தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிப்பில், ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் ‘ராஜாதி ராஜா’. 1989-ம் ஆண்டு வெளியான இப்படம், மார்ச் 4 – அன்று 37 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் இந்தப் பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் இரட்டை வேட மேஜிக்
ராஜா மற்றும் சின்னராசு என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
பணக்கார எஸ்டேட் முதலாளியின் மகனாக, ஸ்டைலான ராஜா மற்றும் வெகுளியான அதே சமயம் துடிப்பான சின்னராசு என இரு வேடங்களிலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார்.
நதியா – ராதா காம்போ
அந்த காலக்கட்டத்தின் டாப் நாயகிகளான நதியா மற்றும் ராதா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
குறிப்பாக, ரஜினி – நதியா இடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பலரது ஃபேவரைட். நகைச்சுவைக்கு ஜனகராஜ் தனது பங்கினைச் சிறப்பாக பங்களித்திருப்பார்.
இளையராஜாவின் இசை அதிரடி
‘ராஜாதி ராஜா’ படத்தின் மிகப்பெரிய பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. “மீனம்மா மீனம்மா”, “வா வா மச்சானே”, “மாமா உன் பொண்ணக் குடு” போன்ற பாடல்கள் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கும். அதுமட்டுமின்றி இளையராஜா தனது பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கம்
அப்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துவந்த ஆர். சுந்தர் ராஜன் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர்கள் காம்போவில் வந்த ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் மற்றும் சாதனை
சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்த இப்படம், பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதையில் ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. 1989-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று.
– சாய் விகாஸ்
நன்றி: சினி ரிப்போர்ட்டர்ஸ்