மஞ்சு வாரியர்: நம்பிக்கையின் புதிய முகவரி!

திரையுலகில் எத்தனையோ நட்சத்திரங்கள் தோன்றி மறையலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, தான் இழந்த இடத்தை விட ஒரு படி மேலேயே சிம்மாசனம் போட்டு அமருவது என்பது ஒரு சிலருக்கே சாத்தியம்.

அந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கி, இன்று பல கோடி பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ மஞ்சு வாரியர்.

மின்னல் வேகத் தொடக்கம்:

தன்னுடைய 17 வயதில் திரைப்பயணத்தைத் தொடங்கிய மஞ்சு, 3 ஆண்டுகளிலேயே சுமார் 20 படங்களில் நடித்து மலையாளத் திரையுலகையே தன் பக்கம் திருப்பினார்.

நடிப்பு, நடனம் என சகல கலைகளிலும் விஸ்வரூபம் எடுத்த வேளையில், 1999-ம் ஆண்டு எதிர்பாராத விதமாகத் திரையுலகை விட்டு விலகினார்.

15 ஆண்டுகால இடைவெளியும் அதிரடி கம்பேக்கும்:

சுமார் 15 ஆண்டுகள் திரையில் முகம் காட்டாமல் இருந்த ஒரு நடிகையை உலகம் மறந்திருக்கக்கூடும் என்று நினைத்தவர்களுக்குப் பதிலடி கொடுத்தது 2014-ம் ஆண்டு.

‘How Old Are You?’ திரைப்படம் மூலம் அவர் கொடுத்த கம்பேக், இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

(இப்படமே தமிழில் ஜோதிகா நடிப்பில் ’36 வயதினிலே’ என ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது). வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதைத் தன் நடிப்பால் நிரூபித்தார்.

தரம் வாய்ந்த தேர்வுகள்:

இரண்டாவது இன்னிங்ஸில் மஞ்சு வாரியர் மிகத் தெளிவாக இருந்தார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேடிப் பிடித்தார்.

கிரைம் த்ரில்லர், எமோஷனல் டிராமா, மாஸ் ஆக்சன் என எல்லா ஜானர்களிலும் புகுந்து விளையாடினார்.

அசுரன்: தமிழில் தனுஷுடன் இணைந்து ‘பச்சையம்மா’ கதாபாத்திரத்தில் அவர் காட்டிய நடிப்பு, ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களையும் அவர் பக்கம் ஈர்த்தது.

துணிவு: அஜித்துடன் இணைந்து ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்து, தான் ஒரு ‘மாஸ்’ ஹீரோயின் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்:

அவரது திறமைக்குச் சான்றாக 7 பிலிம்பேர் விருதுகள், கேரள மாநில விருதுகள் மற்றும் தேசிய விருது எனப் பல அங்கீகாரங்கள் அவரைத் தேடி வந்தன.

திறமை இருந்தால் காலம் யாரையும் கைவிடாது என்பதற்கு இவரே சாட்சி.

நம்பிக்கையின் முகவரி:

இன்று தனது உடலமைப்பையும் (Physic), மனதையும் மிகக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் மஞ்சு வாரியர், வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கும், வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் பெண்களுக்கும் மிகப்பெரிய முன்னுதாரணம்.

சமீபத்தில் ‘Mr. X’ திரைப்படத்தில் அவர் ஆடியுள்ள ஆக்சன் காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தோல்விகளோ, நீண்ட இடைவெளிகளோ ஒருவரின் முடிவைத் தீர்மானிப்பதில்லை; நமது விடாமுயற்சிதான் நம்மை மீண்டும் உச்சத்தில் அமர்த்தும் என்பதற்கு மஞ்சு வாரியர் ஒரு வாழும் உதாரணம்.

 நன்றி: பிம்பம் டிவி

Comments (0)
Add Comment