‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர்.
அவர் இசையமைத்து, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இந்தப் பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
கமல் – ஸ்ருதி – லோகேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், “நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம், கமல்ஹாசனின் பாடல் இதெல்லாம் சேர்ந்து நடிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது” என குறிப்பிட்டார்.
“ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எது வந்தாலும் நான் மறுக்கமாட்டேன். இந்த ஆல்பத்தில் நான் நடித்த பிறகு கேமராவுக்கு முன்னால் நிற்கும் அச்சம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஸ்ருதிஹாசன்” என புகழாரம் சூட்டிய லோகேஷ் கனகராஜ், தனது அடுத்தப் படங்கள் குறித்த விவரங்களையும், மேடையில் பகிர்ந்து கொண்டார்.
“எனக்கு படங்களை இயக்குவதே பிடித்திருக்கிறது. நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை. புதிதாக 3 சினிமாக்களை இயக்க முன்பணம் வாங்கி இருக்கிறேன். அந்தப் படங்களை முதலில் எடுத்து முடிக்க வேண்டும்.
எனது டைரக்ஷனில், ரஜினி சார் நடிக்கும் அவரது 171 படத்தின் ‘ஷுட்டிங்’ ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன்” என்று தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ்.
ரஜினிகாந்த் இப்போது த.ச.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ‘கால்ஷீட்’ அளித்துள்ளார்.
-பாப்பாங்குளம் பாரதி.
#ராஜ்கமல் நிறுவனம் #ஸ்ருதிஹாசன் #Shrutihaasan #கமல்ஹாசன் #Kamalhaasan #இனிமேல் ஆல்பம் #Inemel Album #லோகேஷ் கனகராஜ் #Lokesh Kanagaraj #ரஜினிகாந்த் #Rajinikanth #தலைவர் 171 #Thalaivar 171 #கைதி 2 #Kaithi 2