ஹாய் – இது நயன்தாராவுக்கான கதையா?

நயன்தாரா, கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா, நடிப்பில் முத்துச்செல்வனின் கூடுதல் திரைக்கதை வசனத்தில் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஹாய்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், ரவுடி பிக்சர்ஸ், இஸட் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார், நயன்தாரா, விக்னேஷ் சிவன், உமேஷ்குமார் பன்சால் ஆகியோர் தயாரித்தது.

காதலித்த சொந்தக்காரப் பெண்ணும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்த, வேறு யாரும் காதலிக்காத நிலையில், கோபக்கார அப்பா (பாக்யராஜ்) மற்றும் குடும்பத்தினரின் கல்யாணக் கட்டயங்களில் இருந்து தப்பிக்க சென்னைக்கு ஓடி வரும் மயில்சாமியும் (கவின்),

தான் ராசி இல்லாதவள் என்று நினைத்து அம்மா எங்கோ போய்விட, குடிகார அப்பாவை (பிரபு) சுமந்தபடி வாழ்ந்த நிலையில், மோசமான உறவினர் ஒருவர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த, அப்பாவும் அதற்கு சம்மதிக்கும் நிலையில், தப்பிப்பதற்காக சென்னைக்கு ஓடிவரும் தேவயானியும் (நயன்தாரா), ஒரே வீட்டில் ஒன்றாக தங்க வேண்டிய சூழல்.

மயிலுக்கு தேவயானி மேல் காதல் வருகிறது. ஆனால், வாங்க போங்க என்று பேசிப் பழகும் நிலையில் காதலைச் சொல்ல பயம்.

இருவரும் வேலைக்குப் போக, தேவயானிக்கு ஒரு வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்கிறது. காதலைச் சொல்ல மயில்சாமி எடுக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை.

தேவயானிக்கு மேற்படி வயதான பெண்மணி குடும்பம் மூலம், வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது. அங்கே போய் சம்பாதித்து வந்து அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவயானியின் லட்சியம்.

இதற்கிடையில் இருவரும் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் மூலம், இருவரும் சென்னையில் இருப்பது அவரவர் குடும்பங்களுக்கு தெரிய வருகிறது

இரு குடும்பமும் வருகிறது, மயில்சாமியின் அப்பா அவனை அடிக்க, தேவயானியின் உறவினர் அவளை இழுத்துக் கொண்டு போக,

தான் காதலிக்கும் தேவயானியின் வெளிநாட்டு லட்சியம் நிறைவேற, தானும் தேவயானியும் காதலிப்பதாகவும் மூன்று மாத கர்ப்பம் என்றும் அவன் கூறுகிறான்.

தன்னைக் காப்பாற்ற மயில்சாமி போடும் திட்டம் இது என்பதை உணர்ந்து அவளும் சம்மதிக்கிறாள்.

வருங்கால மருமகள் என்று நம்பி போலி கர்ப்பிணி தேவயானியை தன் வீட்டுக்குக் கொண்டு வந்து பராமரிக்கிறது மயில்சாமியின் குடும்பம்.

விசா வரும் வரை நாட்களைக் கடத்த பல பொய்களைச் சொல்லி இருவரும் கல்யாணத்தை தள்ளிப் போட,

மயில்சாமியின் குடும்பம் காட்டும் அன்பில் தேவயானி ”நான் கர்ப்பமும் இல்லை; எங்களுக்குள் காதலும் இல்லை” என்ற தனது தரப்பு உண்மையை சொல்ல, மயில்சாமியின் குடும்பம் அவனை வெளுக்கிறது.

தேவயானியிடம் மயில்சாமி காதலைச் சொன்னால் அவள் ஏற்றுக் கொள்வாள் என்று நண்பர்கள் சொல்ல, ‘செய்த உதவிகளைச் சொல்லி காதலிக்க வற்புறுத்தக் கூடாது’ என்று மயில்சாமி சொல்ல நடந்தது என்ன என்பதே இந்த ‘ஹாய்’.

கவினின் ஆரம்ப கதை வழக்கமான ஒன்று என்றாலும், சென்னை பஸ் ஸ்டாண்டில் கையில் அருவாளோடு காத்திருக்கும் நயன்தாரா கவர்கிறார்.

இளமைக் குறைபாடு தெரிந்தாலும் கண்களின் கத்தி வீச்சும், முத்தம் கொடுக்க யத்தனிப்பது போல அந்த குவிந்த உதடுகளும் இன்னும் வீரியம் குறையவில்லை. வழக்கம் போல நன்றாக நடிக்கிறார்.

உற்சாகமாக நடிக்கிறார் கவின். மெல்லிய காமெடி இழையோடச் செய்ய முயலும் அவரது நடிப்பு சில இடங்களில் பலன் தருகிறது, சில இடங்களில் பலன் தரவில்லை.

வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

பின்னணிக் குரல் சேர்ப்பின்போது சேர்க்கப்பட்டிருக்கும் சில காமெடிகள் சிரிக்க வைக்கின்றன.

ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன. ஜென் மார்ட்டின் இசை செண்டிமெண்ட் காட்சிகளில் கனம் சேர்க்கிறது.

இருக்கிற திரைக்கதையை சிறப்பாக தொகுக்கிறது பிலோமின்ராஜின் படத் தொகுப்பு.

சாதாரண ஆரம்பம், அப்புறம் கொஞ்சம் சுவாரசியம், அப்புறம் கொஞ்சம் தொங்கல், அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸ் என்று பலவீனமாகவே திரைக்கதை நகர்கிறது. தவிர பல விசயங்கள் தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போலவே இருக்கின்றன.

பாத்ரூம் போக வசதியான திணிக்கப்பட்ட பாடல்களும் வருகின்றன.

மறைந்த பாக்யராஜை, அவர் படங்களில் அந்தக் காலங்களில் இலைமறைவு காய் மறைவாக பேசியதை விட, பச்சையாக பேச வைத்திருக்கிறார்கள்.

ராதிகா கேரக்டருக்கு தேவையான காட்சிகள் இல்லை. பிரபு மட்டும் தப்பிக்கிறார்.

தேவயானியின் அம்மாவைத் தேடி மயிலசாமி போவது எல்லாம் டெம்ப்லேட். அதையாவது ஒழுங்காக செய்தர்களா என்றால் அதுவும் இல்லை.

”இன்னும் ஒன்றரை மணி நேரத்துல மயில்சாமி வந்தாகணும்” என்று அம்மா பரபரக்கும் காட்சிக்கு அப்புறம், மூன்று நாள் கழித்து மயிலசாமி வருகிறான். ஒரு கேள்வியில்லை. கூடவே இருக்கும் தேவயானியிடமும் எங்கே மயிசாமி என்று யாரும் கேட்கவில்லை.

லாஜிக்கை விடுங்கள். முக்கியமான திரைக்கதை வளர்ச்சி நேரத்தில் இவ்வளவு அலட்சியமாகவா கையாள்வது?

அதுவும் அந்த முக்கியக் கேரக்டரில் ரொம்ப சீரியசாக சென்டிமென்டாக சுஹாசினி வந்து நிற்கும்போது தியேட்டரே குபீர் என்று சிரிக்கிறது. முடியலைடா சாமி.

படம் முழுக்கவே யதார்த்தத்துக்கு நெருக்கமில்லாத ஒரு பிளாஸ்டிக் தன்மை இருக்கிறது.

வயலில் காளையைக் கட்டி உழவு செய்யலாம். யானையைக் கட்டி செய்தால் என்ன ஆகும்? வயலே நாசமாகும்.

அது போல் நயன்தாரா என்ற யானையை இந்தப் படம் என்னும் உழவு வயலில் இறக்கி விட்டு இருக்கிறார்கள். இது அவருக்கான கதையே இல்லை.

சரியான திசையில் இதன் திரைக்கதை பயணித்திருந்தால் இந்த 2 மணி நேர 24 நிமிட படத்தில் பதினைந்து நிமிடத்தைக் குறைத்து இருக்கலாம்.

இந்தப் படம் உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் ஒரே வாய்ப்புதான் இருக்கிறது.

நீங்கள் ‘டாக்ஸிக்’ படத்தைப் பார்த்த கையோடு இந்தப் படத்துக்குப் போனால் இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

— சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment