குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் ‘மக்கள் காவலன்’ அமைகிறது.
தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது.
ஆனால், ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது.
ஒருவரின் உயிர் வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது.
போராட்டம் தீவிரமடையும்போது அதன் விலையும் அதிகரிக்கிறது. இறுதியில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது.
இந்தப் படத்தில் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை – நிவாஸ் கே. பிரசன்னா. ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.
பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து பைசன் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
படத்தைப் பற்றி, நடிகர் மணிகண்டன் பேசியவை :
“மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்ஷன் டிராமா.
இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம்.
சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
எழுத்தாளரும் இயக்குநருமான சந்தோஷ் குமார் பேசியவை :
நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது.
அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது.
அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது.
இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார்.