ஜூம் லென்ஸ்:
தமிழகத்தில் தற்போது பிரபல நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான படங்கள் வெளியான போது மட்டுமே திரையரங்குகளில் ரசிகர்களும் பார்வையாளர்களும் அதிகமாக திரளுகிறார்கள். திரையரங்குகளில் வழக்கத்துக்கு மாறாகச் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.
எந்த நேரத்தில் புதிய படங்களை திரையிட்டாலும், அவற்றைப் பார்ப்பதற்கென்றே தனிக் கூட்டம் வருகிறது. முன்கூட்டியே பதிவு செய்வது சில வாரங்களுக்கு தொடர்கிறது. ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகள் நிரம்புவது அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள்ளே தான். அதற்குப் பிறகு கூட்டம் படிப்படியாக குறைந்து விடுவது எதார்த்தமான ஒன்று.
இதற்கு நேர் எதிர்மாறாக திரையரங்குகளில் சிறிய பட்ஜெட் படங்கள் பெரும் அளவில் மார்க்கெடிங் செய்யப்படாமல் வெளியிடப்படும்போது அதே திரையரங்குகளின் நலனைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
சென்னையில் சில படங்கள் திரையிடப்பட்டபோது பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையில் அந்த திரைப்படக் காட்சியை ரத்துச் செய்யப்படுவதும் அடிக்கடி நடந்திருக்கிறது.
பெரிய பட்ஜெட்டில் பிரபல நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களுக்கு பெரும் கூட்டம் திரள்வதும், சிறிய பட்ஜெட்டில் வரும் நல்லப் படங்களுக்கு போதுமான பார்வையாளர்கள் வராமல் இருப்பதுமான சூழ்நிலை எதைக் காட்டுகிறது?
கதை, திரைக்கதை போன்ற அடிப்படையான அம்சங்கள் இல்லாத நிலையிலும்கூட பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு, குறிப்பாக ‘பான் இந்தியா’ படங்களுக்கு அவை வெளிவருவதற்கு முன்பே பலருடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவில் பெரும் மார்க்கெட்டிங் யுத்திகள் பல கோடி செலவில் செய்யப்படுக்கின்றன.
அதே சமயத்தில் காலத்துக்கேற்ற கதைகளைக் கொண்டு உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு அம்மாதிரியான மார்க்கெட்டிங் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது விநோதம்.
முன்பு தமிழகத்தில் ஆங்கிலப் படங்களை மட்டுமே வெளியிடுவதற்கு தனித் திரையரங்குகள் இருக்கின்றன. அவற்றுக்கென்று தனி பார்வையாளர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.
அப்போது தமிழக அரசு அத்தகைய திரையரங்குகளில் ஆங்கிலப் படத்துடன் தமிழ்த் திரைப்படத்தையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்தது. அதை அந்தத் திரையரங்குகளும் பின்பற்றின.
தற்போது தமிழகத்தில் நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வெவ்வேறு கட்டண விகிதங்களுடன் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து இயங்கிய பல முக்கியமான திரையரங்குகள் தற்காலச் சூழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் படிப்படியாக மூடப்பட்டு விட்டன.
அதே சமயத்தில் நவீன வசதிகளுடனும், புதிய கட்டணங்களுடனும், புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் முளைத்து விட்டன. அதிலும் தற்போது ஓ.டி.டி தளங்களும் விரிவடைந்து அதற்கென்றே தனியாகப் பார்வையாளர்களும் உருவாகி விட்டார்கள். ஆக, திரையரங்குகளும் மாறி இருக்கின்றன.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களும் படங்களுக்கேற்ப மாறியிருக்கிறார்கள் என்ற நிலையில் திரையரங்குகளுக்கு ரசிகர்களையோ, பார்வையாளர்களையோ வரவழைப்பது எது? என்கிற கேள்வி இந்தச் சமயத்தில் எழுப்ப வேண்டியிருக்கிறது.
விரிவான ஓட்டப்பந்தயத் தளத்தில் விளையாட்டு வீரர்கள் பலர் ஓடுகிறார்கள். சிலர் போதிய பலம் இன்றியும் எக்ஸ்ட்ரா ஊட்டச்சத்தை செலுத்தியபடி ஓடுகிறார்கள். சிலர் போதிய பலம் இருந்தும் தகுந்த கவனிப்பின்றி பின்தங்கிப் போகிறார்கள்.
இந்தச் சூழல் தற்போது உள்ள நவீன திரைப்பட உலகத்துக்கும் பொருந்தும்.