தமிழில் தங்கலான், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், சினிமாவில் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
சினிமாத் துறையில் பெண்களுக்கு வலுவான கதாபாத்திரங்கள் வேண்டும் என்றால் அதிகமான பெண் இயக்குநர்களும் பெண் திரைக்கதை ஆசிரியர்களும் வர வேண்டும் என்று மாளவிகா மோகனன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள அவர், “திரையில் பெண்களின் பிரதிநிதித்துவம் சிறப்பாக மாற வேண்டும் என்றால் நடிகைகளால் மட்டுமே ஏற்படுத்த முடியாது.
அதிகமான பெண்கள், இயக்குநர்களாகவும், எழுத்தாளர்களாகவும் வர வேண்டும்.
அவர்களால் தான் தங்களுக்கே உரிய பார்வையுடன் புதிய கதைகளைச் சொல்ல முடியும். தங்களுடைய அனுபவங்களைக் கதைகளில் கொண்டு வருவார்கள்.
எனக்குக் கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும், வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்.
அப்படிப்பட்ட கதைகள் அதிகம் உருவாக வேண்டும். அதிகமான பெண் இயக்குநர்கள் வந்தால், இந்தியாவிலும் குவென்டின் டரான்டினோவின் ‘கில் பில்’ போன்ற சிறந்த ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனனின் இந்தக் கருத்தை நடிகைகள் பலரும் வரவேற்றுள்ளனர்.