Take a fresh look at your lifestyle.

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. – ‘ஆட்டோகிராஃப்’ நினைவுகள்!

ஒவ்வொரு மனிதருக்கும் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், நினைவில் நிற்பவர்கள், மறதியோட்டத்தில் கலந்தவர்கள், நன்றியுணர்வை வெளிப்படுத்தத் தகுதியானவர்கள், மனதை ரணமாக்கியவர்கள் என்று பட்டியலிடும் அளவுக்குச் சில வாழ்வனுபங்கள் இருக்கும்.

சில காலம் கழித்து, அந்தப் பட்டியலைத் தூசி தட்டினால் அனைவருமே மனதுக்கு நெருக்கமானவர்களாகத் தெரிவார்கள்.

அதுநாள்வரை நாம் அவமானமாகவும் எரிச்சலாகவும் ஆத்திரமாகவும் உணர்ந்த தருணங்கள் நம்மைப் பண்படுத்தச் செய்தனவாகத் தெரியும்.

அப்படி பின்னோக்கித் திரும்பிப் பார்த்து ஆசுவாசப்படுவதற்கான அவகாசத்தைச் சில திரைப்படங்களும் வழங்கும். அப்படிப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் முதன்மையானதாகத் திகழ்வது இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’.

‘எ பிலிம் பை’ என்று ஒரு இயக்குநர் தனது பெயரை இடுவதற்கு மிகச்சரியானதொரு திரைப்படம் அது.

சேரன் நாயகனாக நடித்த இப்படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா, இளவரசு, ராஜேஷ், விஜயா சிங், பெஞ்சமின், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாடல்களுக்கு பரத்வாய் இசையமைக்க, சபேஷ் – முரளி பின்னணி இசையைக் கையாண்டிருந்தனர். ரவிவர்மன், விஜய் மில்டன், துவாரகாநாத், ஷங்கி மகேந்திரன் ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்கள் இதன் திரைக்கதையில் வரும் நான்கு பாகங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

எஸ். சதீஷ், ஜே.என். ஹர்ஷா இருவரும் இதன் படத்தொகுப்பு பணிகளைக் கையாண்டிருந்தனர்.

இன்றோடு இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகின்றன.

மலரும் நினைவுகள்!

‘ஆட்டோகிராஃப்’ வெளியான காலத்தில், அதனைப் பார்த்த ரசிகர்களில் எத்தனை பேர் காதலர்களாகவும் காதலிகளாகவும் இருந்தார்கள் என்பது தெரியாது.

ஆனால், இதனைப் பார்த்தவர்களில் பலர் ‘நாமும் காதலிக்க வேண்டும், காதலிக்கப்பட வேண்டும்’ என்று நினைத்தனர் என்று உறுதிபடச் சொல்லலாம்.

காரணம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டபோது இப்படம் ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது. ஒவ்வொரு முறை காணும்போதும் ‘மலரும் நினைவுகள்’ நோக்கி மனதை மடை மாற்றக்கூடியது.

திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்கிற ஒரு இளைஞன், தான் காதலித்த, நட்பு பாராட்டிய மூன்று பெண்களை நேரில் சந்திக்கப் பயணிப்பதுதான் ‘ஆட்டோகிராஃப்’ திரைக்கதை.

அதனூடே கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதும், நிகழ்கால உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுவதுமாகச் செல்லும் திரைக்கதை, கிளைமேக்ஸில் ‘சுபம்’ என்று முடிவடையும். இயக்குநரும் நாயகனுமான சேரன் அனைவருக்கும் ‘வணக்கம்’ சொல்லி விடையனுப்பி வைப்பார்.

இந்தக் கதையில் திருப்பங்கள் ஆங்காங்கே உண்டு. ஆனாலும், அவை திரைக்கதையின் போக்கைத் திசை திருப்புகிற வகையில் ‘கமர்ஷியல் அம்சங்களோடு’ அமைந்திருக்காது.

செந்தில் எனும் மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த, அவர் எதிர்கொண்ட சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கும். அதற்கேற்ப நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

பருவ வயதில் ‘பாலியல் ரீதியிலான ஈர்ப்பு’ பற்றி செந்தில் அறிந்துகொள்வதும் அதில் நாட்டம் கொள்வதும் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும். இதில் அவர் எதிர்கொள்ளும் பெண்ணின் பெயர் கமலா.

பள்ளிப்படிப்பு முடிவடைந்ததும், செந்திலின் தந்தைக்கு கேரளாவில் பணி மாற்றம் ஆகும். அங்கு பெற்றோர் உடன் வசித்து வருவார். அங்குள்ள கல்லூரியில் பயிலும்போது லத்திகா எனும் பெண் மீது காதல் கொள்வார்.

    

அதனை அவரிடம் நேரில் தெரிவிப்பார். இருவரும் உயிருக்குயிராகக் காதலிப்பார்கள். ஆனால், அப்பெண்ணின் வீட்டார் அவரை வேறொரு நபருக்குத் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பார் செந்தில்.

தந்தையும் தாயும் முதுமையால் தளரும் நிலையில், வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொள்வார் செந்தில்.

அப்போது, அவரது படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை எது என்பதில் குழப்பம் சூளும். திவ்யா என்றொரு பெண் அதனைத் தீர்ப்பார்.

‘உங்களது சுயம் இதுதான்’ என்று செந்திலுக்கு உணர்த்துவார்.

மூன்று பருவங்களைக் கடந்து, முப்பதுகளில் ஓரளவுக்கு வசதியான வாழ்வை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பார் செந்தில்.

இனி தனக்கேற்ற வாழ்க்கைத்துணை வேண்டும் என்று எண்ணிய தருணத்தில், திருமணம் முடிவாகும். தேன்மொழி என்ற பெண் உடன் திருமணம் நடந்து முடியும்.

அந்த வைபவத்தில் கமலா, லத்திகா, திவ்யா ஆகிய மூன்று பெண்களும் கலந்துகொள்வார்கள். தேன்மொழி உடன் இருக்கும் செந்திலை வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.

அவர்களது வருகைக்கு மட்டுமல்லாமல், தன் வாழ்வில் அவர்கள் வந்து போனதற்கும் நன்றி தெரிவிக்கும் பாவனையில் நிறைவான முகத்துடன் செந்தில் இருப்பதாகப் படம் முடிவடையும்.

சில மாற்றங்கள்!

‘ஆட்டோகிராஃப்’ பட கிளைமேக்ஸில் வருவது போன்ற அனுபவங்களை யதார்த்த வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் பெற முடியுமா என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால், அதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதை வலுவாக உணர்த்திய பங்கு இப்படத்திற்கு உண்டு எனச் சொல்லலாம்.

ஆட்டோகிராஃப் வெளியாவதற்கு முன்னர், இது போன்ற சூழலைச் சிலர் நிஜ வாழ்வில் கடந்து வந்திருக்கலாம். ஆனால், அதனைச் செய்துபார்த்தால் என்ன’ என்று சிலரைத் தூண்டிவிட்டதில் இப்படத்திற்குப் பங்குண்டு.

‘இதேபோன்று ஒரு பெண் தன் வாழ்வில் கடந்து வந்த ஆண்களைப் பற்றிப் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா’ என்ற கேள்வியை எழுப்பவும் ‘ஆட்டோகிராஃப்’ காரணமானது. அந்த தொனியில் அமைந்த கதைகள் தென்னிந்திய மொழிகளில் உருவாக அடித்தளம் இட்டிருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்களை உடல் ரீதியாகக் கிண்டலடிக்கும் மாணவர்கள், பின்னாட்களில் அதே போன்று அவஸ்தைப்படுவதைக் கோடிட்டுக் காட்டியிருக்கும் இப்படம்.

மது போதையில் மூழ்கிக் கொண்டிருக்கும் மகனை இழுத்துவரத் தெரியாமல் துடிக்கும் தந்தையும் தாயும் கலங்கி நின்று பேசுவது எத்தனையோ வீடுகளில் இன்றும் நிகழ்வது.

அந்த இளைஞனை விடப் பெற்றோர் படும் துன்பம் மிகப்பெரியது என்பதை ராஜேஷ் – விஜயாசிங் தம்பதி சேரனிடம் தழுதழுத்த குரலில் பேசுகிற காட்சி நமக்குணர்த்தும்.

காதல் தோல்வியில் மது பாட்டிலை சேரன் கையில் எடுக்கிறபோது ஒலிக்கிற கைத்தட்டல்களை விட, அந்தக் காட்சியில் அதிக சத்தம் கேட்கும். அதுதான் ‘ஆட்டோகிராஃப்’ செய்த மாயம்.

‘எங்கெங்கு காணினும் மதுக்கடைகளடா’ என்றிருக்கிற இக்காலகட்டத்தில், அக்காட்சியின் தாக்கம் பார்வையாளர்களிடத்தில் எவ்வாறிருக்கும் என்றறிய ஆவலாக இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ‘மிக கமர்ஷியலான அம்சமுள்ள காட்சி’ ஒன்று உண்டு.

‘மனசுக்குள்ள தாகம் வந்துச்சா’ பாடலில் சேரன் குரலுக்குப் பதில் சொல்லும்விதமாக, ‘வந்தல்லோ.. வந்தல்லோ..’ என்று கோபிகாவின் குரல் ஒலிக்கும்.

பாடலின் முடிவில், ’மனசினுள்ளில் தாகம் வந்தில்லே..’ என்று மலையாளத்தில் ஆண் குரல் ஒலிக்க, ‘வந்துச்சு.. வந்துச்சு..’ என்று பெண்குரல் தமிழில் தொடரும். ‘காதல் வந்தபின் இதயங்கள் இடம் மாறிக்கொண்டன’ என்று சூசகமாகச் சொல்லும் அந்த மாற்றம்.

இப்படி கமர்ஷியல் சினிமா ரசிகர்களும் கலையம்சங்களை ரசிப்பவர்களும் ஒருசேரக் காணும் திரைப்படமாக அமைந்தது ‘ஆட்டோகிராஃப்’. திரையுலகில் ‘எல்லாமே அமையறதுதான்’ என்ற வார்த்தை ரொம்பவே பிரபலம்.

அந்த வகையில், ஒரு கிளாசிக் சினிமா தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் என்பதாக இப்படத்தில் எல்லாமே தானாக அமைந்தன.

விஜய், விக்ரம், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், அரவிந்த்சுவாமி உட்பட எத்தனையோ நாயக நடிகர்களால் நடிக்க முடியாமல் போன படம் இது. அதற்குப் பின் எத்தனையோ காரணங்கள். அவர்களில் யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் சாதாரணப்படமாகத்தான் அமைந்திருக்கும் என்பது எனது அனுமானம்.

சேரன் என்ற இயக்குநர் தான் எதிர்கொண்ட பொருளாதாரக் கஷ்டங்களுக்கு நடுவில் சிறப்பானதைத் திரையில் தந்துவிட வேண்டும் என்று மெனக்கெட்டதற்கான பலன் தான் இப்படத்தின் வெற்றி.

சரணாகதி அடையும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மனதாரச் செய்கிற ஒரு பணி, அதற்கான பலன்களை கேட்காமலே அள்ளித்தரும் என்பதற்கு ஓர் உதாரணம் ‘ஆட்டோகிராஃப்’.

21 ஆண்டு காலத்திற்குப்பிறகு இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதையொட்டி, செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ நுட்பத்தில் அமைந்த ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

மலையாள நடிகர் டொவினோ தாமஸ், இயக்குநர்கள் ஆர். பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், சசிகுமார், பா.ரஞ்சித், சமுத்திரக்கனி, பாண்டிராஜ், சிம்புதேவன், விஜய் மில்டன், பிரசன்னா, சினேகா, ஆரி, அனுராஜ் மனோகர் ஆகியோர் அதனைச் சமூக வலைதளமொன்றில் வெளியிட்டிருக்கின்றனர்.

‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ஆன்மா அந்த ட்ரெய்லரில் தென்படவில்லை என்றபோதும், உடனடி கவன ஈர்ப்பை அது தரும் என்பது உறுதி.

விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறபோது ‘ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..’ என்று நினைவுகளை அசை போடுகிற இன்னொரு தலைமுறையைச் சந்திப்போம்..!

-உதயசங்கரன் பாடகலிங்கம்.