Take a fresh look at your lifestyle.

கிஸ் – எல்லை மீறாத காதலா..?!

54

இன்றைய சூழலில் ஜென்ஸீ தலைமுறையினருக்குத் தெரிந்த முன்னணி இளம் நாயகனாகத் திகழ்பவர் கவின். ‘லிப்ட்’, ‘டாடா’ என்று மேலேறிய அவரது கேரியர் கிராஃப் ‘ஸ்டார்’, ‘ப்ளடி பெக்கர்’ படங்களில் சற்றே சரிந்தது உண்மை.

ஆனாலும், கவின் நடிக்கிற படங்கள் வழக்கமான கமர்ஷியல் சினிமா பார்முலாவில் இருந்து விலகி நிற்கும் என்ற எண்ணம் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆதலால், அந்த திருப்தியை ரசிகர்களுக்கு வழங்கிவிட்டாலே அவரது படங்கள் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியுள்ள சதீஷ் கிருஷ்ணனின் ‘கிஸ்’ திரைப்படம், அந்த சூழலை எந்தளவுக்குப் பயன்படுத்தியுள்ளது? இப்படம் தரும் திரையனுபவம் திருப்திகரமாக உள்ளதா?

‘கிஸ்’ கதை!

தாய் டெய்ஸியும் (தேவயானி) தந்தை மார்கஸும் (ராவ் ரமேஷ்) விவாகரத்து பெற்றுப் பிரிந்ததைக் காணும் மூத்த மகன் நெல்சனுக்கு (கவின்), காதல் மீதான நம்பிக்கை அற்றுப் போகிறது.

காதலர்கள் என்றவுடனேயே அந்த ஜோடியைப் பிரிக்க நினைக்கிற அளவுக்கு நெல்சன் மனம் ‘காதல்’ என்ற வார்த்தைக்காகக் கொதிக்கிறது.

இந்த நிலையில், தற்செயலாகப் பூங்காவில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார் நெல்சன். அந்தப் பெண் ஒரு குறிப்பேட்டை அவரது கையில் கொடுத்துவிட்டு, ‘உங்களோடதுதான்’ என்கிறார்.

அவர் சொல்லிவிட்டுச் சென்றபிறகே, அந்த குறிப்பேடு தன்னுடையதில்லை என உணர்கிறார் நெல்சன். ஆனால், அவரால் அதனை அப்பெண்ணிடம் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

அது கைக்கு வந்தபிறகு, வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொள்கிறார் நெல்சன். ஏதாவது ஒரு ஜோடி முத்தமிடுவதைப் பார்த்தவுடன், அவர்களது காதல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அவரால் உணர முடிகிறது. அவற்றில் பல ‘அதிர்ச்சி’ தரும் ரகம்.

இதனைத் தனது நண்பன் சாமிநாதனிடம் (ஆர்ஜே விஜய்) சொல்கிறார். முதலில் அவர் நம்ப மறுக்கிறார்.

இரண்டு, மூன்று உதாரணங்களை நெல்சன் நேரில் காண்பித்தவுடன் நம்பத் தொடங்குகிறார்.

பிறகு, உளவியல் மருத்துவராக இருக்கும் சாமிநாதனின் தந்தையைச் (விடிவி கணேஷ்) சந்திக்கிறார் நெல்சன். அவர் சொல்கிற தீர்வுகள் எதுவும் பலன் அளிப்பதாக இல்லை. உடனே, “இந்த நோட்டை கொடுத்த பொண்ணை நேர்ல பாரேன்” என்கிறார் அவர்.

‘அந்தப் பெண்ணை எங்கே தேடுவது’ என்று நெல்சன் யோசிக்கிறபோது, அந்தப் பெண் இருக்கிற இடம் தானாகத் தெரிய வருகிறது.

அவரை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறார் நெல்சன். அந்தப் பெண்ணின் பெயர் சாரா (ப்ரீத்தி அஸ்ரானி).

மிகச்சில நாட்களிலேயே நெல்சன் மீது சாரா காதல் கொள்ளத் தொடங்குகிறார். அதனை அவரிடம் தெரிவிக்க முடியாமல் தவிக்கிறார்.

நெல்சனோ, தான் வைத்திருக்கும் புத்தகம் பற்றி அவரிடம் சொல்லத் துடிக்கிறார்.

இந்த நிலையில், மெதுமெதுவாக இருவருக்குள்ளும் ‘காதல் தீ’ பற்றுகிறது.

ஒருநாள், இருவரும் தங்களையும் அறியாமல் முத்தமிட்டுக் கொள்கிற சூழல் உருவாகிறது. அப்போது, சாராவின் எதிர்காலம் குறித்த அதிர்ச்சிகரமான விஷயம் நெல்சனுக்குத் தெரிய வருகிறது.

அதன்பின் என்ன ஆனது? காதல் மீதான நெல்சனின் வெறுப்பு சரியானதா? நெல்சன் – சாரா ஜோடி ஒன்றாகச் சேர்ந்ததா என்று சொல்கிறது ‘கிஸ்’ படத்தின் மீதி.

பட்டை தீட்டியிருக்கலாம்..!

திரையில் ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரியான ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம்களோடு வருவது முதல் அவர்கள் கைத்தட்டலுக்கு ஏற்றவாறு ஷாட்களையும் வசனங்களையும் தனது நடிப்பால் அலங்கரிப்பது வரை அனைத்தையும் கனகச்சிதமாக வெளிப்படுத்துகிறார் கவின்.

வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து இப்படத்தின் காட்சியமைப்பு சிறிதே விலகி நிற்பது அவரது ரசிகர்களை ஆறுதல்படுத்தும்.

நாயகி ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் சட்டென்று ‘பர்ஸ்ட் கிளாஸ்’ பெற்றுவிடுகிறார். ஆனால், ‘அபாரம்’ என்று அவரைப் பாராட்டவிடாமல் தடுக்கிறது ஒப்பனை, சட்டென்று பெருத்த உடல்வாகு மற்றும் இத்யாதி விஷயங்கள்.

அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், இது போன்ற காதல் படங்களைக் காலம்காலமாக ரசிகர்கள் கொண்டாட அந்த விஷயங்கள் கெட்டியாக இருப்பது அவசியம்.

இந்தப் படத்தில் ஆர்ஜே விஜய், விடிவி கணேஷ் இருவரும் ரசிகர்களின் சிரிப்புக்கு ‘கியாரண்டி’ தருகின்றனர். அவர்களை இயக்குனர் இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

போலவே, கவின் தம்பியாக வருபவர், அவரது ஜோடியாக நடித்தவரையும் இன்னும் கொஞ்சம் திரையில் காட்டி ‘காமெடி’ செய்ய வைத்திருக்கலாம்.

ராவ் ரமேஷ், தேவயானி இதில் நாயகனின் பெற்றோராக வருகின்றனர். மிகச்சில காட்சிகளிலேயே அவர்கள் பிரிவது திரைக்கதையில் காட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் அந்தத் திருப்பத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, அந்த விவரணை போதுமானதாக இல்லை.

பிரபுவின் பாத்திரம் திடீரென்று திரையில் தோன்றுகிறது, மறைகிறது. அதனை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். இவர்கள் போக கல்யாண், கௌசல்யா உட்படச் சிலர் வந்து போகின்றனர்.

நடன வகுப்பில் வரும் பாத்திரங்களைக் கொண்டு திரைக்கதை ஓட்டத்தில் ‘பூஸ்ட்’ ஏற்றியிருக்கலாம்.

பேண்டஸியாக, காமெடியாக, செண்டிமெண்டாக சில காட்சிகளை அமைத்து, திரையனுபவத்தில் திருப்தியை ஊட்ட வாய்ப்புகள் இருந்தும், அவற்றைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன். ஆனாலும், காமெடியாக சில ‘காட்சி கோர்வை’களைச் சிறப்பாக நகர்த்தியிருப்பது ரசிகர்களை இருக்கையை விட்டு எழவிடாமல் தடுக்கிறது.

ஜென்ஸீ தலைமுறை ஜோடியொன்றை கல்யாண மண்டபத்தில் சேர்த்து வைக்கிற ‘காமெடி’ அதிலொன்று.

அது போன்றதொரு ட்ரீட்மெண்டை முன்பாதியில் நிறைத்திருந்தால், ‘கிஸ்’ சிறப்பான ‘கமர்ஷியல்’ பட அனுபவத்தைத் தந்திருக்கும்.

வசனங்களில் ‘பஞ்ச்’ பெரிதாக இல்லை. ஆனால், இயல்பாகவும் அழகாகவும் இருக்கின்றன.

குறிப்பாக விடிவி கணேஷ் பேசுகிற இடங்கள் தியேட்டரில் ‘குபீர்’ சிரிப்பை வரவழைக்கின்றன. சில வசனங்கள் ‘சென்சார்’ருக்கு ‘பெப்பே’ காட்டியிருக்கின்றன.

சதீஷ் கிருஷ்ணன் மட்டுமல்லாமல் முகில், சவரிமுத்து இருவரும் எழுத்தாக்கத்தில் பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒவ்வொரு பிரேமும் அழகாகத் தெரிவதிலும், இயக்குநர் நினைத்த காட்சியின் தன்மையைத் திரையில் உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். அதனால் படம் ‘கலர்புல்’லாக உள்ளது.

சில பிரேம்கள் ‘சினிமாட்டிக் மொமண்ட்’ தருவதில் பங்கு வகிக்கிறார் கலை இயக்குனர் மோகன மகேந்திரன்.

படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரனவ் தனது கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை தந்திருக்கலாம். ‘ரொமான்ஸ் ட்ராமா’ வகைமை படத்தில் நிதானம் தேவை என்ற எண்ணம், சில இடங்களில் நீளத்தை அதிகமாக்கியிருக்கிறது.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் ‘ஜென்ஸீ’ கிட்ஸ்களுக்குப் பிடித்த வகையில் இருக்கின்றன. மெலடி மெட்டுகள் அதற்கு முந்தைய தலைமுறையினரை ஈர்க்கலாம்.

அதேநேரத்தில் பின்னணி இசை வழியே காட்சிகளின் தன்மையை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் ஜென் மார்ட்டின்.

இது போகச் சில தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இதில் சிறப்பாக உள்ளது.

படத்தின் பட்ஜெட் குறைவுதான் என்பதை கிளைமேக்ஸில் வருகிற விஎஃப்எக்ஸ் உணர்த்தி விடுகிறது.

‘கிஸ்’ என்ற தலைப்பைக் கேட்டவுடனேயே, படம் ‘ஏ’ ரகம் என்ற முடிவுக்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால், தொடக்கம் முதல் இறுதி வரை அப்படியொரு எண்ணம் கிஞ்சித்தும் வந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் அக்கறை காட்டியிருப்பதைத் தனியே பாராட்ட வேண்டும்.

படத்தில் முத்தக் காட்சிகள் இருந்தபோதும், நாயக பாத்திரத்தின் மனநிலையிலேயே அதனை நோக்க வைத்திருப்பது உண்மையில் சிறப்பான விஷயம். அந்த வகையில் ‘எல்லை மீறாத காதல்’ இதிலிருக்கிறது.

வெட்ட வெளியில் பட்டப்பகலில் ஓட்டப்பந்தயத்தில் வெறி கொண்டு ஓடுவது போன்று ஒருகாலத்தில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டதுண்டு. அதில் நிறைய ‘ஜம்ப்’கள் இருந்தாலும், ‘சினிமான்னா அப்படித்தான்’ என்று எதிர்க்குரல்களை முடக்கிவிடுகிற வழக்கமும் இருந்தது.

தற்போது, சில மனிதர்களின் வாழ்க்கையை நேரில் பார்க்கிற மனநிலை தியேட்டருக்கு வருகிற ரசிகர்களைத் தொற்றிவிட்டது. அதனால், ஆங்காங்கே ஓட்டத்தைத் தளர்த்தி, சுணங்கி, தண்ணீர் குடித்து திரைக்கதை இளைப்பாறிக் கொண்டாலும் பெரிய குற்றமாகக் கருதப்படுவதில்லை.

என்ன, அந்த காலவெளி அதிகமாகும்போது அதுவரை திரைக்கதையால் கட்டப்பட்ட கோட்டை சரிந்துவிழுகிற அபாயமும் உள்ளது. அப்படிச் சரிகிற அபாயத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ எதிர்கொண்டிருக்கிறது ‘கிஸ்’.

கொஞ்சம் முயன்றிருந்தால், மெனக்கெட்டிருந்தால், இந்த கதையைப் பட்டை தீட்டி மேலும் மெருகேற்றியிருக்கலாம். பல ரசிகர்கள் நினைவில் கொள்ளத்தக்க ‘ரொமான்ஸ்’ படமாகவும் ஆக்கியிருக்கலாம்.

இப்போதுள்ள வடிவம் அந்த எண்ணிக்கையை விஸ்வரூபமெடுக்கச் செய்யும் வகையில் இல்லை என்பது இப்படத்தின் மிகப்பெரிய குறை..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்