ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டுக் கால திருமணப் பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானித்தனர்.
இதுதொடர்பாக சாய்ரா பானு சார்பில், அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா, ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், ‘உணர்வு ரீதியான காரணங்களால் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர் – மணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சாய்ராவும் அவரது கணவர் ஏ.ஆர். ரஹ்மானும் பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
திருமண பந்தத்தில் ஏற்பட்ட உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் பிரியும் முடிவுக்கு இருவரும் வந்தார்கள்’ என தெரிவித்து இருந்தார்.
‘ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தாலும், இருவரின் பந்தத்தில் ஒருவித அழுத்தம் இருந்தது – இருவருக்கும் நடுவே இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது – இருவராலும் அந்த இடைவெளியை குறைக்க முடியவில்லை” என்றும் வந்தனா குறிப்பிட்டு இருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மானும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தினார்.
‘நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம் – ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன – கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும் – மேலும், உடைந்தவை மீண்டும் சேராது.
இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி என்று அவர் பதிவிட்டிருந்தார்.
சினிமா ரசிரகர்களை இந்த செய்தி அதிர வைத்தது.
இந்த சூழலில் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் சமரசம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
‘இருவரின் விவாகரத்துக்குப் பிறகு பிள்ளைகள், யாருடன் இருப்பார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை – அவர்கள் வளர்ந்துவிட்டதால் முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான், சாய்ரா பானு வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பிரிவின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த முடிவை எடுக்கும் முன் அவர்கள் நிறைய யோசித்திருக்க வேண்டும் – எனினும், இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று அந்தப் பேட்டியில் வந்தனா தெரிவித்துள்ளார்.
இருவரிடம் இருந்தும், நல்ல தகவலை ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.