மேடி மனோஜ், ஸ்வேதா அபிராமி, ரவிச்சந்திரன், ஆதர்ஷ் மதிகாந்த், தமிழ் பாலா, அபிமன்யு மனோஜ் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி ஸ்ரீதிகா இயக்கி இருக்கும் படம் பி.ஆர்.ஜி ஜெகந்நாதன் பிக்சர்ஸ் தயாரிப்பு.
ராமாயணத்தில் இந்திரஜித்துவிடம் போரில் வீழ்ந்த லக்ஷ்மணனைக் காப்பாற்ற, சில மூலிகைகளைக் கொண்டு வரும்படி அனுமனிடம் ராமன் சொல்ல, மூலிகையின் பெயர்கள் மறந்துவிட்ட காரணத்தால், அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தான் அல்லவா? அதில் இருந்து ஒரு கதை பண்ணி இருக்கிறார்கள்.
ஐந்து நண்பர்கள் – அதில் ஒருவர் பெண் – ஜாலியாக ஒரு மலை வாசஸ்தலத்துக்கு பிக்னிக் வருகிறார்கள்.
ஒரு பழைய மாளிகைக்குள் போகிறார்கள். ஆவிகளைப் பார்த்து பயப்படுகிறார்கள். அதில் ஒருவன் அங்கே இருக்கும் ஒரு புதையல் போன்ற குடுவையை எடுத்து வந்து விடுகிறான்.
வீட்டுக்குள் வந்து குடுவையை உடைக்க, உள்ளே இருந்து பரமபதம் போல ஒரு விளையாட்டு வரையப்பட்ட துணி வெளியே வருகிறது. ஒரு பகடையும் வருகிறது. ஆங்கிலத்தில் ஒரு பெண் குரல், ”பகடையை உருட்டி விளையானால் கேட்டது கிடைக்கும்” என்கிறது.
ஆரம்பத்தில் சாக்லேட், செல்போன், வாட்ச் எல்லாம் கேட்கக் கேட்கக் கிடைக்கிறது.
ஒரு நிலையில் அவர்கள் குழுவில் உள்ள பெண் பகடையை உருட்ட, ‘உனக்கு விபத்து நடக்கும்’ என்று வருகிறது.
அதோடு அந்தப் பெண் மாயமாக மறைந்து, சாலையில் விபத்துக்கு ஆளாகிறாள். சிலர் அவளைக் காப்பாற்றுகின்றனர். ஆனாலும் அவள் இறந்து விடுகிறாள்.
ஆன்மா பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர், “அவளைக் காப்பாற்ற இமயமலையில் இருந்து மூலிகை கொண்டு வர வேண்டும்.
அதுவும் பதினோரு நாட்களுக்குள் கொண்டு வந்தால்தான் அவளை பிழைக்க வைக்க முடியும்” என்கிறார்.
அவர்கள் கிளம்பி இமயமலைக்கு போகின்றனர். அதே நேரம் மற்ற நண்பர்கள் வீட்டில் மந்திர விளையாட்டில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர்.
ஜமீந்தார் ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்து, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட, இளவரசி ஒருவரின் ஆவிதான் அந்த ஆபத்தான விளையாட்டை நடத்துகிறது.
விளையாட்டை நிறுத்தினால் விளையாடுபவர்களின் உயிருக்கே ஆபத்து. விளையாடினாலும் சித்திரவதை. வீட்டுக்குள் புதிதாக உள்ளே வரும் நபர்களும் சிக்கிக் கொள்கின்றனர்.
விபத்தில் சிக்கி இறந்துபோன தோழி, மூலிகை மருந்தால் பிழைக்க வைக்கப்பட்டு அவள் மீண்டும் நண்பர்களிடம் வந்தால்தான் இளவரசியின் ஆன்மா விளையாடும் விபரீத விளையாட்டு நிற்கும். எல்லோரும் பிழைக்க முடியும்.
உயிர்காக்கும் மூலிகை கிடைத்ததா? இறந்த தோழி பிழைத்தாளா? விளையாட்டில் சிக்கிய நண்பர்கள் பிழைத்தார்களா? பதினோராம் நாள் நடந்தது என்ன என்பதே இந்தப் படம்.
கொஞ்சம் பேய், கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் காடு மலை, கொஞ்சம் புராணம் பேசும் ஃபேண்டஸி பூச்சு – இவைதான் இந்தப் படத்தின் பலம். ஆனால் இவை மட்டும்தான்.
நடித்தவர்கள் எல்லாம் படு செயற்கையாக நடிக்கின்றனர். ஒருவர் கூட இயல்பாக சிறப்பாக நடிக்கவில்லை.
லொக்கேஷன் காரணமாக செல்வாவின் ஒளிப்பதிவு பாஸ் மார்க் வாங்குகிறது. அதே போல சில இடங்களில் அனிலின் இசை கவனிக்க வைக்கிறது.
சும்மா காட்டுக்குள் பலரும் நடப்பது நிற்பது உட்காருவது என்று காட்சிகளை இழுக்கிறார்கள்.
“இங்க என்னவோ நடக்குதுடா. உடனே இங்க இருந்து தப்பிக்கணும்” என்று ஒரு கதாபாத்திரம் பேசினால்.
உடனே பதில் சொல்லும் கேரக்டரும், “ஆமாடா. இங்க என்னவோ நடக்குதுடா. உடனே இங்க இருந்து தப்பிக்கணும்” என்று கிளிப்பிள்ளை போல அப்படியே ஒப்பிக்கிறது.
இதற்கு எதற்கு இன்னொரு கதாபாத்திரம்?
எங்கே போகிறோம் என்று யாருக்குமே தெரியாது. ஆனா ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமும் ”இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம்” என்று சொல்கிறார்கள்.
அதாவது வசனம் என்று எழுவோம் எழுதப்படவில்லை, ஷூட்டிங்கில் எதையோ பேச வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். கொடுமை.
ஆளை சுருட்டும் தாவரம், சுவாசித்தல் போதை தரும் தாவரம் என்று உலக அளவில் பிரபலமான டெம்ப்ளேட்கள் எல்லாம் இருக்கும். ஆனால், மேக்கிங்கில் நன்றாக வரவில்லை.
வழக்கமானது என்றாலும் கொஞ்சம் சுவாரஸ்யமான இந்தக் கதை நல்ல படைப்பாளிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் வசம் சிக்கி இருந்தால், மே மாதமும் அதுவுமாய் குழந்தைகளை தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.
– சு. செந்தில்குமரன்