‘ஒன்ஸ் மோர்’ கேட்க வைக்கிறதா படம்?

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், அனுஷா பிரபு, தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர் நடிப்பில், விக்னேஷ் ஸ்ரீகாந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி இருக்கும் படம் ஒன்ஸ்மோர்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரிப்பு.

1997ஆம் ஆண்டு இதே பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் ஒரு படம் வந்திருக்கிறது.

கடந்த கால வாழ்க்கைச் சம்பவங்களால் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ரகுவரனை (அர்ஜுன் தாஸ்), அவனது பள்ளிக்காலத் தோழி அஞ்சலி (அதிதி சங்கர்) பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்து காதலைச் சொல்கிறாள்.

ஆனால், அவனுக்கு காதல் மேல் நம்பிக்கையில்லை. அவள் தொடர்ந்து மனம் தளராமல் உற்சாகமாக பின் தொடர, ஒரு நிலையில் ரகுவரனும் காதலிக்க ஆரம்பிக்கிறான்.

அந்தக் காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் வரை போகிறது. அந்த சமயத்தில் அவனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து போன் வருகிறது.

அவள் அவனது பழைய காதலி இந்திரா வாசுதேவன் (சோனா ஒலிக்கல்). கொச்சியில் படிக்கும்போது அவனுக்கும் அவளுக்கும் கல்லூரிக்கால இளமைக் காதல்.

அவளது அப்பா அவளுக்கு கொடுத்த மோதிரம் ஒன்றை அவள் தொலைத்த போது, அவள் அப்பா இறந்துவிட்ட வேதனை அவளுக்கு.

ரகுவரன் அவளுக்கு அளிக்கும் ஒரு கழுத்துச் செயினை தொலைக்காமல் வைத்துக் கொள்வதாக உறுதி சொல்கிறாள்.

காதல் காலத்தில் அந்த உறவு படுக்கையறை வரை போகிறது. மறுநாளே இந்திரா ரகுவரனை வெறுக்கிறாள். விலகிப் போகிறாள். அதைத் தாங்க முடியாமல் நெருங்கிப் போகும் அவனை அவமானப்படுத்தி அனுப்புகிறாள்.

அதைத் தாங்க முடியாமல் தன்னையே வெறுத்து எட்டாண்டு காலம் நடைப்பிணமாக வாழ்ந்த நிலையில்தான் அஞ்சலியுடனான அவனது இப்போதைய காதல், கல்யாணம் வரை வந்திருக்கிறது.

இந்த நிலையில் இப்போது அவனை சந்திக்கும் இந்திரா, ”நான் ஏன் உன்னை விட்டு விலகினேன் தெரியுமா?” என்று ஒரு காரணம் சொல்கிறாள். இப்போது என்னை ஏற்றுக்கொள்” என்கிறாள்.

ரகுவரன் யாரை மணந்தான் என்பதே ஒன்ஸ் மோர்.

பெரிய சைஸ் காமாட்சி விளக்கு மாதிரி குளோசப்பில் ஃபிரேம் நிறைக்கும் அதிதி சங்கர், கேரக்டரை உள்வாங்கி, நுண்ணிய முகபாவனைகளோடு சிறப்பாக நடிக்கிறார்.

முதற்காதலால் பாதிக்கப்பட்ட காதல் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் ஜஸ்ட் லைக் தட் என வந்து போகிறார். உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறேன் என்ற பெயரில் அவர் பேசும் பாதி வசனங்கள் யாருக்குமே புரியல.

சோனா ஒலிக்கல் மஞ்சள் நிற ஜஸ்பர் கிரானைட் கல் மாதிரி இருக்கிறார்.

ஒரு பாதி வரை சிறப்பான வசனங்கள், ”குறில் நெடில் ஆன காதலா” என்பது போன்ற பாடல் வரிகள், இயல்பான படமாக்கல் இவற்றில் கவனம் பெறுகிறார் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, ஹேஷம் அப்துல் வஹாபின் பின்னணி இசை இரண்டும் சிறப்பு.

ஆனால், இவற்றை எல்லாம் வைத்து என்ன சொல்கிறார்கள் என்பதுதான் பிரச்சினையே.

ஒரு சின்ன உணர்வு அல்லது கதைக்கரு, அதை நிமிர்த்தி நிறுத்தும் சூழல், சரியாக வடிவமைக்கப்பட்ட இரண்டு மூன்று கேரக்டர்கள், இவற்றை எல்லாம் வைத்து சரியான பாதையில் யோசித்து மனதில் கொஞ்சம் ஊறப்போட்டு, அதிகபட்சம் ஒரு மாசம் சினிசியராக வேலை பார்த்தாலே ஒரு பாஸ் மார்க் திரைக்கதை எழுதிவிட முடியும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை.

இந்தப் படத்தின் கதை தேனும் பாலும், பாலும் பழமும், இருமலர்கள் காலத்துப் பழசு. அது கூடப் பரவாயில்லை. சில கதைகள் எவர் கிரீன்.

ஆனால், அதை எப்படி சொல்கிறோம்? மீண்டும் அதே கதையை நாம் சொல்லும்போது நமது சிக்னேச்சராக என்ன சீன் வைக்கிறோம் என்ன புதுசா சேர்த்து சொல்கிறோம் என்பது முக்கியம் அல்லவா?

அப்படி எதுவும் இல்லாமல் திரைக்கதை எவ்வளவு வீக்காக இருக்கிறது என்று பார்ப்போம்.

ஏதோ முன்கதைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் காதலை வெறுக்கிறான். சரி.!

அவனை அவளது பள்ளிக்கால ஒன்சைட் காதலி மீண்டும் சந்தித்து காதலை சொல்கிறாள். தப்பில்லை.!

மறுப்பு, இழுப்பு எல்லாம் நடக்கிறது… நடக்கட்டும்!

அவ்வளவு கரடுமுரடாக காதலை மறுக்கும் நபர், ஒரு நிலையில் காதலை ஏற்க ஓர் அழுத்தமான காரணம் வேண்டாமா?

படம் ஆரம்பிச்சு இருவது நிமிஷம் ஆச்சு. இப்ப ஒத்துக்கிட்டாதான் ரெண்டே கால் மணி நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்பதற்காக அவளது காதலை ஏற்றுக் கொண்டால் எப்படி?

இது முதல் சறுக்கல். சரி போகட்டும்.

கல்யாண உறுதி சமயத்தில் ஒரு போன் வருகிறது. அவனது மனச் சூழல், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்கிறான் என்ற நிலையில், அந்த போன் ஏதோ ஒரு சுவாரஸ்யமான பிரச்சினையைக் கொண்டு வரப்போகிறது என்று ஆவலோடு காத்திருந்தால், டெம்பிளேட் ஆக முன்னாள் காதல் கதை வருகிறது. அடுத்த சறுக்கல்.

அதிலும் வழக்கமான கல்லூரிக் காட்சிகள். காலேஜ் கல்ச்சுரல் என்று ராஜேந்தர் காலத்துக் காட்சிகள் வருகின்றன.

எட்டு வருடம் முன்பு காலேஜ் கல்சுரல் காட்சிகள் எப்படி இருந்தன என்று அப்சர்வேஷன் செய்து, காட்சிகளை வைத்து இருக்கலாம். அதோடு போச்சா?

காதல் கனிந்து செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு, அடுத்த நாள் முதல் அவள் அவனை ஒதுக்கும் காட்சிகளுக்கும் பின்னால் அவள் சொல்லும் காரணத்துக்கும் சம்மந்தமில்லை.

அதாவது அந்த காரணத்துக்குப் பொருத்தமாக இருக்கும்படி, அவள் அவனை ஒதுக்கும் காட்சிகளை ஹேண்டில் செய்யவில்லை. டைரக்ஷன் என்பது எமோஷன் பில்டப் செய்ய வேண்டிய ஒன்று.

அதுவும் அப்படி ஒரு காரணத்துக்காக எட்டு வருடம் வரை அவனை ஒதுக்கி வைக்கிறாள் என்றால் அது காதலே இல்லை.

இல்லையில்லை, அவளைப் பொறுத்தவரை அது முக்கியமான காரணம் என்றால் எட்டு வருடம் அல்ல, எண்பது வருடம் ஆனாலும் அவள் அவனை தேடி வரவே கூடாது. கேரக்டர் அசாசினேஷன்.

ரகுவரன் மாதிரி நபர் அவன் கேரக்டர் வடிவமைப்புக்கு ஏற்ப அந்த சூழலை டீல் செய்திருந்தால் கூட, கிளைமாக்ஸ் கும்மென்று எழும்பி இருக்கும்.

விஜய் நடித்த ‘லவ் டுடே’, விக்ரமன் இயக்கிய ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படங்கள் போல ஜஸ்ட் அந்த கிளைமாக்ஸ் காட்சியால் மட்டும் படம் விஸ்வரூபம் எடுத்திருக்கும். அதையும் செய்யவில்லை.

உண்மையில் இந்தப் படத்தின் ஆன்ட்டி கிளைமாக்ஸ் வரைக்குமான கதையை இடைவேளைக்குள் முடித்து, இரண்டாம் பகுதியில் வேறு கதை பண்ணி இருக்க வேண்டும்.

இவை எல்லாம் இல்லாத காரணத்தால் ஒன்ஸ் மோர்… இந்த வார ரிலீஸ் படங்கள் லிஸ்ட்டில் ஒன்மோர்.

— சு. செந்தில்குமரன்

Comments (0)
Add Comment