தித்திக்கும் கவிதைகளைத் தந்த சிற்பி!

இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்
தெருப் புழுதியின் பூச்சு – கொஞ்சம்
இங்கும் அங்கும் பார்த்து நின்றால்
கொத்தனாரின் ஏச்சு!

பார்வைக் கணைகள் பட்டுக் கிழிந்த
பழைய ரவிக்கைக் கந்தல் – அவள்
வேர்வை மணக்கும் மார்பின் சரிவை
மூடும் சேலைப் பந்தல்

துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த
தோட்டில் வறுமை சிரிக்கும் – அவள்
முணுமுணுத்திடும் தெம்மாங்கு இசைக்கு
முத்தமிழ் முந்தி விரிக்கும்
இழைத்த கறுப்பில் குழைத்த மேனி
லெட்சுமி சிற்றாள் கூலி – அவள்
உழைக்கும் கரத்தைப் பற்றிடும் காளை
உண்மையில் புண்ணிய சாலி!

வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட விளிம்புநிலை உழைக்கும் பெண்ணின் உள்ளக் குமுறலை இதைவிட எளிய வார்த்தைகளில் வலிமையாக சொல்ல முடியுமா?

என்நிழல் என்உயிர்க்காற்று
என்ஆன்ம சங்கீதம்
சுள்ளிகள் உலர்ந்த இலைகள்
மரத்துணுக்குகள்…
வெட்டப்பட்ட அடிமரம்
பூமியின் காயமாய்
விரிசல் விட்டுக் கிடந்தது.

ஒரு மரம் செத்துவிட்டது என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையைப் படிக்கும்போது, இயற்கை ஆர்வலர்களின் இதயம் நொறுங்கிப் போகாதா?

சக மனிதனிடம் நேசம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கைச் சூழல், மனிதம் காக்கும் மகத்தான பணி, சிறுமை கண்டு பொங்கும் போர்க்குணம் – இவைகள்தான் கவிஞனின் அடையாளம் என்றால் அந்த அடையாளத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய நபர்தான் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்த பாலசுப்ரமணியம், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலைக்கல்வி… அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., (ஆனர்ஸ்) பட்டம்…

கல்வி தந்த பட்டங்களை விட, கவிஞர் என்ற பட்டம் உயர்வானதல்லவா?… காரணம் கல்வியை கற்றுக் கொள்ளலாம்… சிந்தனை உள்ளவர்கள்தானே கவிதையை எழுத முடியும்… அந்த சிந்தனையும் பாமரர்கள் மீது இருக்கும்போது கவிதை இன்னும் வீரியமாகும்… சிற்பி பாலசுப்ரமணியம் வீரியக்கவிஞர்… புகழ் பெற்ற கல்வியாளர்… பேராசிரியர்… மொழி பெயர்ப்பாளர், இதழாசிரியர் என பன்முகம் கொண்ட பல்துறை அறிஞர்…

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தலைவராகப் பொறுப்பேற்று, சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

மொழிப் பெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க மகாகவி உள்ளூர் விருது என சிற்பி பாலசுப்ரமணியத்தால் விருதுகள் விருதுபெற்றன.

சிறந்த கவிஞர்கள் எல்லாம் திரைப்பட பாடலாசிரியர் ஆவதில்லை என்ற ஒரு கருத்து காலம் காலமாய் நிலவி வருகிறது… திரையுலக கம்பனாய் விளங்கிய கண்ணதாசன் போன்றவர்கள் அந்தக் கருத்தை உடைத்திருக்கிறார்கள்… பல கவிஞர்கள் சிறந்த பாடலாசிரியர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்… இதுகுறித்து பிரபல கவிஞர் மறைந்த அப்துல் ரஹ்மானிடம் கேட்டபோது,

‘அம்மி கொத்துவதற்கு
சிற்பிகள் எதற்கு?’ – என்றாராம்…

இந்த சொல்லாடல் சிற்பி(பாலசுப்ரமணியம்)யின் காதுக்கு எட்டியதோ என்னவோ, இவர் பாடலாசிரியராக பரிணாமம் பெறவில்லை.

ஆனால், சிற்பி பாலசுப்ரமணியத்தை வற்புறுத்தி ஒரு திரைப்படப் பாடல் எழுத வைத்தார்கள்… சிற்பி எழுதிய பிரபலமான பாடல் திரையிலும் ஒலிக்கவில்லை.

‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில்,

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்கலத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே…

– என்ற பாடல்தான் சிற்பி எழுதி படத்தில் இடம் பெறாத பாடல். ஆனால், பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து, காதலை கொண்டாடியது இந்தப் பாடல்.

ஒரே பாடல்தான் எழுதியது… அதுவும் திரையில் வரவில்லை… ஆனாலும், சிற்பி வடித்த அந்தப் பாடல் தமிழர் மனங்களில் சிற்பமாய் எழுந்து நிற்கிறது…

ஒரு சிறந்த கவிஞரை பாடலாசிரியராக உருவாக்க முடியாமல் போனது திரையுலகினரின் குற்றமா?… தித்திக்கும் கவிதைகளைப் படைத்த சிற்பியின் குற்றமா?.

பட்டிமன்றமே நடத்தலாம்…

தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்…

மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே…

சிற்பியின் பாடல் வரிகள் இவை… பாடல் வராவிட்டால் என்ன? இந்தப் பாடல் காதலர்களுக்கு கிடைத்த காதல் பரிசாகவே காலமெல்லாம் விளங்குமே!

✍️ *லாரன்ஸ் விஜயன்*

Comments (0)
Add Comment