ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக என்று சகலமுமாக ஆர்.ஜே. பாலாஜி நடித்து எழுதி இயக்க, கருப்ப சாமி கதாபாத்திரத்தில் இரண்டு பாட்டு மூன்று சண்டைகளோடு ஒரு கம்பீரமான கவுரவத் தோற்றத்தில் சூர்யா நடிக்க,
‘போனாப் போவுது கதாநாயகி என்று சொல்லிடலாம்…’ என்கிற மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து, திரைக்கு வந்திருக்கும் படம் கருப்பு.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு.
ஆலடியான், ஆப்பூரான், குங்குமவல்லி அம்மன், இசக்கி அம்மன், முனியாண்டி, மாடன் தமிழ்நாட்டு கிராமியத் துடியான தெய்வங்களில் ஒன்றான கருப்பசாமியை குறிக்கும் சொல்லே கருப்பு.
கேரளாவில் இருந்து ஒரு மலையாள அப்பாவும் (இந்திரன்ஸ்) அவரது மகளும் (அனகா மாயா ரவி) அந்தப் பெண்ணின் ஆபரேஷனுக்காக அறுபது பவுன் நகையை எடுத்துக் கொண்டு சென்னை வருகின்றனர்.
ரயிலில் இருந்து இறங்கும்போது சில ரவுடிகள் இவர்களை மிரட்டி அந்த நகையைத் திருடி விடுகின்றனர்.
போலீசிடம் புகார் செய்ய, அவர்களைப் பிடிக்கும் பெண் இன்ஸ்பெக்டர் பதினைந்து பவுன் நகையை எடுத்து வைத்துக் கொண்டு மற்ற நகையைத்தான் எப்.ஐ.ஆரில் குறிப்பிடுகிறார்.
அவர்கள் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி) என்ற வக்கீலை பார்க்கின்றனர். அவன் அயோக்கியத்தனமான, அற்பமான, கேவலமான, மிருகத்தனமான – எப்போதும் ஹிஸ்டீரியா வந்தவன் போல கத்தும் வக்கீலாக இருக்கிறான்.
அவன் இந்த அப்பாவையும் மகளையும் ஏமாற்றுகிறான்.
‘எப்போது நகை வரும், அதுவும் முழுசாக வருமா? எப்போது ஆபரேஷன் செய்வது?’ என்று தெரியாத வேதனையான மனோ நிலையில் அப்பாவும் மகளும் இருக்க, பேபி கண்ணனும் அவன் அடிப்பொடிகளும் இவர்கள் காசில் மட்டன், சிக்கன் பிரியாணியாக தின்று கொழுக்கிறார்கள்.
ஒரு நிலையில் தட்டிக் கேட்கும்போது நகையை இழந்த அவரையே அடிக்கிறார்கள்.
கோர்ட் வளாகத்தில் ஒரு கருப்ப சாமி கோவில் இருக்கிறது. நீதி கிடைக்காதவர்கள் மிளகாய் அரைத்து அந்த கருப்பன் சிலைக்கு பூசினால் அவர்களுக்காக கருப்பன் இறங்குவான் என்று சொல்கிறார்கள்.
அவர் அப்படி அரைத்துப் பூச, கருப்பு (சூர்யா) கம்பீரமாக வருகிறது (இதற்குள் படம் நாப்பது நிமிஷம் ஓடிப் போயே போச்சு).
தவறு செய்யும் வக்கீல் அணியை அவர் அடிக்க, படத்தின் ஹீரோவுமான பேபி கண்ணன் கருப்புவிடம் ”நீ கடவுளா வந்து என்ன வேண்ணாலும் செய்யலாம். ஆனா அது போங்கு ஆட்டம். மனிதனாக வந்து சாதித்துக் காட்டு” என்கிறான். ஒத்துக் கொள்கிறது கருப்பு.
ஆனால், கருப்பு வக்கீலாக வாதாடி நகையை மீட்பதற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் இறந்து போகிறாள்.
தவிர பேபி கண்ணனும் அவன் ஆட்களும் தங்களிடம் கேஸ் கொடுத்த ஆட்களையே மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். கோபப்பட்ட கருப்பு என்ன செய்தது என்பதே படம்.
கருப்பு வழிபாடு என்பது உணர்வு ரீதியாக பரம்பரை பரம்பரையாக கலந்த விஷயம்.
நகரத்தில் வாழ்பவர்கள் மனதிலும் இன்று வாழும் கிராமிய தெய்வமான கருப்பசாமி பற்றிய படம் என்பது இந்தப் படத்தின் முதல் பலம் மற்றும் உயிர்ப்பு.
இரண்டாவது, சற்றே பெரிய கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் சூர்யா. கருப்பு தோற்றத்தில் அசத்துகிறார். அதுவும் கடைசியில் அவர் கருப்புவாக ஆடும் ஆட்டம் பிரம்மிப்பு. அசத்தி இருக்கிறீர்கள் கவுரவ நடிகர் சூர்யா அவர்களே. பிரமாதம்.
மூன்றாவது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தரம். கருப்பு (சம்மந்தப்பட்ட காட்சிகள்)தான் இந்தப் படத்தைக் காப்பாற்ற ஒரே கதி என்று கடைசியில் புரிந்துகொண்டு நன்றாக செலவழித்து படமாக்கி இருக்கிறார்கள்.
கோர்ட்டில் ஏழை எளிய மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை (கொஞ்சம் யதார்த்தத்துக்கு மீறி தெலுங்கு பாணியில் எடுத்து இருந்தாலும் கூட) நம்மைப் பொறுத்தவரை மிக சிறப்பான விஷயம்.
மகளின் ஆபரேஷனுக்காக சென்னை வரும் அப்பா கதாபாத்திரத்தில் இந்திரன்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் கண்ணாடி சிதற கீழே விழும் காட்சியில் அவ்வளவு நேர்த்தி.
இவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் மற்ற எல்லாமே பிடுங்கி எரிய வேண்டிய – ம்ஹும் – அடித்திருக்கவே கூடாத ஆணிதான்.
மகளின் ஆபரேஷனுக்காக சென்னை வரும் அந்த அப்பா அறுபது பவுன் நகையை மஞ்சப் பையில் சுருட்டி எடுத்துக்கொண்டு கேரளாவில் இருந்து சென்னை வருவாராம்.
(ஒருவேளை ஒரு பண்டமாற்று முறையில் டாக்டரிடம் கொடுத்து ஆபரேஷன் செய்ய வந்தாரா என்பது திருப்பதி பாலாஜிக்குக் கூட தெரியாது)
பொதுவாக மலையாளப் படங்களில் தமிழர்கள் என்றால் அயோக்கியன், சோம்பேறி, திருடன், பொய்யன், பெண்களை வைத்துப் பிழைப்பவன் என்று காலகாலமாக, வேண்டும் என்றே, சம்மந்தம் இல்லாமல் காட்சிகள் வைப்பார்கள்.
பெரிய பெரிய மலையாள ஹீரோக்கள் கூட தமிழர்களை தமிழ்ப் பெண்களை கேவலமாகப் பேசும் காட்சிகளில் நடிப்பார்கள். துல்கர் சல்மான் வரை அதற்கு யாரும் விதிக்கவில்லை.
மலையாளப் படங்கள் தமிழ்நாட்டில் ஓட ஆரம்பித்த பின்னர்தான் அது மாறியது. சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா என்றால், “சங்கமா அப்படின்னா…?” என்று கேட்பதில் எப்போதுமே அவர்கள் தெளிவானவர்கள்.
ஆனால், அவர்கள் கூட தமிழர்களை இப்படி கேவலப்படுத்தியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களைக் கேவலப்படுத்தும் காட்சிகள் இந்த படத்தில்.
சென்னையில் அந்த மலையாளக் குடும்பம் சந்திக்கும் போலீஸ், வக்கீல்கள், ஜட்ஜ் எல்லோரும் அயோக்கியர்களாக மோசமானவர்களாக இருக்கிறார்கள்.
மாறாக அந்த கேரள அப்பா மகள் இருவரும் உத்தமர்களாக, சத்தியர்களாக, நித்தியர்களாக, மனிதர்குல மாணிக்கங்களாக, ஏழைக்கு இரங்குபவர்களாக, அன்பின் ஆலமரமாக பண்பின் பச்சைப் பசும் புல்வெளியாக 2026 ஆம் ஆண்டின் புத்தர்களாக இருக்கிறார்கள்.
படத்தின் அந்த அப்பாவும் மகளும் பேசிக் கொள்ளும் பல காட்சிகள் மலையாளத்திலேயே ஓடுகின்றன. சப் டைட்டில் இல்லை.
தமிழ் ரசிகர்களுக்கு புரியாவிட்டால், ‘கேசமே போச்சு, கூந்தலே போச்சு’ என்று படம் எடுத்து இருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் “ஊராடா இது” என்று காறித் துப்புகிறாள் அந்த மலையாளப் பெண். அது மட்டும் தமிழில் தெளிவாக எடுத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு கேடு கேட்ட காட்சியை மலையாளப் படத்தில் கூட வைத்தது இல்லையே.
இன்னொரு காட்சியில் சோஷியல் மீடியா மூலம் கும்பலைக் கூட்டி ஒரு தவறான போராட்டத்தை போலீஸ் ஸ்டேஷன் முன் நடத்துவார் ஆர்.ஜே.பாலாஜி.
போலீசை மிரட்டி காசு கேட்பார். “தராவிட்டால் விடமாட்டேன், மெரினா போராட்டம் ஞாபகம் இருக்குல்ல…” என்பார்.
அதன் மூலம் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் கேவலப்படுத்துகிறார் ஆர்.ஜே. பாலாஜி.
ஆர்.ஜே.பாலாஜிகளின் நோக்கம் என்ன? இப்படி ஒரு படத்தை ட்ரீம் வாரியர்ஸ் ஏன் எடுக்க வேண்டும், சூர்யா ஏன் நடிக்க வேண்டும்?
படத்தில் வரும் நல்லவர்கள் எல்லாம் மலையாளக் கதாபாத்திரமாக அல்லது மேட்டுக்குடி வெள்ளை வர்ண நபர்களாக இருக்கிறார்கள். கெட்டவர்கள் எல்லாம் தமிழர்களாக – நீதிபதியாகவே இருந்தாலும் – கறுப்பானவர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் ‘ஷங்கர்’ படத்தை எடுத்து இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
கருப்பு பற்றிய ஒரு படத்தில் கறுப்பானவர்களை எல்லாம் அயோக்கியர்கள் என்று கூறி, தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்களை கேவலப்படுத்துவதை எல்லாம் என்ன சொல்ல.
அந்த மலையாளப் பெண்ணின் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ”தூ.. சினிமாவாடா இது?” என்று யாராவது சொல்லாமல் இருக்க வேண்டும்.
ஒருவேளை அப்படி யாராவது சொன்னால் அதை மறுக்க பலவீனமாகவாவது சில பாயிண்ட் வேண்டும் அல்லவா?
ஒரு உப்பு சப்பில்லாத கேரக்டரில் திரிஷா வருகிறார். திரிஷா மீது ஆர்.ஜே.பாலாஜிக்கு என்ன கோவம் என்று தெரியவில்லை. அவரது முகம் தோற்றம் ஆகியவை ‘அப்படி’ இருக்கிறது.
இப்படித் தோற்றத்தில் இதுவரை திரிஷா எந்தப் படத்திலும் வந்ததே இல்லை. என்ன கோபம் இருந்தாலும், ஜானுவை இப்படியா காட்டுவது?
அதேபோல ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் போன்ற ஒரு கேரக்டரில் நல்ல நடிகை சுவாசிகா வருகிறார். அதே போல ஒரு உப்பு சப்பில்லாத கேரக்டரில் ஷிவதா.
அதாவது, தான் படம் முழுக்க வர வேண்டும் என்பதற்காக சூர்யா முதற்கொண்டு எல்லோரையும் பலி கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
சரி இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஆர்.ஜே.பாலாஜியின் பர்சனல் சந்தோஷமாகவே இருக்கட்டும்.
படமாக மதிப்பீடு செய்ய திரைக்கதை எப்படி இருக்கிறது என்று பார்த்தால்..
கோர்ட்டுக்குள் புகுந்து வக்கீல்களை கருப்பு அடிக்கும்போது, “அது தப்பு. நீ கடவுளாக இல்லாமல் மனிதனாகவே செயல்பட வேண்டும்” என்று கருப்புவிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
ஆனால், அடுத்த காட்சியிலேயே சாமியாக கருப்பு, ஆர்.ஜே.பாலாஜிக்குள் புகுந்து, கோர்ட்டில் உண்மைகளை உளற வைக்கிறது. அதுவும் தெய்வ சக்திதானே. அதை ஏன் ஆர்.ஜே.பாலாஜி தடுக்கவில்லை.
கருப்பசாமி சத்தியத்தை மீறியது என்பதுதான் அவர் சொல்ல வரும் கதையா? இல்லை எனில் சத்தியம் கேட்கும்போதே செவுளில் ரெண்டு கொடுத்து இருக்கலாமே கருப்பு?
இப்படி திரைக்கதையாகவும் சொதப்பி இருக்கிறது படம்.
கருப்பு தொடர்பான காட்சிகளில் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
சாய் அப்யங்கரின் இசை சோபிக்கவில்லை. இவர்கள் மாஞ்சு மாஞ்சு இசை அமைத்தும் கருப்பு சாமியின் பாரம்பரிய பாடல் ஒளிக்கும் காட்சிதான் கவனம் கவர்கிறது.
கலைவாணனின் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கிறது.
அருண் வெஞ்சர மூடுவின் கலை இயக்கம். கருப்பு பற்றிய புரிதலே சரியாக இல்லாத கலை இயக்கம்.
சண்டைக் காட்சிகளில் கருப்புவை உணர வைக்கிறார் சண்டை இயக்குனர் விக்ரம் மோர்.
மூக்குத்தி அம்மன், கருப்ப சாமி, அடுத்து மாரியம்மன், செல்லியம்மன், முனியாண்டி என்று நாட்டுப்புற தெய்வங்களை கிண்டல் செய்து – சரிக்கு சமமாக சவால் விடும் படங்களை எடுக்கும் இவர்கள்,
அதே ராமர் கிருஷ்ணர், மகா விஷ்ணு போன்ற கடவுள்களை எல்லாம் இப்படி ஒண்டிக்கு ஒண்டி வா என்று சொல்லி படம் எடுக்க மாட்டார்கள். அங்கே தான் இருக்கிறது அவர்களின் நிஜ வர்ணம்.
அதே நேரம் இப்படி கருப்பு, முனியாண்டி என்று கிராம தெய்வங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காசாக்கிக்கொண்டு அந்த தெய்வங்களையே intellectual arrogance மூலம் கிண்டல் செய்யும் படங்கள் எடுக்கலாம்.
இது புரியாமல் எளிய மக்களே இவர்களுக்கு கைதட்டுவார்கள்.
இப்படி இருந்தும் இந்தப் படம் மக்களின் வரவேற்பை பெற இரண்டு காரணங்கள் ஒன்று கருப்பு. இன்னொன்று சூர்யா.
மொத்தத்தில் கருப்பு… வெளுப்பின் வஞ்சகம்.
– சு. செந்தில் குமரன்