குடும்பங்களைக் கவரும் கட்டாகுஸ்தி 2!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, பேபி சாரா, மோக்ஷா, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், லிசி, சிறப்புத் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு நடிப்பில், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி முதல் பாகம் ஆகிய படங்களைக் கொடுத்த செல்லா அய்யாவு எழுதி இயக்கி இருக்கும் படம்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி வேலன், விஷ்ணு விஷால் ஸ்டுடியோ சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோரின் தயாரிப்பு.

குஸ்தி பயின்ற கேரளப் பெண்ணுக்கு (ஐஸ்வர்ய லட்சுமி) கல்யாணம் ஆகாமல் இருக்க, தமிழ்நாட்டு படிக்காத மாப்பிள்ளைக்கு (விஷ்ணு விஷால்) குஸ்தி விஷயத்தை சொல்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட, ‘பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்’னு நினைக்கும் சூழலில் உண்மை வெளிப்பட, களேபரங்கள் நடந்து மனைவியின் முன்னேற்றத்துக்கு கணவன் என்ன செய்தான் என்பது கட்டா குஸ்தி முதல் பாகம் .

இந்த இரண்டாம் பக்கத்தில் இருவருக்கும் ஒரு மகள் (பேபி சாரா). கணவன் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக, வீட்டு வேலைகளை செய்து மகளை பார்த்துக் கொள்ள, மனைவி குஸ்தியில் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அடுத்தடுத்த உயரங்களுக்குப் போகிறாள்.

பக்கத்து வீட்டுப் பெண்களோடு சேர்ந்து வடாம் போடுவது, எல்லோருடைய மனைவிகளையும் ஒன்று கூட்டி, ஃ பிட்னஸ் பயிற்சி என்று இருக்கும் கணவனைப் பார்த்து மற்ற ஆண்களுக்கு எல்லாம் எரிச்சல் பொறாமை.

மகளை தன்னைப் ரெஸ்லிங் வீராங்கனையாக வளர்க்க மனைவி முயல, மகளுக்கு டான்சில் ஆர்வம் இருப்பது கண்டு கணவன் மகளை அந்தப் பக்கம் ஊக்குவிக்க, ஒரு நிலையில் பிரச்னை பெரிதாகிறது.

மனைவி ரொம்ப டென்ஷன் ஆவதாகச் சொல்லி, அவளது ரெஸ்லிங் கோச்சிடம் கணவன் ஐடியா கேட்க, தனக்கு வேண்டிய நபரை வெற்றி பெற வைக்க வஞ்சகமாக திட்டமிடும் அந்த கோச், ஊக்க மருந்தை நாட்டு மருந்து என்று நம்ப வைத்து கொடுக்க, கணவன் அந்த மருந்தை மனைவிக்கு தெரியாமல் கொடுக்க, மிக முக்கியமான போட்டியில் அவலமாகத் தோற்கிறாள் மனைவி.

மேலும் ஒரு வருடம் விளையாட்டில் இருந்தே தடை செய்யப்படுகிறாள். ஒரு நிலையில் கணவனின் ரகசிய மருந்து விஷயம் மனைவிக்குத் தெரியவர, தனது முன்னேற்றத்தைப் பொறுக்காமல் கணவன் செய்த சதி இது என்று மனைவி நம்ப, இருவரும் பிரிய, இரண்டு தரப்புக் குடும்பங்களும் அதை மேலும் சிக்கலாக்க, அப்பா அம்மா இருவரின் பிரிவு மகளை தாக்க, நடந்தது என்ன என்பதே படம்.

பாக்யராஜ் உச்சத்தில் இருந்த காலத்தில் அவரது படங்கள் தியேட்டரில் பார்ப்பது எப்பேர்ப்பட்ட பட்டாசு அனுபவம்?

அந்த உலகத்துக்குள் நம்மை மீண்டும் அழைத்துப் போகிறது கட்டா குஸ்தி 2.

இன்றைய நிலையில் ஒரு கமர்ஷியல் படத்துக்கான இலக்கணமாக வந்திருக்கிறது படம்.

ஒரு படத்தில் இரண்டாம் பாகம் ஜெயிப்பது சில படங்களுக்கே அமையும். அந்த சில படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது கட்டாகுஸ்தி 2.

வித்தியாசமான கதை என்பது முதல் பாகத்திலேயே தெரிந்த விஷயம். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதை இன்னும் உயரத்துக்குக் கொண்டு போகிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.

காமெடி, சென்டிமென்ட், குஸ்தி, கிளுகிளுப்பு, பெண்ணுரிமை பேசும் காட்சிகள் என்று குஸ்தியின் ஒவ்வொரு ரவுண்டில் திரைக்கதை ஜெயித்துக் கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு காட்சி சாதாரணமாகத் தெரிந்தாலும், திரைக்கதையின் முக்கிய இடத்தில் அது விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பது ஒரு நல்ல திரைக்கதையின் இலக்கணம். அப்படியே இருக்கிறது திரைக்கதை. தோள்பட்டை முத்தம் போன்ற பல காட்சிகள் அதற்கு உதாரணம்.

படத்தின் திரைக்கதைப்படி போட்டியில் ஒருவர் ஜெயிக்க வேண்டும். ஆனால், அப்படி நடந்தால் அது படத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராகப் போய்விடும். அந்த இடத்தில் திரைக்கதையை நுணுக்கமாக இயக்குனர் கையாண்டிருக்கும் விதம் அபாரமானது.

ஜட்ஜாக ரம்யா கிருஷ்ணன் வரும் காட்சிகள் அதிரடி. இப்படியாக லாஜிக்… அது இல்லாத இடங்களில் மேஜிக்… என்று பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார் செல்லா அய்யாவு. இனி அவர் தமிழ் சினிமாவின் செல்ல அய்யாவு.

அந்தக் காட்சிகளோடு படம் முடிந்து இருந்தால் கூட ஒன்றும் மோசமில்லை. ஆனால், மீண்டும் அதை மெயின் ரூட்டுக்கு இழுத்து வரும் அபாரம் படத்தில் வரும் டீச்சர் கதாபாத்திரம் (மோக்ஷா) முந்தானை முடிச்சு டீச்சர் கதாபாத்திரத்திடம் ”வர்றியா, ஒண்டிக்கு ஒண்டி?” என்று சவால் விடுகிறது.

என்னடா இது? இடைவேளைக்கு அப்புறம் பஞ்சாயத்து போர்டு தேர்தல் என்று, (உண்மையில் அது ‘பெஞ்சாயத்து’ போர்டு) ஒரு ரூட்டை புதுசாக ஆரம்பிக்கிறாரே என்று யோசித்தால், அடுத்த சில நிமிடங்களில் அதை வைத்தும் பட்டையை கிளப்பி விட்டு, சமத்தாக திரைக்கதையின் ஹேண்டிலை திருப்ப வேண்டிய திசையில் திருப்பி விடுகிறார் இயக்குனர். விவரம்.

மகள் வளர்ப்பில் கணவனின் கருத்தில் தப்பில்லை என்று மனைவியும், மனைவியின் கருத்தில் தப்பில்லை என்று மனைவியும் புரிந்து கொள்ளும் இடமெல்லாம் மேட்டிமையான எழுத்து. மேரி கோம் பற்றிய வசனம் எல்லாம் அருமை.

யூகிக்க முடிகிற விஷயங்கள் வரும்போது கூட, நிறைவாக உணரும்படியான இயக்கம்..

சுயமரியாதைப் பெண், அட்டகாசமான குஸ்தி வீராங்கனை, தொட்டால் சிலிர்க்கும் பொண்டாட்டி, பிள்ளையின் நலனுக்கான ஸ்ட்ரிக்ட்டான அம்மா என்று எல்லாவகையிலும் பிரம்மிப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி.

கதாநாயகிகளுக்கே நாலு சீன்தான் என்று தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்கும் நிலையில் இப்படி கேரக்டர் கிடைப்பது பெரிய விஷயம் என்றால், அதை சரியாக செய்து அந்தப் படைப்பாளியை கவுரவப்படுத்துவது இன்னும் பெரிய விஷயம். அந்த சுகம் படைப்பாளிகளுக்குத்தான் புரியும்.

கொண்டாட வேண்டும் விஷ்ணு விஷாலை.

எஜமான் படத்தில் நெப்போலியன், “கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்” என்று சொல்வது போல, ‘எல்லா காட்சிகளையும் நானே ஆக்கிரமிக்க வேண்டும். சன்ரைஸ் காட்சி எடுத்தாலும் சூரியனின் என் முகம்தான் தெரிய வேண்டும்’ என்று பல ஹீரோக்கள் எண்ணும் நிலையில் கதாநாயகி கேரக்டருக்கும் பெரும் முக்கியத்துவம் உள்ள விட்டுக் கொடுத்து விளையாடி இருக்கிறார் விஷ்ணு .

இந்த இருவருக்கும் இணையாக தனது மழலை கொஞ்சும் நடிப்பில் மயக்கி இருக்கிறார் பேபி சாரா. இவர் வரும் காட்சிகளில் எல்லாம் மனம் தானாய் கனிகிறது வாழ்த்துகள் செல்லம்.

மில்லி மீட்டர் துல்லியத்தில் அட்சர சுத்தமாக நடித்து இருக்கிறார் லிசி ஆண்டனி. கிரேட். நேசத்துக்கு உரிய நடிப்பு.

கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் எல்லோருமே கச்சிதம்.

காமெடிக் காட்சிகளை ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்தும் ஷான் ரோல்டன், பின்னணி இசை பாடல்களிலும் குறை வைக்கவில்லை.

துருத்திக் கொண்டு தெரியாமல் படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார் பாஸ்கரன்.

ஒரு பலம் மிக்க திரைக்கதையை சேதாரம் இல்லாமல் தொகுத்திருக்கிறது பரத் விக்ரமனின் படத்தொகுப்பு.

குஸ்தியின் நுணுக்கங்களை சிறப்பாகக் காட்டுகிறது சுப்ரீம் சுந்தரின் சண்டை இயக்கம்.

‘நேரடி அர்த்தம்’ தரும் சில வசனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

தியேட்டரிக்கல் கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.

மொத்தத்தில் கட்டாகுஸ்தி -2…. படம் பார்க்க உட்காருபவர்களை ஒரு நிமிடம் கூட விலக விடாத 154 நிமிட ரோலர் கோஸ்டர் ரகளை.

– சு.செந்தில்குமரன்

Comments (0)
Add Comment