பேசாமல் ‘பேச’ வைக்கிறதா ‘காந்தி டாக்ஸ்’?

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி, நடிப்பில் கிஷோர் பாண்டுரங் பலேகர் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’. (Gandhi Talks – காந்தி பேசுகிறார் என்று பொருள்). தமிழிலும் வந்திருக்கிறது.

மும்பையில் அழுக்கான ஏழ்மை நிறைந்த நெருக்கமான குடியிருப்புகள், ஒண்டுக் குடித்தனங்கள் உள்ள ஒரு பகுதியில் வயதான உடம்பு சரியில்லாத அம்மாவுடன் வாழ்பவன் மகாதேவ் (விஜய் சேதுபதி).

எதிர் வீட்டில் உள்ள, ஒப்பீட்டு அளவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் (அதிதி ராவ் ஹைதரி) அவனுக்கு கண்ணியமான காதல்.

மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து ஒரு பெரும் விபத்து மற்றும் துரோகம் காரணமாக பெரும் அளவில் தொழிலில் முடங்கியவர் போஸ்மேன் (அரவிந்த்சாமி).

அந்த விபத்தால் அவர் சொத்துக்கள் எல்லாம் பறிபோகிறது. தனது தரப்பில் தவறு இல்லை என்று நிரூபிக்க, எவ்வளவோ போராடியும் தொழில் எதிரித் தரப்பு, கோர்ட்டில் வைத்தே ஜட்ஜுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பேசி, போஸ்மேனுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வைக்கிறார்கள்.

முன்பே – மனைவி, மகளை இழந்த நிலையில் அவரது அம்மாவும் இறந்து போக, ரொம்ப உடைந்து போகிறார் போஸ்மேன். அவர் மனதுக்குள் ஒரு பிளான் B யும் இருக்கிறது.

மகாதேவ் படிப்புக்கு ஏற்ற வேலைக்குப் போகலாம் என்றால் அங்கே ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். காதலியின் அம்மாவைப் பொறுத்தவரை மகாதேவ் என்பவன், வீட்டுக்கு வந்திருக்கும் ஆட்களுக்கு சோடா, கலர் வாங்கி வர கடைக்கு ஏவும் ஓர் ஆள்தான்.

மிக்க வறுமை. சாப்பாட்டுக்கே கஷ்டம்.

சில சமயம் பக்கத்து வீட்டில் போட்டு வைத்திருக்கும் சாப்பாட்டு தட்டில் இருந்து சோறை திருடிக் கொண்டு வந்து அம்மாவுக்கு தரும் அளவுக்கு, தெருவோரம் யாரோ கொட்டிய பிராயாணியை சாப்பிடும் நாயை பார்த்தபடியே நடக்கும் அளவுக்கு மகாதேவுக்கு வறுமை.

பிக்பாக்கெட் ஒருவன் அரசியல்வாதிக்கே எலக்சனுக்கு நிதி வழங்கும் அளவுக்கு இருக்கிறான்.

ஒரு நிலையில் மகாதேவ் ‘இனி நேர்மையாக இருந்து பயனில்லை. பிக்பாக்கெட் ஆள் மாதிரி எப்படியாவது பணம் சம்பாதித்துக் காதலியை மணக்க வேண்டும். அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறான்.

இன்னொரு பக்கம் தன் அன்பு மனைவி மகள், அம்மா இவர்களுடன் வாழ்ந்த வீடு ஏலத்தில் எவனுக்கோ போவதை பணக்காரர் போஸ்மேன் விரும்பவில்லை.

மகாதேவ், போஸ்மேன், பிக்பாகெட் மூவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, நடந்தது என்ன என்பதே இந்த ‘காந்தி டாக்ஸ்’.

அதாவது படத்தில் யாருமே பேச மாட்டார்கள். காந்தி மட்டும் பேசுவார், ரூபாய் நோட்டுகள் மூலம்.

ஆம், இது யாரும் ஒரு வார்த்தை கூட பேசாத படம் (மவுனப் படம் என்று சொல்ல முடியாது. படத்தில் இசை மட்டுமல்ல; பாடல்களும் இருக்கிறது)

இதைச் சொல்லும்போதே உங்களுக்கு கமல் அமலா நடிப்பில், சிங்கீதம் சீனிவாசராவ் எழுதி இயக்கிய புஷ்பக விமானம் (தமிழில் பேசும் படம்) என்ற படம் நினைவுக்கு வரலாம். பேசும் படம் 1987 ஆம் ஆண்டு வந்தது. அதன் நீளம் இரண்டு மணி பத்து நிமிடம்.

முப்பத்து ஒன்பது வருடம் கழித்து வந்திருக்கும் இந்த காந்தி டாக்ஸ் படத்தின் நீளம் 2 மணி 25 நிமிடம்.

2023 ஆம் ஆண்டு கோவா உலகப் படவிழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது தான் திரைக்கு வருகிறது.

ஆரம்பிக்கக் காட்சியில் மஹாதேவ் வசிக்கும் பகுதியை காட்டும் விதத்திலேயே (நெருக்கடி முதல் அருவருப்பு வரை) அந்த இடத்துக்கு அழைத்துப் போய் விடுகிறார்கள் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரும் ஒளிப்பதிவாளர் கரன் ராவத்தும்.

விஜய் சேதுபதி படம் முழுக்க சிறப்பாக நடித்துள்ளார். அரவிந்த்சாமி வாழ்ந்து கெட்ட பணக்காரனாக அப்படியே வாழ்கிறார்.

கேமராவுக்கு முன்னால் இன்னும் இளமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் அதிதி ராவ் ஹைதரி.

விஜய் சேதுபதியும் அதிதி ராவ் ஹைதரியும் பேசிக்கொள்ளாமல் சைலண்ட் ஆக மல்லுக்கட்டும் காட்சிகள் – உணர்வுக் குவியல்.

ஏ.ஆர். ரகுமானின் இசை ஒரு பேசாப் படத்துக்கு உரிய தன்மையில் மொழியால் பேச முடியாததை இசையால் பேச வேண்டிய அளவுக்கு சிறப்பாக இல்லை.

பெரும் பொருட்செலவில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்றால், இந்தப் படத்தை எதற்கு பேசாப் படமாக எடுக்க வேண்டும் என்பதுதான்.

படத்தின் இரண்டாவது காட்சியே கோர்ட் சீன். நீதிபதிக்கு லஞ்சப் பணம் தருவது பற்றிய விஷயம் சைலன்ட் ஆகக் காட்டப்படுவது சரி.

ஆனால், தீர்ப்பு சொல்ல ஜட்ஜ் மைக்கை பிடித்தவுடன் சீன் கட். சரிங்க, நீங்க சீனை கட் பண்ணலாம். ஆனால், நீதிபதி பேசித்தானே தீர்ப்பு சொல்ல முடியும்? அப்புறம் எப்படி இது பேசாப் படம்?

மகாதேவும் அவன் காதலியும் எங்கெங்கோ சுற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசிக் கொள்கிற மாதிரி படத்தில் காட்சி எதுவும் இல்லை. ஆனால், அந்த கேரக்டர்கள் பேசிக் கொள்ளத்தானே செய்வார்கள்?

மகாதேவின் அம்மா தூங்கும்போது மகாதேவும் காதலியும் மவுனமாக சண்டை போடும் காட்சி மட்டும் ஓகே.

அதற்காக பல இடங்களில் வம்படியாக எல்லாரும் வாயில் கோந்து போட்டுக் கொண்டு நிற்பது கொடுமை.

ஓர் ஆராய்ச்சி மனோபாவத்தோடு படம் பார்த்தால்தான் புரியும். ஜாலியாக படம் பார்க்கப் போனால் – மண்டையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

விளைவு, பேச வேண்டிய இடங்களில்கூட யாரும் பேசாமல் இருப்பதால் காட்சிகளின் அழுத்தம் குறைகிறது.

“என்னப்பா இந்தப் படத்துல வர்ற எல்லாருமே பேச்சு மாற்றுத் திறனாளிகளா?” என்ற கேள்வி வருகிறது.

அதே கமலின் பேசும் படம் பாருங்கள். யாரும் யாரோடும் பேசும் சூழல் அமையாதவாறே காட்சிகள் பொருத்தமாக இருக்கும். பேச வாய்ப்பு இருந்தும் கமல்ஹாசனும் சிங்கிதமும் கேமராவை நிறுத்திவிட்டு கும்மியடிக்கவில்லை.

தமிழ் சினிமா பேச ஆரம்பித்த பிறகு முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ (1931) வந்த பிறகு ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் (1987) கழித்து கமல் நடிப்பில் வந்து, இந்தியாவையே பேச வைத்த காரணத்தால் அது ‘பேசும் படம்’.

பேசாப்படம் என்ற உத்திக்கு இலக்கணம் வகுத்த படம் அது. ஒரு இடத்தில் ரேடியோ செய்தி வாசிக்கும் சத்தம் மட்டும் மொழியாக வரும். மற்றபடி வார்த்தைகளும்கூட இல்லாத படம். (வரம்பில் கூட ஒரு இடத்தில் லைட்டாக வரம்பு மீறும் கலைக் குறும்பு அது)

அப்படி இருக்க, சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இப்படி ஒரு பேசாப்படம்?
இல்லை இல்லை… பேசவிடாப் படம் எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

இந்தப் படத்தை வழக்கமான பேசும்படமாக எடுத்திருந்தால் கூட, இந்தப் படம் ரசிகர்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

ஓடிக்கொண்டு இருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் யாருமே பேச மாட்டார்கள் என்றால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கு காந்தி டாக்ஸ். அதுவும் காந்தி என்றும் பாராமல்!

சரி, இதற்கும் அப்பாற்பட்டு படம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், கதையிலும் முதல் பாதியிலும் உள்ள கனம், இரண்டாம் பகுதியில் இல்லை.

திடீரென்று அசந்தர்ப்பமாக போஸ்மேனின் மனைவி, மகள் எல்லாம் இறந்ததைச் சொல்கிறார்கள்.

கிளைமாக்ஸுக்கு முக்கால் மணி நேரம் முன்னால் இருந்தே பிம்பிலிக்கா பிலாக்கி விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்தக் கதைக்கு உரிய கனமும் நெகிழ்வும் இல்லாமல் ரொம்ப செயற்கையாக, ‘ஆட்டம் முடிஞ்சு போச். கெளம்பு கெளம்பு’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது கிளைமாக்ஸ்.

கண் பார்வையற்றவரின் நடை என்பது வாழ்க்கை. கண்ணைக் கட்டிக் கொண்டு நடப்பது என்பது விளையாட்டு.

அந்த வகையில், ‘பேசும் படம்’ – வாழ்க்கை; ‘காந்தி டாக்ஸ்’ – போங்கு ஆட்டம்.

இயற்கையாகப் பழுக்கும் மாம்பழம், வாழைப்பழங்களின் சுவை, செயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் பழங்களில் இல்லை.

காந்தி டாக்ஸ் – கார்பைடு கல் வைத்த மாங்காய்; புகை போட்டும் பழுக்காத வாழைப்பழம்.

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment