திரைத் தெறிப்புகள் – 63 :
*
திமுக தலைவராக இருந்த கலைஞர் – அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி. ஜெயலலிதா என இருவருக்குமே பிடித்தமான படம், ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’.
திரையிசைத் திலகம் என்று கே.வி. மகாதேவன் அவர்களை அழைப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதை இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இசையைக் கேட்கும் அனைவருமே வழிமொழிவார்கள்.
அந்த அளவுக்கு தமிழ் நாட்டின் தனித்துவமான நாதஸ்வர இசையும், ‘சதிர்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பரத நாட்டியமும் சரிவிகிதமாக ஒன்றிணைந்திருந்தன இத்திரைப்படத்தில்.
இப்படத்தில் கத்தி வீசப்பட்டு தோளில் கட்டுப்போட்ட நிலையில், சிவாஜி நாதஸ்வரம் வாசிக்க, மேடையில் நடனப் புயலைப் போல நுழைந்து, கண்களாலும் அபிநயங்களாலும் நலம் விசாரிப்பதைப் போல, “நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?” என்று பத்மினி நடனமாடியபடியே இப்படிப் பாடியிருப்பார்:
“நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு.
இலைமறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று…”
அதற்கு நாதஸ்வரத்தை நளினமாக வாசித்தபடி கண்களாலேயே நலம் என்று விழி அசைவில் சொல்லியிருப்பார் சிவாஜி கணேசன்.
இப்பாடலை பி. சுசீலா பாட அதற்கு நாதஸ்வர வாசித்திருப்பார்கள் மதுரை சேதுராமன் – பொன்னுசாமி சகோதர்கள்.
கர்நாடக இசைக்கான வாத்தியங்களும், தமிழகத்திற்கே உரித்தான இசைக் கருவிகளும் ஒருசேர இணைந்திருக்கும் இந்தப் பாடலில், மிருதங்கமும் ஒலிக்கும். தவிலும் ஒளிக்கும்.
முதிர்ந்த திரைக் கலைஞர்களான சாரங்கபாணியும், டி.எஸ். பாலையாவும் தவில் வித்வான்களாக வந்து அமர்க்களப்படுத்தியிருப்பார்கள்.
இரு தரப்பிலான இசைக்கு, இடையில் ஒற்றை வயலின் ஒலியைப் போல, நிறைந்திருக்கும் பி. சுசீலாவின் இனிய குரல்.
“கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்.
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் – இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்…?”
சிறுசிறு சச்சரவுகளை மீறி, வாழ்க்கையில் ஒன்றுசேர நினைக்கும் ஜோடியின் குரலை எதிரொலித்து, இப்படி எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
“நடந்ததெல்லாம் மறந்திருப்போம்.
நடப்பதையே நினைத்திருப்போம்.
பொறுத்திருப்போம்.
காலம் மாறும் சந்திப்போம்…”
– என்கிற நம்பிக்கையுடன் முடிவடையும் இந்தப் பாடலை, எப்போது கேட்டாலும் அல்லது பார்த்தாலும் மனசை நிறைப்பதைப் போல் உணர வைக்கும்.
‘தில்லானா மோகனாம்பாள்’ வெளிவந்தபோது மிகவும் பிரபலமானது இந்தப் பாடல்.
அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு நடக்கும் முன்பு, இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் முன்னிலையில் ஒரிஜினலாக நாதஸ்வரம் வாசித்த சேதுராமன் – பொன்னுசாமி சகோதர்கள் ஒரு புறம் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நேர் எதிரே திரைப்படத்தில் அதை வாசிப்பதைப் போல நடிப்பவர்களாக சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும் அமர்ந்து ஒத்திகை பார்த்துள்ளனர்.
ஒத்திகை முடிந்தபோது நாதஸ்வரம் வாசித்த சகோதரர்கள் சிவாஜிடம் இப்படி சொல்லியிருக்கிறார்கள்:
“நீங்க வாசிக்கிறத பார்த்தா…. நீங்க தான்.. ஒரிஜினலா வாசிக்கிற மாதிரி அற்புதமா இருக்கு…”
நாதஸ்வர இரட்டையர்கள் சொன்ன அந்த இசை அற்புதம் இந்தப் பாடலில் நிகழ்ந்திருப்பதை இப்போது நீங்கள் கேட்டாலும் அல்லது பார்த்தாலும் உணர முடியும்.
*
-மணா.
*