சினிமா கனவில், சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்த லிங்குசாமி, ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்தார், ‘என்றும் அன்புடன்’ பட இயக்குநர் பாக்யநாதன், ஏ.வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.
லிங்குசாமி டைரக்டு செய்த ‘ஆனந்தம்’ திரைப்படம் அவருக்கு நல்ல விசிட்டிங் கார்டாய் அமைந்தது. அடுத்து இயக்கிய ‘ரன்’ படமும் வெற்றி. ‘சண்டைக்கோழி’ அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதில் ஹீரோவாக நடித்த விஷாலும் பெரிய உயரத்தைத் தொட்டார்.
லிங்குசாமி இயக்கி, கார்த்தி நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பையா’ திரைப்படம் வரும் 11 ஆம் தேதி ரீ-ரலீஸ் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் லிங்குசாமி, படம் உருவான விதம் குறித்து விவரமாக பேசினார்.
“18 நாட்களில் ‘பையா’ திரைப்படத்தின் கதையை தயார் செய்தேன். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் போய் இந்த கதையை கூறினேன்.
கதையை சொல்ல ஆரம்பித்த போது சிரித்த கார்த்தி, முழு கதையையும் கேட்டு விட்டு. பையாவில் நடிக்க ஒப்புக்கொண்டார்.’ என பேச்சை நிறுத்திய கார்த்தி, மீண்டும் தொடர்ந்தார்.
இந்தக் கதை உருவாகும்போதே ‘பையா’ என்கிற டைட்டிலும் கிடைத்து விட்டது. ஏற்கனவே கார்த்திக்கு ‘பருத்திவீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது.
எனவே சிறிய தலைப்பில் அந்தப் படத்துக்கு பெயர் இருக்க வேண்டும் என யோசித்து வைத்த டைட்டில் தான் ‘பையா’- இதற்கான அர்த்தம் என்ன? என என்னிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
எனக்கு பதில் சொல்ல வரவில்லை- அப்போதும் சரி இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது’ என்று சிரித்தார்.
‘அடடா மழை டா’ பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் சற்று தொலைவில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்க சொல்லி தயக்கம் இல்லாமல், உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார், தமன்னா.
படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது – அவருக்கு முதல் பெரிய ஹிட் ‘பையா’ படம் தான்.
எனது எந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம் என ரசிகர்களிடம் சர்வே நடத்தினோம். அந்த சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக ஓட்டுகள் விழுந்தது.
எனவே அதனை மீண்டும் வெளியிடுகிறோம்’ எனக் குறிப்பிட்ட லிங்குசாமியிடம், ‘பையா’ இரண்டாம் பாகம் குறித்து கேட்டபோது அவர் அளித்த பதில்,
‘பையா 2’ படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். அவரது தோற்றத்தில் இப்போது ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டது – எனவே பையா கதாபாத்திரத்தை மீண்டும் செய்தே தீர வேண்டுமா என அவர் தயங்குகிறார்.
‘பையா 2’ படத்தில் கார்த்தி நடிக்க மறுத்துவிட்டால், அவருக்கு பதிலாக, வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்குவேன் – அதற்கு ஏற்றார் போலத்தான், இதன் இரண்டாம் பாக கதையை எழுதியுள்ளேன்.
கதாபாத்திரங்கள் மற்றும் கதையில் லேசான மாற்றங்கள் இருந்தாலும்,‘பையா 2’ விலும் கார் இருக்கும்- வேகம் இருக்கும் – ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்று பூடகமாக சொன்னார் லிங்குசாமி.
கார்த்தி இல்லைன்னாலும், இரண்டாம் பாகத்தில் தமன்னா இருப்பாங்களா? ‘அடடா மழைடா’ பாடல் இருக்குமா? என கேட்கிறார்கள் ரசிகர்கள்.
-பாப்பாங்குளம் பாரதி.