லியோ சிவகுமார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், ராதிகா சரத்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், போஸ் வெங்கட், பிரிகிடா சகா, ஜென்சன் திவாகர் நடிப்பில் நானி டர்லா எழுதி இயக்கி இருக்கும் படம்.
சண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அஸாஸி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி ஆகியோர் தயாரிப்பு.
உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் கொலை வெறி ஊறிய ஏழு சமூக விரோதிகளை வைத்து, காசுக்கு கொலைகள் செய்து சென்னையில் பெரும் பணம் சம்பாதிக்கிறான் ஒரு தாதா (மாதேஸ்வரன்). அந்த ஏழு பேரும் என்ன செய்யவும் தயங்காத மனித மிருகங்கள்.
இன்னொரு பக்கம், கோவையில் டெலிவரி பாய் வேலை செய்து கொண்டு போலீஸ் வேலைக்கு முயல்கிறான் ஓர் இளைஞன் சிவா (லியோ சிவகுமார்).
அப்பா இல்லாத நிலையில், வீட்டு வாசலில் இட்லி கடை வைத்துப் பிழைக்கும் அம்மா (ராதிகா சரத்குமார்) வளர்க்கும் பிள்ளை.
காசு கொடுத்து போலீஸ் வேலை வாங்கித் தர ஆள் இருந்தும் நேர்மையான முறையில்தான் அந்த வேலையைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன் அவன்.
இத்தனைக்கும் அவனிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் இருக்கிறது. அந்த பணத்தோடு சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு அடிக்கடி வந்து, ஒரு குறிப்பிட்ட வீட்டில் உள்ள நபரை சந்தித்து, அந்தப் பணத்தை தர முயல்கிறான் சிவா.
ஆனால் அந்த நபர் வெளிநாட்டில் இருக்க, அவரது தொடர்பு எண்ணும் கிடைக்காத நிலையில் அடிக்கடி பணக்கட்டோடு சென்னை வருவதும் சந்திக்க முடியாமல் திரும்பப் போவதுமாக இருக்கிறான்.
அதைப் பார்த்து பரிதாபப்படும் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி ஆபிசர் (காளி வெங்கட்) கேட்க, காரணம் சொல்கிறான் சிவா.
சிவாவின் அம்மா ஒரு முறை கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவ சிகிச்சைக்குப் பல லட்சங்கள் பணம் தேவைப்பட, நண்பனிடம் கடன் வாங்கிக் கொண்டு போகும் வழியில், அதைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான் ஒருவன் (உதயா தீப்).
அவனை துரத்திக் கொண்டு ஓடி ஒரு மருத்துவமனை வாசலில் பிடித்து அடித்தால், அவனது குழந்தை மருத்துவமனையில் உயிருக்குப் போராட, அதைக் காப்பாற்றவே அவன் திருடியிருக்கிறான் என்பது தெரிய வருகிறது.
அவனிடமே பணத்தைக் கொடுத்து விட்டு வரும் வழியில். வேறு வழியின்றி, கவுதம் என்ற ஓர் இளைஞனிடம் (துஷ்யந்த்) பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான் சிவா.
பணம் இழந்தவன் சிவாவைத் துரத்தி கொண்டு வர, சிவா அந்த பணத்துக்காக, எதிரில் மோத வரும் லாரிக்கும் அஞ்சாமல் பணத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்துப் பரிதாபப்பட்டு, அந்தப் பணத்தை சிவாவிடம் கொடுத்து விட்டு கவுதம் போய்விட, சிவாவின் அம்மா பிழைக்கிறார்.
“பணம் என்பது எப்போ யாருக்கு ரொம்ப தேவையோ அவர்ளுக்குத்தான் அது போகணும்” என்று சொல்லிக் கொடுத்து வளர்த்த அம்மா!
கவுதமிடம் அந்தப் பணத்தைக் கொடுக்கத்தான் அலைந்து கொண்டு இருக்கிறான் சிவா.
ஒரு நிலையில் கவுதம் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருக்கும் தகவல் அறிந்து சிவா சென்னை வர, கவுதமை போலீஸ் வந்து அழைத்துப் போவதைப் பார்க்கிறான்.
ஸ்டேஷனுக்கு போய் கேட்க, கவுதம் இங்கே இல்லை என்கிறது போலீஸ். போலீசால் கவுதம் உயிருக்கு ஆபத்து என்று உணரும் சிவா, கவுதமின் எதிரிகள் என்று கருதும் சிலரை பின்தொடர்ந்து போக, அங்கே கவுதம் இருக்கிறான், அவர்களின் நண்பனாக!
மறைவு வாழ்க்கைக்கு காரணம்?
கொலை வெறி கொண்ட அந்த ஏழு ரவுடிகளின் ஒருவன் சாலையில் ஒரு பெரிய மனிதரை பைக்கில் அடித்துக் கீழே தள்ள,
அப்போது அங்கிருந்த கவுதம் அவனைத் தட்டிக் கேட்க, சண்டை பெரிதாகி அவனை கவுதம் அடிக்க, தப்பி ஓடும் அவன் எதிரில் வந்த லாரியில் அடிபட்டு மரணம் அடைய,
இப்போது கவுதமை கொடூரமாகக் கொள்ள மற்ற ஆறு பேரும் திட்டமிடுவதை அறிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டரே (போஸ் வெங்கட்) கவுதமை இப்படி காப்பாற்றி வைத்து இருப்பது சிவாவுக்கு தெரிகிறது.
போலீஸ் பஞ்சாயத்து மூலம் இறந்தவனுக்கு, ஈடாக முப்பது லட்ச ரூபாயை பெற்றுக் கொள்ளும் தாதா ”இனி எங்கள் ஆட்கள் உங்களை பழிவாங்க நினைக்க மாட்டார்கள்” என்று கூற, நடந்தது என்ன? அதில் சிவாவின் நிலை என்ன என்பதே படம்.
அம்மாவின் உயிரைக் காப்பாற்ற திருடிய பணத்தை, பணத்துக்கு உரியவன் விட்டு விட்டுப் போய் விட்ட பின்னும், அதைத் திருப்பிக் கொடுக்க ஆள் எங்கே இருக்கிறான் என்பது தெரியாமலே ஒருவன் அலைகிறான் என்ற உயர்ந்த குணாதிசயம் கொண்ட நாயக பாத்திரம்!
அம்மாவின் உயிரைக் காப்பாற்றியவனின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே ஒருவன் பணயம் வைக்கிறான் என்பது நிச்சயமாக ஒரு வெற்றிப் படத்துக்கான ஒன்லைன்தான்
ரவுடிகளும் கேவலமானவர்களுமே பெரும்பாலும் ஹீரோவாக பவனி வரும் இன்றைய சினிமாவில், அத்தி பூத்த மாதிரி ஒரு ஹீரோ.
மகனைக் காப்பாற்ற பணத்தைத் திருடியவனிடமே பணத்தைக் கொடுத்து விட்டு, தன் தாயைக் காப்பாற்ற வேறொருவரிடம் பணம் திருடும் பகுதியில் அழுத்தமான திரைக்கதைப் போக்கு.
பாராட்டுகள் நானி டர்லா.
போலீஸ் கவுதமை கைது செய்யவில்லை; காப்பாற்றுகிறது… சிவா துரத்தும் நபர்கள் கவுதமின் எதிரிகள் இல்லை நண்பர்கள்… நட்பின் உரிமை கொண்டாடியவனின் செயல்… இப்படிச் சின்னச் சின்ன திருப்பங்கள் கவர்கின்றன.
அதோடு ஒரு நிலை வரை, என்ன நடக்குமோ என்ற பதட்டமும் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது.
ஏழு ரவுடிகளின் நடிகர் தேர்வும் வேலை வாங்கிய விதமும் அருமை.
படத்தின் இரண்டாம் பாதியில் அசோக்குமார், பிரசன்னா ஆகியோரின் ஒளிப்பதிவு பிரமாதம்.
அதே போல பாதிப்படம் வரை ரீல்களைப் போட்டுவிட்டு படுத்துத் தூங்கிவிட்ட கே.எஸ். சுந்தரமூர்த்தி, நல்லவேளை, கிளைமாக்ஸுக்கு முன்பு தூக்கத்திலிருந்து விழித்து, சூடா ஒரு காபி குடித்து விட்டு ஒழுங்காக வேலை பார்த்திருக்கிறார். கிளைமாக்ஸ் ஏரியாவில் பின்னணி இசை பிரமாதம்.
வசந்தகுமாரின் படத்தொகுப்பு அருமை.
ஃபீனிக்ஸ் பிரபுவின் சண்டைக் காட்சிகள் அட்டகாசம். சேசிங் நன்றாக எடுத்து இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படத்தின் பெரும்பலம்.
உற்சாகமாக நடிக்கிறார் சிவா. ஆனால், வாய் மட்டுமே நடிக்கிறது, அதுவும் கொஞ்சம் அதிகமாக. சற்றே செயற்கையாக.
நடிப்பு என்பது கண் உட்பட ஒட்டுமொத்த உடம்பால் வெளிப்படும் உடல்மொழி மற்றும் குரல் பாவம்.
கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக் கற்றுக் கொண்டால், லியோ சிவகுமாருக்கு இருக்கும் இயல்பான மண்ணின் மைந்தன் தோற்றத்துக்கு, பெரிதாக ஜொலிக்கலாம்.
ராதிகா ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார்.
முதல் படம் என்ற பதட்டம், தயக்கம் வெளியே தெரியாதபடி இயல்பாக பொருத்தமாக நடித்து இருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன். கேமராவுக்கு பொருத்தமான முகம். குரல் நடிப்பும் தொனியும் நன்று.
சரியான தியேட்டரிக்கல் படங்களைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தனக்கேற்ற பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்தால் சோபிப்பார்.
இந்தப் படத்துக்கு ஒரு கதாநாயகி கேரக்டர், அதற்கு ஒரு நாலஞ்சு சீன், ஒரு பாட்டு… எல்லாம் எதுக்கு?
கதையில் அந்தக் கேரக்டர் இல்லை என்றால், திரைக்கதையிலாவது அந்தக் கேரக்டரை அவசியப்படுத்துகிற மாதிரி எழுதி இருக்கலாம். அது இல்லாதது பலவீனமே.
ஏழு கொலைகாரர்களை அறிமுகப்படுத்திய விதத்தில் பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கிறார் இயக்குநர். ஆனால், கிளைமாக்சில் அதற்கு ஏற்ற அழுத்தமோ, தீவிரமோ இல்லை. சண்டை மட்டுமே கிளைமாக்சின் பலம் என்ற ரீதியில் படம் சுருங்கி விட்டது.
நடிகர்களின் சொகுசுக்கு விட்டிருக்காமல் இன்னும் நன்றாக ஆட வைத்திருக்கலாம் நடன இயக்குநர் மனோஜ் (அனுபவம் இல்லாதவர் என்பதால் மாதேஸ்வரன் விதிவிலக்கு).
”ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க; சான்றோர் பழிக்கும் வினை” என்கிறான் வள்ளுவன்.
அந்த இடத்தில் தாய் என்று சொல்லாமல் ஏன் ஈன்றாள் என்று வள்ளுவன் சொன்னான் என்பது பற்றி எல்லாம் லியோனியிடம் கேட்டால் பிரம்மாதமாக சொல்வார்.
அப்படி இருக்க, கவுதமிடம் சிவா பணம் திருடியது பற்றி சிவாவிடம் பேசும் கவுதம், “சேச்சே.. பரவால்ல விடு. உன் இடத்துல நான் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்” என்று, திருட்டை இயல்பாக்கிப் பேசுகிறார் (Normalise ) அநியாயம்.
“பணம் என்பது எப்போ யாருக்கு ரொம்ப தேவையோ அவர்ளுக்குத்தான் அது போகணும்” என்பதற்குள்… திருட்டு, வழிப்பறி, பிக்பாக்கெட், வங்கிக் கொள்ளை, நகைக்காக கழுத்தறுப்பு, மண்டை உடைப்பு எல்லாம் வருமா என்ன?
சூழலின் ஒரு மனிதன் தவறு செய்து விட்டான் என்றால் அதை அப்படியே வடிப்பதுதான் நல்ல திரை எழுத்து. நியாயப்படுத்துவது தவறு.
‘டெலிவரி பாய்’ என்று பெயர் டெலிவரி செய்யும் நபர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படமோ என்ற ஆர்வ எண்ணத்தையே ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்.
அப்படி ஒரு சிறப்பான கதை, திரைக்கதை எழுதி எடுத்து இருந்தால், இன்றைய நிலையில் அந்தக் கதையே ரசிகர்களை உள்ளிழுக்கும் காந்தமாக மாறி இருக்கும்.
‘டெலிவரி பாய்’ என்று பெயர் வைக்கும் அளவுக்கு டெலிவரி பாய் வேலை தொடர்பாக இந்தப் படம் என்ன சொல்கிறது?
ஒன்றும் இல்லை. (ஒருவனுக்கு தான் கொடுக்க வேண்டிய பணத்தை டெலிவரி செய்ய முயன்றான் என்பது எல்லாம் பொருத்தமாக இருக்காது. அது டெலிவரி என்ற பொருள் தராது)
நல்ல கதை எழுதி இருக்கிறார்கள். அதை அதற்கேற்ற திரைக்கதையாக கொண்டு வரத் தவறியிருக்கிறார்கள். எழுதிய திரைக்கதைக்கு ஏற்ற இயக்கமும் கைவரப் பெறவில்லை.
மிகப் பிரபலமான நடிகர்கள் நடிக்கிறார்கள் என்றால் சுமாரான திரைக்கதைகளே போதும் (மொக்கையாக இருந்தால் அந்த ‘ஈஸ்வரனே’ நடித்தாலும் ஓடாது என்பது வேறு விஷயம்)
ஓரளவு பிரபலமான நடிக, நடிகையர் இருக்கிறார்கள் என்றால் இன்னும் சிறப்பான கதை திரைக்கதை இயக்கம் வேண்டும்.
அந்த அளவுக்கு பிரபலமாகாதவர்கள் நடிக்கும் படம் என்றால், அட்டகாசமான – காட்சிக்கு காட்சி அசத்துகிற – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இருந்தால்தான் படம் ஓடும்.
இந்தப் படம் மூன்றாவது ரகமாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது இந்தப் படத்தின் நடிக நடிகையர்களுக்கு இன்னும் சிறப்பான கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – காட்சிக்கு காட்சி கைதட்டும் படி,
அதாவது திண்டுக்கல் லியோனி பனிரெண்டு மணிக்கு பேசினாலும் பசியோடு கேட்கிறோமே அப்படி இருந்திருக்க வேண்டும்.
இதையும் மீறி… இந்த வாரம் ஒரு திரைப்படம் கொஞ்சமாவது திரையரங்கில் ஓட வாய்ப்பு இருக்கிறது என்றால், அது இந்தப் படம்தான்.
மொத்தத்தில் டெலிவரி பாய்… ஆன் டைம் டெலிவரி. ஆனால், SAFE டெலிவரி இல்லை.
— சு. செந்தில்குமரன்