2020 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இதனால் அந்தப் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டிருந்தார், ரஜினி. கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றினார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க, ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமயத்தின் போதே கையெழுத்து போட்டுக்கொடுத்தார் ரஜினி.
ஒரு படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியவர்.
கிரிக்கெட்டை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘லால்சலாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். ‘மொய்தீன் பாய்’ எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ‘லால் சலாம்’ திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனம், உச்ச நடிகர்கள் சினிமாக்களை விநியோகமும் செய்து வருகிறது.
பொன்னியின் செல்வன் -2, வாரிசு, துணிவு, விடுதலை ஆகிய படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிட்டது.
பொங்கல் திருநாளில் ரஜினியின் இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் மற்றொரு படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்குகிறார்.
‘தலைவர் 170’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியது.
இப்போது நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில், இந்தப் படத்திற்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
அங்கு ஷுட்டிங்கில் பங்கேற்க வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “46 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லைக்கு வருகை தந்துள்ளேன். கடைசியாக 1977-ம் ஆண்டு ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துக்காக வந்தேன்” என மலரும் நினைவுகளை ரஜினி பகிர்ந்துள்ளார்.
கழுகு பட ஷுட்டிங்கில் கலந்து கொள்ள ரஜினி 1980 ஆண்டு குற்றாலம் வந்துள்ளார். பல நாட்கள் அங்கு தான் தாங்கி இருந்தார்.
குற்றாலம் அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.