‘ஜெயிலர் 2′ – அதகள கமர்ஷியல் கதகளி!

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மாஸ்டர் ரித்விக், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, வித்யாபாலன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சரமூடு, நமோ நாராயணன், ராம்ஸ் ராமச்சந்திரன் நடிப்பில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோரின் கவுரவத் தோற்றத்தில் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.

2023 ஆம் ஆண்டு அவரே இயக்கி வந்த ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சி. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பு.

அகில இந்திய சிலைக் கடத்தல் நெட் ஒர்க்கின் ஒரு முக்கிய நபரான வர்மனை (விநாயகன்) திகார் ஜெயிலில், ஜெயிலராக இருந்து ரிட்டையர் ஆன முத்துவேல் பாண்டியன் கொல்வதும் குற்றத்தில் தனது மகன் அர்ஜுனுக்கு (வசந்த் ரவி) தொடர்பு இருப்பது தெரிந்து மகனையே கொல்வதும்,

மகன் ஓர் அயோக்கியன் என்பது மனைவி (ரம்யா கிருஷ்ணன்) மருமகள் (மிர்னா) பேரன் ரித்து (மாஸ்டர் ரித்விக்) ஆகியோருக்கு தெரியக் கூடாது என்பதால், அவனைக் கொன்ற விஷயத்தையே சொல்லாமல் மறைப்பதும் ஜெயிலர் முதல் பாகம் படத்தின் முக்கிய விஷயங்கள்.

வர்மனுக்கு மேலே உள்ள சிலைக் கடத்தல் நெட் ஒர்க், பெரிய தலைகள், மூலப் புள்ளி இவற்றை வைத்து இந்த இரண்டாம் பாகம் விரிகிறது.

வேலைக்கு போகும் மருமகள், பள்ளிக்கு போகும் பேரன், வீட்டைப் பார்த்துக் கொள்ளும் மனைவி என்ற சூழலில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்கிறார் முத்துவேல் பாண்டியன் (ரஜினி காந்த்).

ரோட்டில் அடித்துக் கொள்ளும் ரவுடிகளில் ஒருவன் கடைக்குள் நுழைந்து கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்களை, அடிப்பதற்காக எடுத்துக் கொண்டு போக முயல, அவனைத் தடுக்கிறார் ஜெயிலர்.

அவன் தனது உறவினரான பஞ்சாயத்து போர்டு அதிகாரியிடம் (பக்ஸ் பகவதி பெருமாள்) சொல்ல, அவர் ஜெயிலரின் வீட்டுக்கு வரும் குடிநீரில் கசடு கலக்கிறார். ஒரு நிலையில் பொறுக்க முடியாமல் அவனை அடிக்கிறார் முத்துவேல் பாண்டியன்.

அவன் லோக்கல் தாதா மூர்த்தியிடம் (நமோ நாராயணன்) சொல்ல, அந்த தாதா ஜெயிலர் யார் என்று தெரியாமல் அவரை தன் கார் டிரைவர் ஆக்கி, ரொம்ப அவமானப்படுத்துகிறான்.

தான் யார் என்பது வெளிப்படக் கூடாது என்பதற்காக அவமானங்களை பொறுத்துக் கொள்கிறார் முத்துவேல் பாண்டியன்.

வர்மனின் நண்பனான திலீப் (சூரஜ் வெஞ்சாரமூடு) இப்போது அந்த அகில இந்திய சிலைக் கடத்தல் கும்பலின் தென்னிந்திய புள்ளியாக, கேரளாவில் இருந்து இயங்குகிறார்.

கட்டப் பஞ்சாயத்தில் பணம் பறிக்கும் மூர்த்தியிடம், “சிலையைக் கடத்தி விற்றால் நிறைய பணம் கிடைக்கும்” என்று சொல்லி அவனை திலீப்பிடம் கோர்த்து விடுகிறார் ஜெயிலர். அதன் மூலம் சிலைக் கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை அறிய திட்டமிடுகிறார்.

இதற்கிடையில் சிலைக் கடத்தல் நெட் ஒர்க்கின் அகில இந்திய தலைமையை பை பாஸ் செய்து தொழில் செய்தால், நிறைய பணம் வரும் என்று திலீப் திட்டமிட,

வர்மனைக் கொன்றதோடு, அகில இந்திய சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து ஜெயிலரால் கைப்பற்றப்பட்ட மூன்று கண்டைனர் சிலைகளையும் மீட்க, கோவாவில் இருந்து இறங்கி வரும் போதி கல்பக் (எஸ்.ஜே.சூர்யா) ஜெயிலரைக் குறி வைக்கிறான்.

கோவாவில் போதி கல்பக், அவனது சகோதரி காந்தா கல்பக் (வித்யா பாலன்), அவர்களின் அப்பா சக்ரி கல்பக் (மிதுன் சக்ரவர்த்தி) ஆகிய, சிலைக் கடத்தல் நெட் ஒர்க்கிங் மையமான இந்த ராட்சஷ வலைக்குள் ஜெயிலரும் அவரது குடும்பமும் மாட்ட,

ஆக்ஷனுக்கு அப்பாற்பட்டு ஒரு மாபெரும் பேரிடியை ஜெயிலருக்கு கல்பக் குடும்பம் தர, நடந்தது என்ன என்பதே ஜெயிலர் 2.

அதகள, 360 டிகிரி கமர்ஷியல் கதகளி இந்தப் படம்.

”அம்பது வருஷமா என்னை முடிக்கணும்னு நிறைய பேர் டிரை பண்ணாங்க. ஆனா, முடியல. முடியாது.” என்று கடைசியில் ரஜினி பேசும் வசனம் நூற்றுக்கு நூறு நியாயம் செய்கிறது இந்தப் படம். மறுபடியும் ஒரு சூப்பர் ஸ்டார் மேஜிக்.

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் நெல்சன் ரஜினிக்கு கொடுத்த அந்த வயதுக்குரிய கெட்டப்.

அதில் ரஜினியின் ஆக்ஷன் ஹீரோ இமேஜை ஏற்றி, காமெடி சேர்த்து, ரஜினியை எந்தக் காட்சியில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தைரியமாக எடுத்த முடிவும் அதைக்கேற்ப இயக்குநர் நெல்சன் வடிவமைத்த டிஸைனும்தான்.

அதை இந்தப் படத்தில் இன்னும் பலமாக்கி படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், அப்புறம் கவுண்டமணி அப்புறம் யோகிபாபு என்று சில காமெடி நடிகர்கள் மட்டுமே பெரிய பெரிய ஹீரோக்களை எல்லாம் அவ்வப்போது கலாய்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அப்புறம் ஒரு நிலையில் படம் சீரியஸ் ஆகும்போது அந்த காமெடி ஹீரோக்கள் ஹீரோவுக்கு உதவுவது போல, சூப்பரான சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் வைத்து அந்த மைலேஜையும் பெற்றுக் கொள்ளலாம்.

அதை படத்தின் டைரக்டரே தனது பாயிண்ட் ஆஃப் வியூவில் செய்தால் எப்படி இருக்கும்?

இதுதான் நெல்சன் திலீப்குமார் பிடித்த தனக்கே உரிய தனி பாணி. (அதை எடுத்தவுடன் ஒரு ஹீரோவிடம் முயன்றதால்தான் அந்தப் படம் எடுத்து முடிக்கப்படவே இல்லை)

அடுத்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தில் அதை பண்ணிப் பார்த்து வெற்றி கண்டார். அப்புறம் சிவகார்த்திகேயன். அப்புறம் ரஜினி. இந்தப் படம் அதே பாணியில் அமைந்து இருக்கிறது.

கடவுளே கதாநாயகனாக வந்தாலும் அந்த காட்சியில் எந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகமோ அதில் நடிக்கும் நடிகருக்குதான் அந்த பிரேமில் முக்கியத்துவம் என்ற நெல்சனின் பாணி இதிலும் இருக்கிறது.

இந்தப் படத்திலும் பல காட்சிகளில் மற்ற நடிகர்கள் முன்னணியில் நிற்க, ரஜினி பின்னாலேயே நிற்கிறார். ஆனாலும் மாஸ்.

டார்க் காமெடியில் பின்னி எடுக்கும் முதல் பாதி, ஆக்ஷனில் புரட்டி எடுக்கும் இரண்டாம் பகுதி, ரசனையான கிளாமர், அழுத்தமான செண்டிமெண்ட்.

அதிலும் ஆயிரம் துப்பாக்கிகள் வெடித்தாலும் கிடைக்காத அதிரடியை, ஒரு சென்டிமென்ட் சீனில் (கொஞ்சம் லாஜிக் மிஸ் ஆனாலும்) சீனில் வைத்துக் கொடுத்த விதம் என்று…

கமர்ஷியல் ஸ்கிரிப்ட், காமெடிக் காட்சிகள், கண்ணைக் கவரும் மேக்கிங் என்று இயக்கி இருக்கிறார் நெல்சன்.

எங்கே போனாலும் சரியான டைமுக்கு திரைக்கதை, வீட்டுக்கும் குடும்பக் காட்சிகளுக்கும் வந்து விடுகிறது. அந்த மீட்டர் அருமை.

அப்படிப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப ஆரம்ப கட்ட பவ்யமான நடிப்பு, மெல்லிய முகபாவனைகள் மூலம் கொண்டு வரும் ரகளை, அப்புறம் வெடிக்கும் வீரியம் என்று ஸ்கிரீன் பிரசன்ஸில் தகதகவென ஜொலிக்கிறார் ரஜினிகாந்த்.

தனது ஐம்பதாண்டு கால இமேஜ் கட்டி எழுப்பலை இன்னும் கூர் தீட்டிக் கொண்டே இருக்கிறார். கிரேட்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். பின்னணி இசையும் அருமை.

ஆட்டுக்கார அலமேலு உள்ளிட்ட படங்களில் சங்கர் கணேஷ் ஆட்டுக்கு போட்ட ஒரு தீம் மியூசிக்கை சற்றே நவீனப்படுத்தி போட்டு இருப்பது ரசிக்க வைக்கிறது.

கேரளா, மைசூர், கோவா லொக்கேஷன்களை பிரம்மாண்டமாக காட்டும் அதே நேரம் எளிமையான காட்சிகளையும் படாடோபமான காட்சிகளையும் ஒளிப்பதிவில் பிரித்து உணரும்படி தருகிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்.

முதல் பாதியில் குட்டிக் குட்டியாக வரும் காட்சிகளைத் தொகுத்த விதமாகட்டும், இரண்டாம் பகுதியில் வரும் நீளமான காட்சிகளைத் தொகுத்ததாகட்டும் நடனக் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்று நிர்மலின் படத்தொகுப்பு நைஸ்.

ஆனால், மொத்தத்தில் படத்தின் நீளம் இரண்டாம் பகுதியில் உணர வைக்கிறது.

ஒரு புள்ளியில் தொடங்கும் படத்தின் ஆர்க் விரிந்து கொண்டே போவது அபாரம்.

சுள்ளான் ரவுடிகள், அப்புறம் அரசாங்க ரவுடி, அப்புறம் கட்டைப் பஞ்சாயத்து தாதா என்று தொடர்ந்து ஒரு நிலையில் சிலைக் கடத்தல் தாதா, அப்புறம் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி என்று அட்டகாசமான நடிகர்கள் வில்லன்களாக இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதேநேரம் சிவராஜ் குமார், ஹ்ரித்திக் ரோஷன், மோகன்லால், விஜய் சேதுபதி என்று ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் குதித்துக் கொண்டே இருப்பது வழக்கமான டெம்ப்லேட்.

அதிலும் சிவராஜ் குமார், ஹிரித்திக் ரோஷன் பகுதியாவது ஜஸ்ட் ஓகே. கிளைமாக்ஸ் விஜய் சேதுபதி மட்டும் நைஸ். மோகன்லால் காட்சிகள் நோ யூஸ்.

எஸ்.ஜே. சூர்யா முகபாவனை, உடல் மொழிகள், குரல், நடிப்பு என்று வழக்கம் போல பிரமாதம்.

சூரஜ் வெஞ்சரமூடு நம்ப வைக்கும் நடிப்பு. ஒரு சீனில் வரும் விநாயகன் அசத்தல்.

யோகிபாபுவின் காமெடிகள் ஒரு இடைவேளைக்கு பிறகு ரசிக்கும்படி இருக்கிறது.

வித்யா பாலன் கேரக்டரும் நடிப்பும் அபாரம். ரஜினிக்கும் அவருக்குமான ‘குட்மார்னிங் சண்டை’ லகலக ரகளை. (ஜெயிலர் 3 வந்தால் இவர்தான் முதன்மையான மெயின் வில்லி)

மிதுன் சக்கரவர்த்தி ஜஸ்ட் லைக் தட் சிறப்பாக நடிக்கிறார்.

இவர்கள் எல்லோரையும் பிரேமில் வைத்துக் கொண்டு அங்கேயும் தனது லைட் ரைட்டிங் காமெடிகளால் நெல்சன் திலீப்குமார் ஸ்கோர் செய்வது பட்டாசு… பட்டாசு.

தவிர நெல்சனின் சமுக அரசியல் பார்வையும் பிரமாதமாக இருக்கிறது.

பொதுவாக மலையாளப் படங்களில் தமிழர்களை வேண்டும் என்று உண்மைக்கு மாறாக கேவலமாக காட்டுவார்கள்.

ஆனால், இந்த ஜெயிலர் 3 யாரை எப்படி காட்ட வேண்டும். அதில் யார் நடிக்க வேண்டும். எந்த பின்னணியில் காட்ட வேண்டும்.

யாரின் மொழி என்ன என்று சொல்ல வேண்டும் என்று செட் செய்ததில் நெல்சன் சமர்த்தராக இருக்கிறார். முதல் பாகத்திலேயே அதற்கான விதை இருந்தாலும் இதில் விளைச்சல் அதிகம்.

அண்மைக் காலமாக தெலுங்குப் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கும் சூழல்களில் தெலுங்கில் இருந்து பெரிய நடிகர் யாரும் இல்லை என்பது கூட சரியான முடிவுதான்.

எதிர்பார்ப்புக்கும் மேலாகவே சிறப்பாக வந்திருக்கிறது படம்.

மொத்தத்தில் இது ஜெயிலர் 2 அல்ல… ஜெயிலர் ஸ்கொயர்.

— சு.செந்தில் குமரன்

Comments (0)
Add Comment