இந்தியாவை ஒன்றிணைத்த இசைக்குயில் எம்.எஸ்.எஸ்.!

நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம்.எஸ்: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நேஷனல் கிரஷ் நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.

அனிருத்  இசையமைக்கும் இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் – ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் – பென்னி வாசு பிலிம்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் – ராக்லைன் வெங்கடேஷ் –  பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தின் தொடக்க விழா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும், அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்:

“நான் குழந்தை நடிகராக நடிக்கும்போது அந்த வாழ்க்கை அப்படியே தொடருமா? என்றெல்லாம் தெரியாது. வேடிக்கைக்காக என்னுடைய அப்பா சினிமாவிற்கு அனுப்பி வைத்தார். படிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு படிப்பு வரவில்லை.

அதன் பிறகு தான் எனக்கு இசை என்றால் என்ன என்பது புரியத் தொடங்கியது. படிப்பு வரவில்லை என்றதும்.. எது புரிந்ததோ..! அதை செய்யலாம் என்று எண்ணினேன். இசை புரிந்ததால் அதைத் தொடர்ந்தேன்.

ஆனால், அதுவும் எனக்கு பிரமாதமாக வரவில்லை. அதன் பிறகு தேடித் தேடி டான்ஸ் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக இருந்து, அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி கிளாப் அடித்தேன்.

தமிழ் சினிமாவின் முக்கியமான காட் ஃபாதர் எல்லீஸ் ஆர்.டங்கன். அவர் எண்பத்தியெட்டாவது வயதில் டாக்குமென்டரி படத்தை எடுப்பதற்காக இங்கு வந்தார். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அவரிடம் சென்று கையெழுத்தும் வாங்கினேன். ஆனால் அவரிடம் இணைந்து பணியாற்ற முடியவில்லையே..! என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை நீக்கியதற்காக இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

எம்.எஸ். அம்மா – இசையின் ஒன்றிணைக்கும் சக்தி. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் குரல். அவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது. இது இன்றும் என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக இருக்கிறது. 

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் அவர் குரலில் ஒலித்த ‘ரங்க பூர்வ விஹாரா..’ பாடலை கேட்டிருப்பார்கள். சுப்ரபாதத்தை ஆலயங்களில் தினமும் ஒலிக்க விடுகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம் என பல பாடல்களாக இருக்கட்டும்.

இவற்றையெல்லாம் விட ‘ரங்கபூர்வ விஹாரா..’ பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு சின்ன சந்தோஷ உணர்வு பரவும்.

அது எம்.எஸ் அம்மாவைவிட மூத்த இசைக்கலைஞர் ஒருவரின் கம்போசிங்கில் உருவானது.

அந்தப் பாடல் எம்.எஸ் அம்மாவின் குரலில் பாடும்போது அந்த பாடலுக்கான கம்போசிங்கிற்கு என்ன வயதோ, அதை தன்னுடைய இனிய குரலில் பாடி அதன் வயதை மும்மடங்காக்கி விட்டார்கள்.

நான் அவர்களை ரசிகனாகத் தான் பார்த்திருக்கிறேன். இந்த விழா அரங்கத்திற்கு அருகே சின்னதொரு மியூசிக் அகாடமி இருக்கிறது. அவர்தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரிடம் தான் நான் இசையைக் கற்றுக் கொண்டேன்.

அவர் பலமுறை எம்.எஸ். அம்மாவை பற்றி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்போதுதான் எம்.எஸ்.-ன் பெருமையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

பிறகு ‘ஹே ராம்’ படத்தை உருவாக்கும்போது அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. ‘ஹே ராம்’ படத்தின் பாடலை அவர்தான் பாட வேண்டும் என விரும்பினேன்.

ஏனெனில் என்னுடைய நாயகனான கரம் சந்த் காந்தியை பற்றிய படத்தில் அவருடைய குரல் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

ஆனால், அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தருணத்தில் உடல்நலக்குறைவு இருந்தது. அந்த வீட்டில் இருந்து கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் தான் நான் டி.கே.பட்டம்மாளை சந்தித்தேன்.

அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவர்களை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவருடைய குரலைப் பதிவு செய்தோம்.

நான் எம்.எஸ். அம்மா –  டி.கே.பட்டம்மாள் – எம்.எல் வசந்தகுமாரி ஆகிய மூன்று சக்தி வாய்ந்த ஐகானிக் பெண்மணிகளிடம் நெருங்கி பழகியுள்ளேன்.

இந்த மூவரும் என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டேன். இது எனக்கு கிடைத்த கௌரவம்.

இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்துகள்.

எப்படி பாலச்சந்தருக்கு ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ, எப்படி இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு ‘சங்கராபரணம்’ படத்தின் மூலம் திருப்பம் ஏற்பட்டதோ, அதுபோல இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத்தின் திரையிசைப் பயணத்திலும் மிகப்பெரிய மாற்றமும் திருப்புமுனையும் ஏற்படும்.

இயக்குநர் கௌதமிற்கு இது மிகப்பெரிய பொறுப்பு. இந்தப் படத்தில் தவறு நேராது. ஏனெனில் படத்திற்கான திரைக்கதையை எம்.எஸ் அம்மா எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும்.

எம்.எஸ் காட்டிய அன்பு – பாசம் –  அதைத்தான் திரையில் காண்பித்திட வேண்டும். 

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம்.எஸ் தான். அவர்களிடம் ஏராளமான திறமைகள் இருந்தன. அவர் நடிகை மட்டுமல்ல வீணை வாசிப்பார். நடனம் ஆடுவார்.

‘மீரா’ படத்தின் பாடல்கள் இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சனின் படத்தை உருவாக்கும்போது அந்த நடிகருக்கு எவ்வளவு பதட்டம் இருந்திருக்கும். அந்த பதட்டம் ரஷ்மிகாவிற்கும் இருக்கும். அதனை களைவதற்கு அருமையான குழுவும் இருக்கிறது. 

என்னால் ‘அவ்வை சண்முகி’ போன்ற வேடத்தைப் போட்டு நடிக்க முடியும். ஆனால், எம்.எஸ். அம்மாவாக ஒருபோதும் நடிக்க முடியாது. 

எம்.எஸ் அம்மா இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. குறிப்பாக தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி.

இந்த அரங்கம் ஏராளமான இசைக் கலைஞர்களையும், இசை ரசிகர்களையும் உருவாக்கியது. இங்கு இந்த விழா நடைபெறுவது தான் பொருத்தமானது.

எம்.எஸ். அம்மாவின் புகைப்படம் இங்கு மட்டுமல்ல, திருப்பதியிலும் இருக்கும்… ஐக்கிய நாடுகள் சபையிலும் இருக்கும்…. அவருடைய புகைப்படம் இல்லாத இடமே இல்லை. 

இசை அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் எம்.எஸ். அம்மாவின் குரல் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது. அவரது சுயசரிதையை உருவாக்குவதால் இந்தியாவும் தமிழகமும் பெருமை கொள்கிறது” என்றார்.

Comments (0)
Add Comment