விஜய் வெற்றிபெற ரஜினி வாழ்த்து!

‘ஜெயிலர்’  படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகிறது.

இப்போது ரஜினிகாந்த், லைகா நிறுவனம் தயாரிக்க ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இது ரஜினியின் 170-வது படம். 32 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் அண்மையில் தொடங்கியது. தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் நடைபெற்றது.

பின்னர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்தது. கன்னியாகுமரியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்து படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார்.

படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினி  செய்தியாளர்களை சந்தித்தார். “கடந்த 1977-ம் ஆண்டு ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துக்காக கன்னியாகுமரி வந்தேன். 46 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது.

இங்குள்ள மக்கள் அன்பானவர்கள். அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு வருத்தம். எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லையே என்பதே அந்த வருத்தம்’ என குறிப்பிட்டார்.

‘விஜய் நடித்து வெளிவர இருக்கும் லியோ’ திரைப்படம்  வெற்றியடைய வாழ்த்துகள்.

அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாகிறது.

திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment