‘அகத்தில் இருப்பதே முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதனை உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, புற உலகச் சூழலோ, அதில் இருக்கும் பாதிப்புகளோ கொஞ்சம் கூட தாக்கம் ஏற்படுத்தாதா என்ற கேள்வியும் கூடவே தொடரும். இதற்கு விடை தரும் விதமாக திரையுலகில் வெகுசிலரே வாழ்ந்திருக்கின்றனர்.
இப்பூவுலகில் இருந்து மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ராமச்சந்திரனும் வி.என்.ஜானகி அம்மையாரும் அதற்கான உதாரணங்களில் மிக முக்கியமானவர்கள்.
எம்.ஜி.ஆரின் திரை ஆளுமை எத்தகையது என்பதைப் பலமுறை பல பேர் சொல்லக் கேட்டிருப்போம். அவரது திரைப்படப் பங்களிப்பு, பணியாற்றிய காலத்தை ஒப்பிடுகையில் ஜானகி அம்மையாரின் கலையுலக வாழ்வு ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. அவரும் அதனை விரும்பவில்லை என்பது வேறு விஷயம்.
திரையுலக நுழைவு!
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த வைக்கம் எனும் ஊரில் பிறந்தவர் ஜானகி அம்மையார். தாயார் பெயர் நாராயணி. கேரளாவில் இன்றளவும் சிலர் தாயின் பெயரை முன்னெழுத்தாக இட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் பிறந்த ஊரையும் தாயாரின் பெயரையும் இனிஷியலாக கொண்டு ‘வி.என்.ஜானகி’ ஆனார்.
சிறுமியாக இருந்த பருவத்திலேயே நடனத்தின் மீதும் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, அவரது திரையுலக கனவு நனவானது. ஜானகியின் தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த ராஜகோபால் மூலமாக, திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்..
பேசும் படங்கள் வெளிவந்த காலத்தில் தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியராக விளங்கிய பாபநாசம் சிவனின் சகோதரர் தான் ராஜகோபால். சிவனைப் போலவே அவரும் திரைப்படங்களில் பாடல்கள் எழுதத் தொடங்கினார்.
அதற்காகவே சென்னைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். பாபநாசம் சிவனுடன் இயக்குனர் கே.சுப்பிரமணியம் கொண்டிருந்த நட்பு, அவருக்குச் சொந்தமான நாடக குழுவில் ஜானகி நடிப்பு மற்றும் நடனப் பயிற்சியைப் பெற வழி வகுத்தது.
முதல் தோற்றம்!
1937ஆம் ஆண்டு கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் தயாரான ‘இன்பசாகரன்’ படத்தில் முதன்முதலாக நடனமாடும் வாய்ப்பைப் பெற்றார் ஜானகி. மோஷன் பிக்சர்ஸ் புரடியூசர்ஸ் கம்பைன்ஸ் ஸ்டூடியோவில் அது படமாக்கப்பட்டது.
ஸ்டூடியோவில் நிகழ்ந்த தீவிபத்தில் மொத்த நெகட்டிவ்களும் எரிந்துபோக, பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டார் சுப்பிரமணியம். இச்சம்பவம் நடந்தபோது பதின்பருவத்தின் தொடக்கத்தில் இருந்தார் ஜானகி. அதன்பின் அப்படம் மீண்டும் தயாராகி 1939இல் வெளியானது.
1937 முதல் 1941 வரையிலான நான்காண்டுகளில் ‘மன்மத விஜயம்’, ‘கச்ச தேவயானி’, ‘மும்மணிகள்’, ‘சாவித்திரி’ மற்றும் சில தெலுங்குப் படங்களில் நடன மங்கையாக இடம்பெற்றார் ஜானகி.
இந்த காலகட்டத்தில் சுப்பிரமணியம் மற்றும் அவரது துணைவியார் எஸ்.டி.சுப்புலட்சுமி நடத்தி வந்த ‘நடன கலா சேவா’ குழு சார்பாக நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அந்த காலகட்டத்தில் ஜானகி நடிக்கும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு இருவருமே அவரது வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தனர்.
1942இல் சுப்பிரமணியம் இயக்கிய ‘அனந்தசயனம்’ படத்தில் ஜானகிக்குச் சிறு வேடம் கிடைத்தது. தொடர்ந்து கங்காவதார், தேவகன்யா, பர்த்ருஹரி, மானச சம்ரக்ஷணம் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
1946இல் வெளியான ’சகட யோகம்’ படத்தில் முக்கிய வேடமேற்று நடித்தார். தொடர்ந்து பங்கஜவல்லி, சித்ர பகாவலி, தியாகி போன்ற படங்களிலும் பிரதானமாகத் தலைகாட்டினார்.
1947இல் வெளியான ’1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ படம் ஜானகி மீது பெரும் அபிமானத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, நீண்டகாலத் தயாரிப்பில் இருந்த ‘சந்திரலேகா’ வெளியாகி இந்தியாவெங்கும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் ஒரு பழங்குடியினப் பெண்ணாக வேடமேற்று நடனமாடியிருந்தார் ஜானகி.
1948ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்று விடுதலையான தியாகராஜ பாகவதரின் சொந்த தயாரிப்பில் ‘ராஜ முக்தி’ படத்தின் நாயகிகளில் ஒருவராக இடம்பிடித்தார். அதற்கான படப்பிடிப்பின்போது தான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை சந்தித்தார்.
ராஜமுக்தி பெரிய வெற்றியைப் பெறாவிடினும், அதனைத் தொடர்ந்துவந்த ‘மோகினி’யும் ‘வேலைக்காரி’யும் ரசிகர்களால் கொண்டாடப் பெற்றன. மோகினியில் எம்.ஜி.ஆருடனும் வேலைக்காரியில் கே.ஆர்.ராமசாமி உடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இவ்விரண்டு படங்களின் வெற்றி ஜானகியின் புகழைப் பன்மடங்காக்கியது.
எம்.ஜி.ஆரின் வரவு!
ராஜமுக்தியில் கிடைத்த அறிமுகத்தைத் தொடர்ந்து, மோகினி படப்பிடிப்பின்போதே ஜானகி அம்மையாருக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு துளிர் விட்டது. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி படுத்த படுக்கையாக இருந்தார்.
அதேநேரத்தில், கணவரான கணபதி பட்டை பிரிந்து தனது சகோதரர் மணி வீட்டில் மகன் சுரேந்திரனுடன் வாழ்ந்து வந்தார் ஜானகி. 1950இல் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் ’மருதநாட்டு இளவரசி’யில் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில், ஒரு தனி நாயகனாக எம்.ஜி.ஆர் ஆராதிக்கப்படவில்லை. அப்போதே, ஒருவரது எதிர்காலம் பற்றி இன்னொருவர் கவலைப்படும் மனப்பாங்கை பெற்றிருந்தனர்.
நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான ‘மருதநாட்டு இளவரசி’யின் வெற்றி எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை திரையுலகிற்கு எடுத்துக் காட்டியது. அப்போது லைலா மஜ்னு, தேவகி, சந்திரிகா எனும் மலையாளத் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஜானகி அம்மையார்.
பிறகு எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, பத்திரிகையாளர் ராஜாராம், ஜானகி இணைந்து தயாரித்த ‘நாம்’ படத்தில் அவர் நாயகியாகத் தோன்றினார். அதுவே அவரது கடைசிப் படமாகவும் வெளிவந்தது.
அதன்பிறகு, எம்.ஜி.ஆரின் நிழலிலேயே ஜானகி அம்மையார் வாழத் தொடங்கினார். திரைப்பட உலகில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கினார். 1960இல் வெளியான ’விஜயபுரி வீரன்’ படத்தில் அவர் நடனமாடும் காட்சி இடம்பெற்றிருந்தது.
சிட்டாடல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது அப்படம். எம்.ஜி.ஆரை சந்தித்த சில ஆண்டுகளிலேயே திரைப்படங்களில் நடிப்பதை ஜானகி அம்மையார் நிறுத்திவிட்டதால், அக்காட்சி அதற்கு முன்னரே படம்பிடிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் கணவரின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, வெளிப்புறப் படப்பிடிப்பு திட்டமிடல்களில் அவர் முக்கியப் பங்கு வகித்தார் என்பது எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்கள் சொல்வதில் இருந்து அறிய முடிகிறது.
பொங்கும் பெருமிதம்!
ஜானகி அம்மையார் நடித்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அவரது நடிப்பில் சில பாவனைகள் அதீதமாக மிளிர்வதைக் கவனித்திருக்கலாம்.
வேலைக்காரி, தேவகி போன்ற படங்களில் சோகக் காட்சிகள் அதிகம் என்றபோதும், வாழ்வில் மகிழ்ச்சியை எதிர்கொள்ளும் சூழல்களில் அவர் நடித்த பாத்திரங்களில் செழிப்பு இழையோடுவதைக் காணலாம்.
‘மருதநாட்டு இளவரசி’யில் அடையாளத்தைத் தொலைத்த இளவரசனைக் காதலிக்கும் பாத்திரம். தான் இளவரசி என்பதைக் காட்டிக்கொள்ள விரும்பாத சூழலிலும் கூட, அவரது பாவனைகளில் அஞ்சாமையும் மேட்டிமைத்தனத்தையும் காணலாம்.
பொதுவாகவே, ஜானகி அம்மையாரின் நடிப்பில் எதிராளியை மிஞ்சிவிடும் வேகம் தென்படும். அது ஆணவமாக, அகங்காரமாக, கர்வமாக, பெருமிதமாக கருதப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனை உணர்ந்தே, ‘1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’யில் இளவரசியாகத் தோன்றியிருப்பார்.
அதில் இடம்பெற்ற சிந்தாமணி தனது அறிவிலும் புத்திசாலித்தனத்திலும் ஆற்றலிலும் சிறந்தவள் என்ற பெருமிதம் நிரம்பியவர். தான் கேட்கும் மூன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பவரே வாழ்க்கைத்துணை என்றும், பதிலளிக்காதவரின் தலை பறிபோகும் என்றும் உத்தரவிடுமாறு தந்தைக்குச் சொல்லுமிடம் அதற்கான ஒரு சோறு பதம்.
’மோகினி’யிலும் கூட வி.என்.ஜானகி, டி.எஸ்.பாலையா, மாதுரி தேவிக்கு முன்னால் எம்.ஜி.ஆர் அடக்கமாக வசனம் பேசியிருப்பார். போலவே, எம்.ஜி.ஆரைக் காட்டிலும் ஜானகி அம்மையார் திரையில் தோன்றுகையில் பக்குவம் நிறைந்தவராகத் தெரிவார். ’மருதநாட்டு இளவரசி’யில் இருவரும் ஆற்றில் நீந்தும் காட்சியைப் பார்த்தால் இதனை உணரலாம்.
இளம் வயதிலேயே சிலரது முகமும் செயல்பாடுகளும் முதிர்ச்சியோடு விளங்கும். ஜானகி அம்மையாரிடன் தோற்றத்தில் இயல்பாகவே வீரமும் துணிவும் நிரம்பியிருந்ததைக் காணலாம். அந்த சுபாவத்தை நன்குணர்ந்தே, தான் நடத்தி வந்த நாடகமொன்றில் கே.சுப்பிரமணியம் தனது துணைவி எஸ்.டி.சுப்புலட்சுமியை வள்ளியாகவும் ஜானகியை முருகனாகவும் வேடமேற்க வைத்தாரோ என்று கூடத் தோன்றுகிறது.
இளம் வயதில் திரைத்துறையில் அறிமுகமானாலும், கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகே குறிப்பிடத்தக்க பாத்திரங்களும் நாயகி வாய்ப்புகளும் ஜானகி அம்மையாருக்கு வாய்த்தன. அதுவரையிலான எதிர்பார்ப்பும் காத்திருப்பும் அவரது முகத்தில் முதிர்ச்சி ரேகைகளைப் படரவிட்டதென்றால் அது மிகையில்லை.
ஜானகி அம்மையாருக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகள் சரளமாகத் தெரியுமென்பதும், எம்.ஜி.ஆரின் கடினமான தருணங்களில் நிழலாக உடனிருந்தார் என்பதும் நாம் அறிந்ததே.
தனது தனிப்பட்ட திறன்களையும் விருப்பங்களையும் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்கு அர்ப்பணித்த பாங்கும் அதற்கு முன்னர் அவரது நடிப்பில் தென்பட்ட அத்தனை பெருமிதங்களையும் அடியோடு சாய்த்தது.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு சில விழாக்களிலும் மிக அரிய தருணங்களிலும் ஜானகி அம்மையார் இடம்பெற்றார். அவை தொடர்பான புகைப்படங்களில் ஜானகி அம்மையாரின் இருப்பைப் பார்க்கையில் மக்கள் திலகத்தின் அருந்துணை என்ற பெருமிதத்தையும் மீறி அவரது முகத்தில் ஒருவித அமைதி தென்படுவதைக் காணலாம்.
திரையுலகில் நுழைந்தபோது அவருக்கு கிட்டாதது மக்கள் திலகம் உடனான வாழ்க்கைப் பயணத்தில் அபரிமிதமாகக் கிடைத்தது. அதனை அறிய முற்படுபவர்கள் அம்மையாரின் திரைப்படங்களையும் அவர்தம் புகைப்படங்களையும் கண்டு ரசித்து ஒப்பிட்டுக் கொள்ளலாம்!
– உதய் பாடகலிங்கம்
#எம்ஜிஆர் #திருமதி_ஜானகி_ராமச்சந்திரன் #விஎன்_ஜானகி #ஜானகி_அம்மையார் #MGR_Janaki_Ramachandran #VN_Janaki #Janaki_Ammayar #MGRJanaki #கேரளா #Kerala #வைக்கம் #Vaikkam #தாயார்_நாராயணி #Mother_Narayani #இயக்குனர்_கே.சுப்பிரமணியம் #Director_K_Subburamaniam #மன்மத_விஜயம் #Manmadha_Vijayam #கச்ச_தேவயானி #Kaccha_Devayani #மும்மணிகள் #Mummanigal #சாவித்திரி #Savithri #1000_தலைவாங்கி_அபூர்வ சிந்தாமணி #1000 #Thalavangiya_Apoorva_Sinthamani #சந்திரலேகா #Chandraleka #ராஜ_முக்தி #Raja_Mukthi #மோகினி #Mohini #வேலைக்காரி #Velaikkari #மருதநாட்டு_இளவரசி #Marudhanattu_Ilavarasi