கல்லூரி ஹாஸ்டலில் நுழையும் பாட்டியின் ஆவி!

பேய்களை வைத்து அடுத்தடுத்து காமெடி படங்களை எடுப்பது சிலகாலம் முன்பு வரை தமிழில் ஃபேஷனாக இருந்தன.

‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘முனி’ என்று பேய்களை அடிப்படையாக வைத்து வந்த படங்கள் வெற்றியும் பெற்றன. ஆனால் என்ன காரணத்தாலோ இப்போது அது குறைந்திருக்கிறது.

அதேநேரத்தில் இந்த வகைப் படங்கள் இப்போது கேரளாவில் அதிகமாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன் பேயை அடிப்படையாக வைத்து வந்த, ‘சர்வம் மாயா’ திரைப்படம் வெற்றிபெற, கிட்டத்தட்ட அதே சாயலில் பேயை வைத்து எடுக்கப்பட்டுள்ள காமெடி படமாக ‘பிரகம்பனம்’ உள்ளது.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரின் பாட்டி இறந்துவிடுகிறார். அவனது அப்பாவும் சித்தப்பாவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தீவிரமாக ஆதரிப்பவர்கள்.

அதனால் இறுதிச் சடங்கு செய்வதெல்லாம் பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கூறி மறுக்கிறார்கள்.

இதனால் பாட்டியின் அஸ்தியை கங்கைக்கு கொண்டுபோய் கரைக்குமாறு சொல்கிறார் தாத்தா.

அஸ்தியை பானையில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது என்று கூறும் பேரன், அதில் கொஞ்சத்தை தாத்தாவின் மூக்குப்பொடி டப்பாவில் எடுத்துக்கொள்கிறான்.

கல்லூரி ஹாஸ்டலுக்கு அதை கொண்டுபோவதாகவும், விடுமுறையில் கங்கைக்கு போய் கரைப்பதாகவும் சொல்கிறான்.

கல்லூரி ஹாஸ்டலில் ஒரு மாணவன் கண்ணில் அந்த மூக்குப் பொடி டப்பா படுகிறது.

மூக்குப்பொடி என்று நினைத்து அதை அவன் பாட்டியின் அஸ்தியை உறிஞ்ச, பாட்டியின் ஆவி அவனுக்குள் நுழைந்துவிடுகிறது. அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாக்கள்தான் படத்தின் கதை.

கல்லூரி தேர்தலில் போட்டியிடும் பேரன் வெற்றி பெறுவதற்காக, அவனது நண்பன் உடலில் இருந்துகொண்டு கீதையின் சாரத்தைச் சொல்லி பிரச்சாரம் செய்வது,

பொது இடத்தில் கட்டிப் பிடித்து காதலில் ஈடுபடும் இளம் ஜோடியைக் கண்டு பொங்குவது,

காதலி காதலனை கட்டி அணைக்கும்போது, அவன் பாட்டியாக மாறி காதலியைத் திட்டுவது என்று நகைச்சுவைக் காட்சிகள் இந்தப் படத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.

கடந்த ஆண்டில் வெளியான ஜோஜு ஜார்ஜின் ‘பணி’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டிய சாகர் சூர்யா, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

கட்டுப்பாடற்ற கல்லூரி ஹாஸ்டலுக்குள், தீவிர பக்தையான, கண்டிப்பான ஒரு பாட்டி நுழைந்தால் எப்படிப்பட்ட உணர்வில் இருப்பாரோ, அதே உணர்வில் பாட்டியின் ஆன்மா காட்டும் கோபங்களை காமெடியாக விவரித்திருக்கிறார் இயக்குநர் விஜேஷ் பனந்தூர்.

இதில் ஆவியாக வரும் பாட்டியாக மலையாளத்தின் முன்னணி நடிகரான பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாறன் நடித்திருக்கிறார். ஒரு ஸ்டிரிக்டான பாட்டியாக படத்தில் வாழ்ந்திருக்கிறார் மல்லிகா சுகுமாறன்.

நம்ம ஊர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோவும் இப்படத்தின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

வார இறுதியில் ரிலாக்சாக ஒரு காமெடி படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக ‘பிரகம்பனம்’ இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜி5 ஓடிடியில் இப்படம் வெளியாகி உள்ளது.

– ராதா

Comments (0)
Add Comment