தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் நடிப்பில், ஹெச்.வினோத் எழுதி இயக்க, த.வெ.க-வின் தேர்தல் பிரச்சாரத்துக்காக எடுக்கப்பட்டு, தேர்தல் முடிந்து த.வெ.க. ஆட்சிக்கு வந்து அவர்களும் அரசியல் செய்யும் காலத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் கே நாராயணா தயாரித்த படம்.
மதுரை ஜெயிலில் இருக்கும் கைதி தளபதி வெற்றி கொண்டான் (ஜோசப் விஜய்), அந்த ஜெயிலுக்கே பாதுகாப்பு கொடுக்கும் அளவு சக்தி வாய்ந்த ஆள்.
ஜெயிலரின் (கவுதம் மேனன்) மகளான சிறுமியின் (லிதான்யா) நெருங்கிய நண்பன்.
ஜெயிலில் வெற்றி கொண்டான் சண்டை போடுவதை அப்பாவின் தோளில் உட்கார்ந்து பார்த்துப் பார்த்து, வெற்றி கொண்டானை சூப்பர் மேனாகப் பார்க்கிறாள் சிறுமி.
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜெயிலரின் மனைவி, இளம் வயதில் மிலிட்டரியில் சேர ஆசைப்பட்ட நிலையில் சமூக விரோதிகளால் கொல்லப்பட, மகளை வளர்த்து மிலிட்டரிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையை வெற்றியிடம் சொல்கிறார் ஜெயிலர்.
ஆனால், அம்மாவைக் கொன்ற காட்சியை நேரில் பார்த்த அவளுக்கு ஏதாவது சத்தம் கேட்டாலே மூச்சு முட்ட ஆரம்பித்து விடும் அவளது ”பயத்தைப் போக்குவேன்” என்று வெற்றி சொன்ன அடுத்த காட்சியிலேயே படத்துக்கு தேவைப்படாத அந்த ஜெயிலர் கேரக்டர் லாரியில் அடிபட்டு சாகிறார்.
ஜெய்லரின் மகளை வளர்த்து மிலிட்டரிக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்று அவளுக்கு கடுமையான பயிற்சிகள் தருகிறார் வெற்றி.
ரோஜா ரங்கசாமி (பிரகாஷ்ராஜ்) போன்ற ரவுடிகளுக்கு அயோக்கியர்களை ஓட்டுப் போட்டு மக்கள் தேர்நதெடுக்க, அவர்கள் செய்யும் அவமானங்களைத் தாங்க முடியாத அம்ரிஷ் பூஜாரி என்ற போலீஸ் அதிகாரி (பாபி தியோல்),
அயோக்கியனாகவே மாறி இன்டர்நேஷனல் கிரிமினல் ஆகி, ஸ்வாஸ்னியா என்ற ஆப்பிரிக்க நாட்டு அதிபரை அவர் நாட்டிலேயே தூக்கில் போடும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஜான் ஹிம்லர் என்ற அகில உலக தாதாவாக மாறுகிறார்.
ஜெயிலரின் மகள் இளம்பெண்ணாக வளர்ந்த நிலையில் (மமிதா பைஜூ) அவளை மிலிட்டரிக்கு அனுப்ப வேண்டும் என்று வெற்றி போராட, அவளோ பெண்களை மதிக்காத ஆணாதிக்க நபர் ஒருவரின் மகனைக் காதலிக்கிறார்.
வெற்றியை விலகிப் போகச் சொல்கிறாள்.
குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளுக்குள் துப்பாக்கிகளை வைத்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து அந்த துப்பாக்கிகளை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்து, மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டி, ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் சூழலை உருவாக்கி, அப்போது மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்து இந்தியாவை பேரழிவுக்கு கொண்டு போக ஹிம்லர் திட்டமிட,
அதை வெற்றி எப்படி முறியடித்தார், ஜெயிலர் மகளை எப்படி மிலிட்டரிக்கு அனுப்பினார் (பின்னே, பண்ணாமல் விட்டுவிடுவாரா என்ன?) அதற்குள் நடக்கும் மேஜிக் என்ன என்பதே படம்.
பாலகிருஷ்ணா நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்.
முக்கியமான விஷயங்களையம் காட்சிகளையும் அப்படியே வைத்துக் கொண்டாலும் நிறைய மாற்றங்களும் செய்திருக்கிறார் வினோத்.
அந்தப் படத்தில் வரும் துணை முதல்வர் கேரக்டர் ரொம்ப நல்லவர்; வல்லவர் நேர்மையானவர்.
திமுகவை எதிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அதை அப்படியே வைத்திருந்தால் முதலுக்கே மோசமாகி விடும் இல்லையா? எனவே பல மாற்றங்களும் செய்திருக்கிறார்.
அதில் சில நல்ல விஷயங்களும் சில சேதாரங்களும் கூட உண்டு.
படத்தின் பெரும் பலம்.. மாபெரும் பலம் வேறு யார்? விஜய்தான். பைசா பெறாத வாரிசு படத்தையே ஓகோ என்று ஓட வைத்தவர்கள் அவரது ரசிகர்கள்.
அரசியல் நோக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விட்டு விடுவார்களா? அதுவும் விஜய் முதல்வராகவும் ஆகி விட்ட நிலையில்? கொண்டாடித் தள்ளுகிறார்கள்!
விஜய்யும் தனக்கே உரிய பாணியில் பாட்டு, நடனம், சண்டை, கொஞ்சம் காமெடி கம் செண்டிமெண்ட் இவற்றோடு அரசியல் வசனங்கள் பேசி நடிக்கிறார்.
காரில் கண்ணாடியை ஏற்றி விட்டு மேல லுக் விட்டு ‘சூரியனை’ப் பார்த்து முறைக்கிறார்.
மிகப் பிரம்மண்டமான காட்சி அமைப்புகள், கடும் உழைப்பு, சிறப்பான படமாக்கல், கிரியேட்டிவ் சிந்தனைகள் சேர்த்து படத்தை இயக்கி இருக்கிறார் வினோத்.
குறிப்பாக யாரோ ஒருவரின் வயலில் கடலைச் செடியை பிடுங்கி கடலையைப் பறித்து விட்டு செடியை மீண்டும் நட்டுவிட்டு, அரசியல்வாதி என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்கும் காட்சி ரகளை.
பரபர ஜெயில் சண்டையிலும் No War Only Art… Le Respect (the respect என்று பொருள்) போன்ற வாசகங்கள் வருவது இயக்குநரின் சிக்னேச்சர்.
செண்டிமெண்ட் காட்சிகளும் கனம்.
அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்புகின்றன.
பின்னணி இசையில் தீம் மியூசிக் அருமை. ஆனால், அதையே ஓவராக ரிப்பீட் அடிக்கிறார். பல இடங்களில் தீம் மியூசிக் வெறும் நிரப்பியாக (filler) மட்டுமே இருக்கிறது.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம், உணர்வுப்பூர்வம் என்று எல்லாவகையிலும் இயக்கத்துக்கு ஒத்துழைத்து இருக்கிறது.
பழிச் சொல்லுக்கு ஆளான எடிட்டர் பிரதீப் ராகவ், பழி சொல்ல முடியாத அளவுக்கு படத்தொகுப்பை செய்திருக்கிறார்.
அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் நிஜமாகவே ‘தளப…தீ கச்சேரி’யாக இருக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு தளப(குரு)தீ கச்சேரியாக இருந்திருக்க வேண்டாமே.
அதுவும் ஒருவனை வெட்டி விட்டுக் கோடாரியில் இருந்து வழியும் ரத்தத்தை விஜய் நாக்கால் நக்குவது எல்லாம் ஜனநாயகம் இல்லை. குரூரம்.
பாபி தியோல் அட்டகாசமாக நடித்துள்ளார். ஆனால், ஆரம்பத்திலேயே அவர் எவ்வளவு கொடூரமான ஆள் என்று ஆப்பிரிக்கா எல்லாம் போய் காட்டி விட்டு, இடைவேளைக்கு பிறகு ”அவர் நல்லவர்தான். ஆனா ஏன் மாறினார் தெரியுமா?” என்று விளக்குவது காரணமாக அந்த பிளாஷ்பேக்கே உயிரில்லாமல் கிடக்கிறது.
அதுவும் தன்னை அவமானப்படுத்திய பிரகாஷ் ராஜிடமே அவர் போய் நிற்பது எல்லாம் தெலுங்கு சினிமாவில் கூட நடக்காது.
பூஜா ஹெக்டே பாம்பும் இல்லை கயிறும் இல்லை இரண்டுக்கும் இடையில் என்னமோ ஒன்றாகக் கிடக்கிறார்.
மமிதா பைஜு நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால், தெலுங்கில் ஸ்ரீலீலா இன்னும் சரியாக செய்திருந்தார்.
ஜெயிலராக கவுதம் மேனன் லுக் எல்லாம் ஓகே. ஆனால், நாலு அஞ்சு வார்த்தைக்கு மேல் எந்த வசனம் பேசச் சொன்னாலும் தப்பான மாடுலேஷன், தவறான இடங்களில் பாஸ் விடுவது என்று வேண்டா வெறுப்பாக பேசுவது போலவே பேசுகிறார்.
பிரகாஷ்ராஜ் பழக்கப்பட்ட கேரக்டரில் வழக்கம் போலவே அசத்தி இருக்கிறார்.
சின்னச் சின்ன கேரக்டர்களிலும் கூட, பெரிய பெரிய நடிகர்கள் குளோசப் கொடுத்து விட்டு குளோஸ் ஆகிப் போகிறார்கள்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குநர் வினோத்துக்கு உதவிய போலீஸ் அதிகாரி ஜாங்கிட் இந்தப் படத்திலும் இருக்கார்.
படத்தின் முக்கிய நோக்கம் ஆளுங்கட்சி மீதான அரசியல் தாக்குதல்கள்.
”எங்க தாத்தா, எங்கப்பா, இப்ப நான் ஆளுறேன். அடுத்து என் புள்ள, அப்புறம் என் பேரன்னு நாங்கதான் எப்பவும் ஆளுவோம்…” என்று சொல்லும் பிரகாஷ்ராஜ் திமுகவுக்கு நேரடியாக ஒரு குத்து.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மாதிரியான காட்சியில் அதிமுகவுக்கு ஒரு குத்து. மாவட்டச் செயலாளர்களின் பவர் பற்றி சொல்லும் காட்சியில் இரு கட்சிக்கும் ஒரு குத்து.
”டார்ச் லைட் அடிச்சு தேடினாலும் உன் கட்சி எங்கன்னு தெரியல” என்றும் ஒரு ஊமைக் குத்து.
ஆனால், விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு படம் வந்திருப்பதால் பல வசனங்கள் பேக் பயர் ஆகின்றன.
“இளைஞர்கள் எல்லாம் டாஸ்மாக்குல கையே விட்டுக்கிட்டே இருக்கான்…” என்று மை பா பேசும் வசனம்…
“பத்து வருடம் முன்னாடி சாராயம் காய்ச்சினவன்… கட்டப் பஞ்சாயத்து பண்ணவன், கந்து வட்டி பண்ணவன் எல்லாம் இப்போ அரசியல்வாதி…” என்று விஜய்யே பேசும் வசனம்…
“அவனும் இவனும் மாத்தி மாத்தி ஆண்டு ஏமாத்தினது போதாதுன்னு, இப்போ இன்னொருத்தன் வேற வந்துட்டான்… ” என்று பிரகாஷ்ராஜ் பேசும் வசனம்…
இதெல்லாம்… அட… அடடே… அச்சச்சோ என்ற உணர்வையே ஏற்படுத்துகின்றனர். தேர்தல் முடிவ வந்த பிறகு கொஞ்சம் கவனித்து இருக்கக் கூடாதா?
ஒரு நிலையில் பிரகாஸ்ராஜ் கேரக்டர்… அவரை ஆட்டிப் படைக்கும் ஹிம்லர் கேரக்டர் எல்லாம் யார் என்று கேஷுவலாக உருவாக்கப்படுத்தினால் மனதுக்குள் ஒரே களேபரம்.
ஜெயில் சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர் ஓவியம், நான் ஆணையிட்டால் பாட்டு, சாட்டை அடி இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் படம், வில்லன் பிரகாஷ் ராஜ் வீட்டிலும் எம்.ஜி.ஆர். (மற்றும் சிவாஜி) படம் இருப்பதாக சொல்கிறது.
(அதாவது பிரகாஷ்ராஜூம் எம்.ஜி.ஆர் தொண்டராம்) அங்கே இருக்கும் எம்.ஜி.ஆர். புகைப்படம்தான், ”தளபதி என் தங்கமே…” என்று அழைத்து விஜய் கையில் சாட்டையைக் கொடுத்து தனது போட்டோவை வீட்டில் வைத்திருக்கும் பிரகாஷ்ராஜை அடிக்கச் சொல்கிறது.
என்னமோ போங்க மாதவன்களா!
நல்லவேளை சிவாஜியும் காங்கிரசும் தப்பித்தார்கள்.
வெற்றி கொண்டான் என்ற பெயரில் திமுகவில் புகழ்பெற்ற ஆபாசப் பேச்சாளர் இருந்தார்.
விஜய்க்கு தளபதி வெற்றி கொண்டான் என்று பெயர் வைப்பதற்குப் பதில் தளபதி வெற்றிக் குமரன் என்றே பெயர் வைத்திருக்கலாம்.
வெற்றிகொண்டான் ஃபைலைத் தேடுங்க என்று ஜெயிலர் சொன்னதும், ஒரு முப்பது பேர் ஒரு ஃபைலை மியூசியத்தில் தேடுவது போல பைலைத் தேடுகிறார்கள்.
திடீரென்று எதுவும் சத்தம் கேட்டால் தன் மகளுக்கு மூச்சு முட்டும் என்பதை கவுதம் மேனன் பைலைத் தூக்கிப் போட்டு மகளை மூச்சு முட்ட வைத்து டிரையல் காட்டுகிறார் ஜெயிலர்.
இதுபோல இன்னும் நிறைய.
லாஜிக் என்று தப்பித்தவறி யாராவது வாய் திறந்தால், திரைக்குள் இருந்து பத்து பேர் வெளியே வந்து, சீட் நம்பர் தேடித் பிடித்து குண்டாந்தடியால் மண்டையில் அடிப்பார்கள் போலிருக்கிறது.
தவறான தீண்டல்கள் பற்றி குழந்தைகளிடம் பாலையா சொல்லும் காட்சி பகவந்த் கேசரி படத்தில் அற்புதமாக இருக்கும். இதில் ஒரு படி குறைவுதான்.
இப்படி எல்லாம் பல விசயங்கள் இருந்தாலும், கத்தவும் கதறவும் குதிக்கவும் கொண்டாடித் தீர்க்கவும் அவரது ரசிகர்களுக்கு விஜய் இருக்கிறார். அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?
மொத்தத்தில் ஜனநாயகன்…. ஜனமும் ‘கன்'(gun)னும் சம அளவில்!
பின் குறிப்பு :
‘தமிழக முதல்வர் நடிக்கும்…’ என்று ஒரு படத்தின் டைட்டில் வருவது விஜய்க்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு; எம்.ஜி.ஆருக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு’ என்று பலரும் வியக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தது. இரண்டு முறையும் அவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதே நிஜம்.
எம்.ஜி.ஆர் முதன்முதலில் முதல்வர் ஆனது, 1977 ஜூன் 30. அவரது ‘மீனவ நண்பன்’ படம் வெளி வந்தது, அதே வருடம் ஆகஸ்ட் பதினான்காம் தேதி.
எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் அந்த நாற்பத்தைந்து நாள் இடைவெளியில், அந்தப் படத்தின் டைட்டிலில் ‘தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நடிக்கும்…’ என்று சேர்த்துப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் அதை விரும்பவில்லை.
அதே போல அவர் தேர்தலில் வென்றபோது அவருக்கு ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படப்பிடிப்பு மிச்சம் இருந்தது. படத்தின் இயக்குனரும் அவரே.
பதவி ஏற்பதற்கு முன்பு இரவும் பகலுமாக இரண்டு நாள் ஷூட்டிங் நடத்தி, படத்தை முடித்துக் கொடுத்து விட்டு முதல்வராகப் பதவி ஏற்றார்.
அந்தப் படம் வெளிவந்த போது எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகி ஆறு மாதம், பதினைந்து நாள் ஆகி இருந்தது.
அவர் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் கூட ‘தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்’ என்று போட்டுக் கொண்டிருக்க முடியும்.
அப்போதும் எம்.ஜி.ஆர். அதை விரும்பவில்லை என்பதே உண்மை. விமர்சனம் வந்து விடக் கூடாது என்ற உணர்வு.
— சு.செந்தில் குமரன்