரிகிறது.
இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்தையும் வைத்து பாலிவுட்டை கலாய்த்திருக்கிறார் ஆர்யான் கான்.
அத்துடன் பாலிவுட்டுக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் இடையிலான தொடர்பு, அங்கிருக்கிம் நெபோடிசம் ஆகிய விஷயங்களையும் விளக்கியுள்ளார்.
ஏழு அத்தியாங்களை கொண்ட இந்த தொடரில், முதல் 6 அத்தியாயங்களில் ஒரு பாதையில் பயணிக்கும் கதை, 7-வது அத்தியாயத்தில் யு டர்ன் அடித்து சட்டென்று வேறொரு பாதையில் செல்கிறது.
நாயகன் ஆஸ்மான் தன் மகளை காதலிப்பதை சூப்பர்ஸ்டார் எதிர்ப்பது ஏன் என்பதற்கு அதுவரை யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதற்காக அவரைப் பாராட்டலாம்.
ஷாரூக் வழியில் ஹீரோவாக நினைக்காமல், இயக்குநராகி இருக்கும் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.
எந்த டென்ஷலும் இல்லாமல் ஜாலியாக பொழுதுபோக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த வெப் தொடர் நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இத்தொடரை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர்.
– பி.எம்.சுதிர்