அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர், பாலாஜி வேணுகோபால் நடிப்பில் ஜெயச்சந்திர ஹஷ்மி எழுதி, இயக்கி, நவம்பர் 27 முதல் ZEE5 தளத்தில் காணக் கிடைக்கும் தொடர்.
சினிமம் நிறுவனம் சார்பில் லிஷா சந்திரன், ஆதித்யா ராஜு மற்றும் கல்ட் டிஜிட்டல் சார்பில் சுனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் தயாரிப்பு.
வலதும் இடதுமாக சுமார் பத்து வீடுகள் கொண்ட முட்டுச்சந்து அன்பு நகர்.
அங்கு வசிக்கும் எல்லோரும் அண்ணா, மாமா, அக்கா, பாட்டி என்று உறவு சொல்லிப் பழகுபவர்கள்.
அங்கே இருந்த ஒரு வீட்டுக்கு புதிதாக குடி வருகிறது ஒரு தம்பதி. (அஷ்வின் குமார் – சித்து குமரேசன்).
கணவன் மிக மோசமானவனாக இருக்கிறான். தெருவில் யாரையும் மதிப்பதில்லை. மார்கழி மாசம் எல்லோரும் தெருவில் கோலம் போட்டால், தண்ணீரை திறந்துவிட்டு தெரு முழுக்க ஓடவிட்டு அழிக்கிறான்.
அதைவிட மனைவியிடம் கொடூரமாக நடந்து கொள்கிறான். ஆனால், அந்தப் பெண் எல்லோரிடமும் அன்பாகப் பழகி அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறாள்.
அவனோ மனைவியை எல்லோருக்கும் பார்க்க அடிப்பது, சூடு வைப்பது, ரத்தக் காயப்படுத்துவது என்று கொடுமையாக நடந்து கொள்கிறான். அவள் படும்பாடு எல்லோரையும் மிகுந்த வேதனைக்கு ஆளாக்குகிறது.
அந்த வீட்டின் எதிர் வீட்டில் உள்ள ஒரு ரேடியோ ஜாக்கி (அர்ச்சனா ரவிச்சந்திரன்), சித்திரவதை அனுபவிக்கும் மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறாள்.
தவிர அந்த கொடுமைக்கார கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு உறவு இருப்பதை அந்த ஆர்.ஜே கண்டுபிடிக்கிறாள். அதை அந்த அப்பாவி மனைவியிடம் ஆர்.ஜே. சொல்ல, அன்றிரவு அந்த தம்பதி வீட்டுக்குள் இருந்து கொடூர பேரலறல் கேட்கிறது.
மறுநாளில் சித்திரவதை அனுபவித்த அந்தப் பெண்ணை காணவில்லை. போலீசுக்குப் போனால் அவர்கள் வந்து விசாரித்தால் தனது வீட்டில் பெண் என்று யாருமே இல்லை என்கிறான் அந்த கொடூரக் கணவன்.
இதற்கிடையே இந்த அன்பு நகருக்கு வெளியே, ஒரு காதல் ஜோடி (வினோத் கிஷன் – கலைவாணி பாஸ்கர்).
ஒரு நிலையில் அவனை மணக்க அவள் வீட்டில் ஒத்துக் கொள்ளாதது அவனுக்கு தெரிய வர, அவன் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி சைக்கோ மாதிரி நடந்து கொள்கிறான் அவன்.
இங்கே அன்பு நகரில், தாங்கள் இதுவரை பழகிய பெண்ணை, அப்படி யாருமே தன்னுடன் இல்லை என்று அவளது கணவனே கூற, எல்லாருமே அதிர்ச்சி அடைகின்றனர்.
ஒரு நிலையில் சித்திரவதை அனுபவித்த அந்த மனைவியின் செருப்பு எரிந்த நிலையில் கிடைக்கிறது . அந்த பெண் பயன்படுத்திய பொருட்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
அந்தப் பெண்ணைக் கொடுமைக்கார கணவன் கொன்று விட்டான் என்று எல்லோரும் புகார் கொடுக்க, அவனை போலீஸ் கைது செய்கிறது. குற்றவாளி என்று கோர்ட் அறிவிக்கிறது.
ஆனால், செத்துப் போன பெண் உயிரோடு வருகிறாள். கொடுமைக்கார கணவனும் அவளும் இப்போது ஓரணியில் நிற்க, நடந்தது என்ன? யார் குற்றாவாளி? என்ன குற்றம்? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்கிறது இந்த ஆக்டோபஸ்.
குறைவான எண்ணிக்கையில் வீடுகள், விதம் விதமான மனிதர்கள், எல்லா வீட்டுப் பெண்களுக்குள்ளும் இருக்கும் அண்டர்ஸ்டாண்டிங், நட்பு என்று இயல்பாய் ஆரம்பிக்கிறது படம்.
கொடுமைக்கார கணவன் தனது மனைவியை நடுரோட்டில் முத்தமிட, எல்லா வீட்டுப் பெண்களும் நமுட்டு சிரிப்பு சிரிக்க, மறுநாள் அதே நேரம் அன்றைய புதிய முத்தத்தை பார்க்க எல்லோரும் நைசாய் அவரவர் வீட்டு வாசலில் காத்திருக்க, அந்த ஆரம்ப எபிசோடுகள் ரகளை.
மனைவியை அவன் கொடுமைப்படுத்தும் விஷயம் பெண்களிடமிருந்து அப்படியே ஆண்கள் கவனத்துக்கு போக, மெல்ல மெல்ல விஷயம் சூடு பிடிப்பது அருமை.
தெருவில் எல்லா கோலங்களையும் தண்ணீர் ஓடவிட்டு அழிக்கும் காட்சி அழுத்தமாக படமாக்கப்பட்டுள்ளது.
அந்த சித்திரவதை செய்யப்பட்ட மனைவிக்கு என்ன ஆச்சு? அவள் எங்கே? எப்படி அவன் வீடு ஒரே நாளில் பேச்சிலர் வீடாக மாறியது? காணாமல் போனவள் எப்படி கொலை செய்யப்பட்டாள்? அவள் எப்படி உயிரோடு வந்தால் என்று அடுத்தடுத்து திருப்பங்கள் ஆர்வம் தூண்டுகிறது.
இப்படி நல்லா போய்க் கொண்டு இருக்கும்போது, காமெடி என்ற பெயரில் பாலாஜி வேணுகோபால் சோதிக்கிறார்.
ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படக் காரணமாக இருந்த சாட்சிகள், வேறொரு வழக்கில் பொய் சாட்சி சொல்கிறார்கள் என்று நிரூபித்தால் முந்தைய வழக்கின் தீர்ப்பே மாறும் என்ற சட்ட நுணுக்கத்தை வைத்து புதுமையான காட்சிகள் மூலம் திரைக்கதைக்கு பலம் கூட்டுகிறார் ஜெயச்சந்திர ஹஷ்மி.
மனநிலை பாதிக்கப்பட்டவனின் வார்த்தைகளை வெள்ளம், அதில் விழும் விமானம் என்று சிறப்பாக எழுதி படமாக்கி இருக்கிறார்.
”நீரெல்லாம் நீரும் இல்லை; நெருப்பெல்லாம் நெருப்பும் இல்லை” என்கிற ரீதியில், ஒரு நிலையில் கதாபாத்திரங்களின் தன்மைகளை தலைகீழாக மாற்றி, ஆணவக் கொலையின் இன்னொரு பரிமாணத்தை காட்டுகிறார்.
தீபன் சக்கரவர்த்தியின் இசை பரப்பரப்பைக் கூட்டுகிறது.
கண்ணாவின் ஒளிப்பதிவு ஜஸ்ட் ஓகே.
நேர்த்தியான படத்தொகுப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார் பாண்டியன்.
தோற்றத்துக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் இருந்து மாறான கதாபாத்திரத்தில் அஷ்வின் குமார், வினோத் கிஷன் சிறப்பாக நடித்துள்ளனர்.
அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன் இருவரும் கேரக்ட்டருக்கு ஏற்ற சிறப்பான நடிப்பு.
நல்ல நடிப்பு, கிடைத்த கேரக்டர், அதில் கிடைக்கும் உணர்வுக் கூட்டல் இவற்றால் உள்ளம் கொள்ளை கொள்கிறார் கலைவாணி பாஸ்கர். குடும்பத் தலைவிகளாக வரும் எல்லா பெண்களுமே இயல்பாக நடித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் நிகழ்வில் நடக்கும் யதார்த்தமான விஷயமாக இயக்குனர் சொல்லும் கதைக்கு, யதார்த்தம் இல்லாத – லாஜிக் இல்லாத சூழல்களும் காட்சிகளும் தீவிரத்தை குறைக்கின்றன.
சில விஷயங்களை வலிந்து சாத்தியப்படுத்தும் முயற்சி தெரிகிறது.
என்ன கதை என்பது முழுதாக தெரிந்த பிறகும் சுமார் இரண்டு எபிசோடுகள் ஓடுகிறது.
திரைக்கதையின் இறுதிப் பகுதிகளை சரியாக எழுதி, அந்த எதிர்பாராத சஸ்பென்ஸ் ஓப்பனாகி, ஒரே எபிசோடில் ஓப்பனாகி முடியும்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
— சு. செந்தில்குமரன்