இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் சோகத்தை காதல் கலந்து சொல்லியிருக்கும் படம் ‘மெயின் வாபஸ் ஆவுங்கா’.
பஞ்சாப்பில் சுயநினைவை இழந்த ஒரு முதியவர் (நஸ்ருதீன் ஷா) திடீரென்று வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
தன் வீட்டு டிரைவரிடம், லாகூரில் இருக்கும் சர்கோதா பகுதிக்கு போகச் சொல்ல, அது எல்லைக்கு அந்தப் பக்கம் இருக்கிறதே என்கிறார் டிரைவர்.
ஆனால், டிரைவரை மிரட்டி வாகா எல்லை வரை செல்லும் முதியவரை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.
லாகூர் பாகிஸ்தானில் இருப்பதால் அங்கு செல்ல முடியாது என்று அவர்கள் சொல்ல, அந்த அதிர்ச்சியை அவரால் தாங்க முடியாமல் மயங்கி விழுகிறார்.
இங்கிலாந்தில் நகைச்சுவை பேச்சாளராக இருக்கும் முதியவரின் பேரன் நிர்பைருக்கு, தாத்தா மரணப்படுக்கையில் இருப்பதாக அழைப்பு வருகிறது.
இந்தியாவுக்கு திரும்பும் நிர்பைர், தாத்தவைக் காணச் செல்கிறார். தற்போதைய காலத்தைப் பற்றிய நினைவுகளை இழந்த தாத்தா, சிறுவயதில் சர்கோதாவில் நடந்த விஷயங்களைப் பற்றியே கூறுவது பற்றி புரியாமல் முதலில் குழம்புகிறார்.
பின்னர் அவரது புலம்பலுக்கு பின்னால் காதலின் வலி இருப்பதை உணர்ந்து அதைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள விசாரணையில் இறங்குகிறார்.
இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்க, ராட்க்ளிஃப் கோடு வரைவதற்கு முன் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் ஒன்றாக இணைந்து வாழ்கிறார்கள்.
அங்குள்ள சர்கோதா என்ற இடத்தில் கல்லூரி மாணவராக இருக்கும் கீனு, (முதியவரின் இளவயது பெயர்), தனது வகுப்புத் தோழியான அஃப்சானாவை (ஷார்வரி) காதலிக்கிறார்.
பிரிவினையின்போது அங்குள்ளவர்கள் சீக்கிய இன மக்களை இந்தியாவுக்கு துரத்துகிறார்கள். கீனு இந்தியாவுக்கு வர மறுக்கிறான்.
‘எந்த கட்டத்திலும் உன்னை மறக்க மாட்டேன். உன்னிடம் அனுமதி பெறாமல் போகமாட்டேன்’ என்று அப்சானாவிடம் உறுதி அளிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் வன்முறை அதிகமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்.
இது நடந்து பல ஆண்டுகள் ஆகியும் காதலி அப்சானாவின் நினைவு, தாத்தாவை வாட்டுவதை உணர்கிறார் பேரன் நிர்பைர்.
இறப்பதற்கு முன் காதலியுடன் அவரை பேசவைக்க, சர்கோதாவுக்கு செல்கிறான். அவனால் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
இளம் வயது கீனுவாக வேதாங் ரைனா நடித்துள்ளார், தனது கடந்த காலத்தின் முடிவடையாத வேலையை முடிக்கத் துடிக்கும் முதியவராக நஸ்ருதீன் ஷா மனதை உலுக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக காதலியின் படத்தைப் பார்த்து, அவருக்காக தான் எழுதிவைத்த கவிதையை படிக்கும் காட்சியில் கண்கள் குளமாகின்றன.
காதலின் பின்னணியில் பாகிஸ்தான் பிரிவினையின் சோகத்தை மிக ஆழமாக வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர் இம்தியாஸ் அலி. பிரிவினையின்போது நடக்கும் வன்முறை சம்பவங்களை சில காட்சிகளில் மட்டுமே காட்டினாலும், அதில் நம் இதயத்தை உறையச்செய்கிறார்.
சீக்கியப் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டும் காட்சி மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் படம் முழுக்க இயக்குநருக்கு உதவி செய்திருக்கிறது.
ஆழமான காதல் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் ‘மே வாபஸ் ஆவுங்கா’. நெட்பிளிக்ச் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.
– ராதா