ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்றாலும் கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகைத் தந்துள்ளனர்.
இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினமே மும்பை வந்தடைந்தார்.
பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் பாட்னாவிலிருந்து புறப்பட்டு நேற்று காலை மும்பை வந்தடைந்தார். அதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மும்பை வந்தடைந்தார்.
திரைப் பிரபலங்கள் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் தோனி, பாடகர்கள் அடில், லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், WWE வீரர் ஜான் சீனா, சவூதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நாசர் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.