தமிழில் அறிமுகமாகும் ‘கேஜிஎஃப்’ இசையமைப்பாளர்!

‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ உள்ளிட்ட மெகா வெற்றிப் படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது 28வது படைப்பாக ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், “அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மையக்கரு.

எனது முதல் படத்தில் அர்ஜுன் அவர்களை இயக்கியதை மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்” என்றார்.

படத்தில், ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘கே.ஜி.எஃப்’ படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

‘பிளாஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment