இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில், K Square Cinemas தயாரிப்பில், உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
டி.இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பாடகி ஸ்ரீநிஷா:
“நூதனா” பாடல் எனக்கு மிகவும் பிடித்த மெலடி. இந்தப் பாடலை கபிலனுடன் இணைந்து பாடியது அருமையான அனுபவம். இமான் மிகவும் வேகமாகவும், பாடகர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பதிவு நடத்துவார்.
இயக்குநர் பலராம் கிருஷ்ணா மிகவும் அன்பாகவும், குடும்ப உறுப்பினர் போலவும் எங்களை கவனித்துக் கொண்டார்.
நடன அமைப்பாளர் சாய் பாரதி :
‘நிறம்’ திரைப்படத்தில் “நூதனா” பாடலுக்கு நடன அமைக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி.
கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உருவாக்கியதால், பாடல் இன்னும் சிறப்பாக வந்துள்ளது.
பாடகி பிரவஸ்தி பேசியதாவது
நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவள். இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படப் பாடல் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிறு வயதில் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியிருந்தாலும், ஒரு தமிழ்ப் படத்தில் பாடுவது எனக்கு ஒரு கனவு.
நடிகர் நிதின் சத்யா:
‘நிறம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் ஒரு நட்பின் அடிப்படையில் உருவானது. இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு உள்ளது. அதனால் இந்த படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன்.
படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். முதல் படம் என்ற எண்ணமே வராத அளவுக்கு பலராம் கிருஷ்ணா சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் டி. இமான்:
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே இதில் ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் இருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல தெளிவான பார்வையுடன் பணியாற்றியிருக்கிறார்.
கதாநாயகன் முகன், நிதின் சத்யா என எல்லோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பாடலாசிரியர்கள் விவேகா, பா. விஜய், எடிட்டர் சாபு ஜோசப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயக்குநர் பலராம் கிருஷ்ணா:
இயக்குநராக உங்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நிறைவேறிய தருணம். பல வருடங்களாக நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். என்னை நம்பிய குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.
‘நிறம்’ என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து.
இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இமான் சார், முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்த படம் உருவாகியுள்ளது.
நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.
நாயகன் முகன் :
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘நிறம்’ ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர்.
படப்பிடிப்பின்போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் சார் இசையில் நடிப்பது எனக்கு ஒரு கனவு. அது நிறைவேறியது.