சுகமாணோ சுகமாண்: உறவினர்களாக மாறும் ஆவிகள்!

‘சர்வம் மாயா’, ‘பிரகம்பனம்’ என வித்தியாசமான பேய்ப் படங்களின் வரிசையில் மலையாளத்தில் லேட்டஸ்ட் படமான ‘சுகமாணோ சுகமாண்’, இப்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் ஒளிபரப்பாகி உள்ளது.

ஒரு பெரிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார் படத்தின் நாயகன் தியோ (மேத்யூ தாமஸ்).

சிறுவயதில் அம்மா ஒருவருடன் வீட்டை விட்டு ஓடியதாலும், அப்பா தற்கொலை செய்துகொண்டதாலும் தனிமையில் வாழும் நாயகன் தியோ, ஒருவகையில் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஊரில் உள்ள எல்லோரும் அவரை மெண்டல் என்றே அழைக்கிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலில் அவர் வாழ்ந்து வருகிறார்.

ஒருமுறை எதேச்சையாக, வயதான ஒருவரின் (ஸ்படிகம் ஜார்ஜ்) இறுதிச் சடங்கில் முழு வேலையையும் தியோ செய்யவேண்டி வருகிறது.

அன்றைய தினம் இரவில், அவரது ஆவி தியோவின் வீட்டுக்கு வந்து, அவரது தாத்தாவைப் போல் வாழ ஆரம்பிக்கிறது.

ஆவி உருவத்தில் ஒரு தாத்தா கிடைத்ததால் தியோ உற்சாகமாகிறான். அவனது வாழ்க்கையில் அந்த ஆவி தாத்தாவால் மகிழ்ச்சி பரவுகிறது.

இதைத் தொடர்ந்து ஐப் என்பவரின் அமரர் ஊர்தியில் டிரைவராக வேலைக்கு சேர்கிறான் தியோ.

ஒவ்வொரு முறையும் தியோ தன் வேனில் கொண்டுசெல்லும் இறந்தவர்கள், ஆவியாக மாறி அவன் வீட்டுக்கு உறவினர்களாக வருகிறார்கள். தியோவின் ஆவிக் குடும்பம் பெரிதாகிறது.

ஆவிகளான அந்த உறவினர்கள் அனைவரும் இணைந்து, தியோவின் தனிமையைப் போக்க, அவனுக்கு மணமுடிக்க பார்க்கிறார்கள்.

அதற்காக பெண் பார்க்கிறார்கள். அந்த ஆவிகளின் முயற்சி பலித்ததா? தியோவுக்கு திருமணம் ஆனதா, அவன் தனிமை முடிவுக்கு வந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.

‘வேட்டா’ படத்தின் கதையை எழுதிய அருண்லால் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆபாசம், வன்முறை என்று முகம் சுளிக்க வைக்கும் எந்த விஷயங்களும் இல்லாமல் இயல்பான ஒரு பீல் குட் படத்தைத் தந்திருக்கிறார்.

படத்தின் நாயகனான மேத்யூ தாமஸ், முழு படத்தையும் தன் தோளில் சுமக்கிறார்.

மனப்போராட்டங்களுடன் கூடிய ஒரு இளைஞரின் வாழ்க்கையை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

நகைச்சுவைக் காட்சிகளின் சிரிக்க வைப்பதிலும், சோக காட்சிகளில், அந்த சோகத்தை நமக்கு கடத்துவதிலும் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

அவருக்கு இணையாக இப்படத்தில் நமது மனதை தொடும் பாத்திரம் ஐப்பாக நடிக்கும் ஜெகதீஷுடையது.

மகன் செய்த கொலையை தான் ஏற்று சிறைக்கு சென்று திரும்பும் முன்னாள் போலீஸ் அதிகாரியான ஜெகதீஷின் கதாபாத்திரம் மனதை நெசிழச் செய்கிறது.

படத்தில் நாயகனுடன் நட்பாக இருக்கும், ஆவி அல்லாத ஒரு நபராக அவர் நடித்திருக்கிறார்.

தன் பேரன் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும்போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு மனதைக் கவருகிறது.

ஒட்டுமொத்தமாக ‘சுகமாணோ சுகமாண்’ திரைப்படம் மென்மையான மலையாளப் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

– ராதா

Comments (0)
Add Comment