‘ஆட்டி’ – சங்க கால தமிழ்ப் பெண்களின் நிலைக்குச் சான்று!

அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிசாமி நடிப்பில், திருமுருகன் திரைக்கதையில், மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்கி இருக்கும் படம்.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு.

அந்தக்கால அகண்ட மதுரை மாவட்டத்தில் உள்ள தேயிலை மலைக்காடு. அங்கு இருக்கும் டீ எஸ்டேட்களில் ஒன்று இடைக்காடு எஸ்டேட். அங்கே பரம்பரை பரம்பரை பரம்பரையாக வாழும் தொழிலாளர்கள்.

எல்லா எஸ்டேட்களுக்கும் சேர்ந்தது ஓர், ஒற்றை அறை தபால் நிலையம், இரண்டு பேர் மட்டும் வெட்டியாக இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷன்.

அந்த மக்களில் ஒருவரான அழகி (அபி நக்ஷத்ரா) என்.ஜி.ஓ அமைப்புகள் கொண்டு வரும் சில புத்தகங்களை வைத்து எழுதப் படிக்க கற்றுக் கொள்கிறாள். சிறுவர்களுக்கு சொல்லித் தருகிறாள்.

அந்த ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறாள். அந்த தூங்கி வழியும் காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர் (இசக்கி கார்வண்ணன்) வருகிறார்.

”அது எப்படி ஒரு ஏரியாவில் குற்றம் நடக்காமலே இருக்கும்? எனக்கு தினமும் ஒரு கேஸ் வேணும்” என்கிறார்.

உண்மையில் அங்கே உடல் முழுக்க மறைத்த – ஐவர் அணி ஒன்று, அவ்வப்போது சிலரை கொல்கிறது.

பள்ளிக்கூடத்துக்கு ஒரு ஆசிரியர் (பிரவீன் பழனிசாமி) வருகிறார். அவர் அழகியிடம் தவறாக நடக்க முயல்கிறார். இந்த நிலையில் ஆசிரியர் மரணம் அடைகிறார்.

கொலையை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியர் எம்.எல்.ஏ ஒருவரின் தம்பி என்பதும் அவர் இதற்கு முன்பே பல ஊர்களில் பணியாற்றும்போது பெண்களிடம் தவறாக நடந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

ஆசிரியரைக் கொன்றது யார் என்பதே படம்.

ஆட்டி என்ற சொல்லுக்கு தலைவி, முதன்மையானவள் என்று பொருள் (நீயேதான் எனக்கு மணவாட்டி என்ற எம்.ஜி.ஆர் படப் பாடல் உதாரணம்.)

கரிகால்சோழனின் மருமகன் பெயர் ஆட்டன் – அத்தி என்கிறது வரலாறு. அதற்கு அத்தி எனும் தலைவன் என்று பொருள்.

தகிக்கும் ஒரு டோனில் மேலுடை அணியாத ஆண்கள், ரவிக்கை அணியாத பெண்கள் என்ற அந்தக்கால பணியில் நகரும் படம். கதை நிகழும் இயற்கைக் களம் அற்புதமாக இருக்கிறது. உபயம் கிட்டு.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களாக வரும் அந்த குட்டிப் பையன்கள் கலக்குகிறார்கள்.

வரலாற்று வழியே வந்த பாரம்பரிய நடனங்கள் கவனிக்க வைக்கின்றன.

சிபி சதாசிவம் ஒளிப்பதிவில் கதை நிகழும் களம் மனசுக்குள் இறங்குகிறது.

கலை இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பான பங்களிப்பு.

இசையமைப்பாளர் தீசன் கவனிக்க வைக்கிறார்.

நடிக்கும்போதும் தயாரிப்பாளராகவே இருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும் விடியல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் காதல் சுகுமார்.

அபி, சவுந்தர் என்று நிறைய பேர் வந்து வந்து வசனம் பேசிப் போகிறார்கள்.

படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது.

ஏதோ தமிழ்நாட்டில் கொஞ்ச காலமாக சிலரால்தான் பெண்களுக்கு உரிமையே கிடைத்தது என்று சொல்லப்படுவது பொய்.

காலகாலமாக எங்கள் பெண்கள் உரிமையோடும் சுதந்திரமாகவும்தான் வாழ்ந்தார்கள் ‘எங்கள் குடியில் பெண்கள் முதலாம்’ என்ற உண்மையை வெளிப்படுத்தும் கதை.

தமிழ்நாட்டில் இவ்வளவு பெண் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருப்பதற்கான காரணத்தையும் படம் சொல்கிறது.

தமிழ்நாட்டில் மராத்தியர் ஆண்டபோது, அவர்கள் பல தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி மாற்று இனத்தவருக்கும் கொடுத்தனர்.

அதை எதிர்த்து கிளம்பிய ஐந்து வீராங்கனைகள், அப்படி – தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்துபவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றனர்.

அந்த மரபில் வந்தவர்களே பல பெண் குலதெய்வங்கள். எனவே பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக பெண்களே கிளர்ந்து எழுந்தது தமிழகக் குடியில் காலகாலமாகவே உண்டு என்று சொல்வதன் – என்ற அற்புதமான விஷயத்தை சொல்லும் படம் இது.

ஆனால், அதை சரியாகச் சொல்லாமல் கடமைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

கால காலமாக எங்கள் பெண்கள் உரிமையோடும் சுதந்திரமாகவும்தான் வாழ்ந்தார்கள் ‘எங்கள் குடியில் பெண்கள் முதலாம்’ என்பதை சொல்ல எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

சங்க காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததற்கான ஆதாரங்கள், அந்தக் காலத்திலேயே தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற ஏராளமான பெண் புலவர்கள், மன்னர்களுக்கு இடையே நடந்த போரை நிறுத்திய ஔவையார் இவற்றை எல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டாமா?

(வெகுகாலம் பிரிந்து இருக்கும் தலைவனுக்கு, ”நீ சீக்கிரம் வராவிட்டால் இன்னொரு தீர்மானம் செய்து கொள்வேன்” என்று அதிரடியாக செய்தி அனுப்பிய பாடல் கூட சங்கத் தமிழில் இருக்கிறது)

இதை எல்லாம் சொன்னால்தானே தமிழ்ச் சமூகம் அந்தக் காலத்தில் பெண்களை எப்படி உயர்வாக வைத்திருந்தது என்பது புரியும்?

மராத்தியர் கால விஷயத்தை காட்சியாக சொல்ல வேண்டாமா?

அதை எல்லாம் காட்சிகளாக சொல்லாமல் தகவலாகச் சொல்வதால் கதைக்கு உரிய கணம் கிடைக்காமல் போகிறது.

பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பெண்களின் சீற்றம் தமிழ் மண்ணில் புதிது அல்ல என்று சொல்லி இன்றைய பெண்களுக்கு அது உத்வேகம் தரும் அளவுக்கு படத்தைக் கொண்டு வர வேண்டாமா? கனெக்ட் பண்ண வேண்டாமா?

அதெல்லாம் இல்லாததால் ஆட்டி… நுனிப்புல்.

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment