தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான்.
அதற்காக அவர் அப்படியே பளபளக்கும் சிவந்த மேனி கொண்டவர் என்ற கற்பனைக்கெல்லாம் சென்றுவிட வேண்டாம். அவர் கருப்பு நிறத்தைக் கொண்டவர்தான். ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் அவருக்கு கனவுக் கன்னி பட்டம் கிடைத்தது அவர் அழகால்.
தஞ்சாவூர் இராதாகிருஷ்ணன் ராஜாயி என்ற பெயர் கொண்ட அவர், சினிமாவுக்காக ராஜகுமாரி ஆனார். இவரின் அத்தை எஸ்.பி.எல்.தனலட்சுமி சினிமாவில் அப்போது நடித்துக் கொண்டிருந்தார்.
அவர் மூலமாக சினிமா வாய்ப்பு தேடிய ராஜாயிக்கு முதலில் கிடைத்தது அவமானங்கள். காரணம் அவர் கருப்பாக இருந்தார் என்பதால். ஆனால், அதே கருப்புதான் ஒரு காலகட்டத்தில் கனவுக் கன்னியாக மாறப்போகிறது என்பது அப்போது அவரை நிராகரித்தவர்களுக்குத் தெரியாது.
பிறகு தனலட்சுமியை ஒரு படத்திற்காக ஒப்பந்தம் செய்ய சென்றிருந்த அப்போதைய பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம், அவருக்கு காபி கொண்டு வந்த கருப்பு நிறம் கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தார்.
இவர் யார் என்று கேட்க, நடிப்பதற்காக வாய்ப்புக் கேட்ட கதையைச் சொன்னார் தனலட்சுமி. பிறகு, கேமராவில் இவர் வேறொரு அழகாகத் தெரிவார் என்பதை கணித்த இயக்குநர் கே.சுப்பிரமணியம், ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எடுத்தார்கள்.
நினைத்த மாதிரி அந்த மேக்கப் டெஸ்ட் புகைப்படங்களில், மயக்கும் லுக்கில் இருந்தார் ராஜாயி. பிறகு அவர் பெயரை ராஜகுமாரியாக்கி, தான் தயாரித்து, இயக்கிய ‘கச்ச தேவயானி’ படத்தில் ஹீரோயின் ஆக்கினார் அவரை.
படம் வெளியாகி முதல் இரண்டு மூன்று நாட்கள் சுமாராக போக, அடுத்தடுத்த நாட்களில் படம் பிக்கப் ஆனது. அப்போது ரசிகர்கள் பேசிய விஷயம், ராஜகுமாரி என்ன அழகா இருக்கிறா? என்பது.
கே.சுப்பிரமணியத்தின் கணிப்பு சரியானதுதான் என்பதை, அவரை நிகாரித்தவர்கள் பிறகு ஒப்புக்கொண்டார்கள்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, 1943-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘ஹரிதாஸ்’ படத்தில் ஹீரோ பாகவதரை மயக்கும் தாசியாக நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தவர்.
“மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற பாடலுக்கு ராஜகுமாரி ஆடிய நடனம் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
சில படங்களை தனது சகோதரரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணாவுடன் இணைந்து தயாரித்தார். அதில் ஒன்று அன்றைய சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி,ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி.
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ராஜகுமாரி, சென்னை தி.நகரில் அவர் பெயரில் தியேட்டர் ஒன்றை கட்டினார். நடிகை ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் அதுதான்.
– அலாவுதீன்