வலியை மறைத்துதான் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

மே ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார்: இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்தக் கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன்.

ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. 

பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும்.

ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும், விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

வலியை மறைத்துதான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்தக் குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது.

குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து – மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள்.

இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தைப் பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும்,

நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான்.

இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார்.

அவர்தான் இந்தப் படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார். பாடல்களும், இசையும் நன்றாக வந்திருக்கிறது. இந்தப் படம் அன்பை போதிக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு பேசினார் சசிகுமார்.  

Comments (0)
Add Comment