திரைத் தெறிப்புகள்-24:
*
சம காலத்தின் யதார்த்தத்தை பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தைப் போல திரையிசையில் பிரதிபலித்தவர்கள் வெகு சிலர்தான்.
1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கலைவாணர் நடித்து வெளிவந்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
ஜி. ராமநாதனின் இசையமைப்பில் தனது வளமான குரலில் இப்பாடலை பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
“உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக் குணம் – காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் – ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக் குணம் – ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா“
என்று துவங்கும் பாடல் இப்படித் தொடரும்….
“பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது – எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது….”
என்றும் நகரும் பாடல் – ஊழலும், வெளிப்படையான அட்டுழியங்களும், அதிகார அத்துமீறல்களும், அதிகப்பட்டுக் கொண்டிருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும்.
“காலநிலைய மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது…”
என்று தொடரும் இந்தப் பாடல்…
“உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நாம்
உளறி என்ன? கதறி என்ன?
ஒன்றுமே நடக்கவில்லை தோழா,
ரொம்ப நாளா”
என்று நிறைவு பெறும் இந்தப் பாடல் காட்சியில் சீர்காழியின் குரலுக்கு, அழகாக வாயசைத்து நடித்திருப்பார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இந்தப் பாடலின் கடைசி வரியை தோழமை உணர்வை நன்குணர்ந்த யாருமே லேசில் மறக்க முடியாது.
மீண்டும் அந்த வரிகள்….
” நாம் உளறி என்ன?
கதறி என்ன?
ஒன்றுமே நடக்கவில்லை
தோழா –
ரொம்ப நாளா….”
இப்பாடல் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், இன்னும் இந்த வரிகள் எவ்வளவு ஜீவனுடன் இருக்கின்றன?