சமந்தாவிற்குக் கைகொடுத்ததா எங்கள் தங்கம்?

நடிகை சமந்தா தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து தயாரித்துக் கதாநாயகியாக நடிக்க, டிகாந்த் மஞ்சாலி, கவுதமி ஆனந்த், நடிப்பில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘மா இன்ட்டி பங்காரம்’ (எங்கள் வீட்டு தங்கம்) என்ற பெயரில் தெலுங்கில் வந்திருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்றம்.

அரசியல் ஈடுபாடு, கிராமத்தில் பெரும் செல்வாக்கு உள்ள – பெரிய கூட்டுக் குடும்பத் தலைவரான – ராமையாவின் (ஆனந்த்) மகன் அனிருத் (டிகாந்த்),

பட்டணத்தில் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த – தனக்குப் பிடித்த பெண் ஸ்வர்ணாவை (சமந்தா) திருமணம் செய்து கொண்ட காரணத்தால், குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறான்.

இந்நிலையில் அவன் தங்கையின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மனைவியுடன் கிராமத்துக்குப் போகிறான் .

அம்மா (கவுதமி) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஏற்றுக் கொண்டாலும் அப்பா ஏற்கவில்லை.

பட்டணத்துப் பெண்ணான ஸ்வர்ணாவால் மாமியார் மெச்சிய மருமகளாக ஆக முடியவில்லை.

இளைய மருமகள் குடும்பக் குத்து விளக்காக வளைய வந்தாலும், மறுபக்கம் ஸ்வர்ணாவை குத்திக் குத்திக் கிழித்துக் கொண்டே இருக்கிறாள்.

தன்னோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த சக தோழியும் சமையல் கலை வல்லுநருமான கிரண்மையியை (மஞ்சுஷா) கொண்டு வந்து, அவளை வைத்து விதம் விதமாக சமைத்துப் போட்டு கணவரின் பெரிய குடும்பத்தை வளைத்துப் போடப் போராடும் ஸ்வர்ணாவுக்கு ஒரு பெரிய சிக்கல் முளைக்கிறது.

அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த ஸ்வர்ணா, ஒரு நிலையில், நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு ஒரு தீவிரவாதக் குழுவில் இணைகிறாள்.

ஜான்சி என்று பெயர் மாற்றிக்கொண்டு சண்டைக் கலைகள் கற்று பெரிய வீராங்கனையாக இருக்கிறாள்.

ஒரு நிலையில் அந்த தீவிரவாதக் குழுவினர் நல்லவர்கள் அல்ல என்று புரிந்து அவர்களை விட்டு விலகி வந்துவிடுகிறாள். .

ஜான்சி இல்லாமல் கையொடிந்து போனது போல தீவிரவாதக் குழு தலைவன் (குல்ஷன் தேவய்யா), அவளைக் கண்டு பிடித்து மீண்டும் குழுவில் இணைக்க என்ன என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறான்.

தனது ஜான்சி இப்போது பெரிய கூட்டுக் குடும்பத்தில் கட்டுப்பெட்டி மருமகள் ஸ்வர்ணவாக இருப்பதைக் கண்டு, அவளை எப்படியாவது கோபப்படுத்தி, கோபத்தை வெளிப்பட வைத்து, குடும்பத்தில் இருந்து பிரித்து, மீண்டும் தீவிரவாதியாக்க எல்லா வன்முறைகளையும் பிரயோகிக்க, நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .

படத்தின் முதல் பலம் பெரும்பலம் சமந்தா!

அட்டகாசமான அழுத்தமான நடிப்பு மற்றும் அடிப்பு. உடல் உபாதைகளுக்கும் அப்பாற்பட்டு சண்டைக் காட்சிகளில் ஜமாய்த்து இருக்கிறார்.

உணர்ச்சிகரமான காட்சிகளில் அந்தக் கண்கள் பேசுகின்றன.

சண்டைக் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக அமைய காரணம் சண்டை இயக்குனர்கள் லீ விட்டேகர் மற்றும் அஸாஸ் குலாப் ஆகியோர் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷும் தான்.

சண்டை தவிரவும் படம் முழுக்க அவ்வளவு ரிச்சாக அட்டகாசமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார் ஓம் பிரகாஷ்.

சந்தோஷ் நாராயணன் இசை படத்துக்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

வில்லன் குல்ஷன் தேவய்யா நிதானமாக மிரட்டுகிறார்.

கட்சி ஆபீசுக்கு போய் வருவது போல ஜஸ்ட் லைக் தட் நடித்திருக்கிறார் கவுதமி.

இவர்கள் எல்லோரையும் விட, சமையல் கலையில் அசத்தும், நல்ல மனசுள்ள – அப்பாவி தோழி கிரண்மயியாக வரும் மஞ்சுஷா நடிப்புக்கு கலையிலும் அசத்தி இருக்கிறார். சோ ஸ்வீட் மஞ்சுஷா.

கிளைமாக்சில் ஸ்வர்ணாவுக்கும் தீவிராதிகளின் தலைவனுக்குமான கடைசிக் காட்சியில் இயக்குனர் நந்தினி ரெட்டி தெரிகிறார்.

இப்படியாக குடும்பப்பாங்கு, ஆக்ஷன் இரண்டும் கலந்த ஒரு சுமாரான படமாக வந்திருக்கிறது இந்தப் படம்.

நமக்கு ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், எங்கள் தங்கம் என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் கலைஞர் கருணாதியின் தயாரிப்பில் 1970 வெளிவந்த மாபெரும் வெற்றி படம்.

தமிழக அரசியலிலும் மிக முக்கியமான படம்.

அந்தப் படத்தின் பெயரை எடுத்து வைத்துக் கொண்டு விட்டு ஒரு நன்றி கார்டு கூட இல்லை. ஒரு மரியாதை இல்லை.

படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் இப்போது படத்துக்குக் கலைஞர், முரசொலி மாறன் குடும்பத்தினர்தான் இருக்க முடியும்.

அவர்களும் கண்டு கொள்ளவில்லை. அப்படி என்ன இந்த படக்குழு மீது பாசமோ.

எங்கள் தங்கம் 2026.. ஹால்மார்க் இல்லை.

– சு.செந்தில் குமரன்

 
Comments (0)
Add Comment