உருவாகிறது ‘கில்லி’ இரண்டாம் பாகம்!

‘இளையத் தளபதி’ விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் ‘கில்லி’.

தரணி இயக்கத்தில், வித்யாசாகர்  இசை அமைத்த இந்தப் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார்.

காதல், ஆக்ஷன், பாடல்கள் என வணிகப் படங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் கலந்திருந்தன.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்தப் படம், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

கடந்த 20 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ‘ரீ-ரிலீஸ்’ செய்யப்பட்டது.

ரீ -ரிலீசில், இதுவரை 20 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது ‘கில்லி’.

இதனையடுத்து சென்னையில் ‘கோட்’ படத்தின் ஷுட்டிங்கில் இருந்த விஜயை, இயக்குநர் தரணி, தயாரிப்பாளர் ரத்னம் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார்கள்.

வித்யாசாகருடன் மோதல்

‘கில்லி’ உருவான விதம் குறித்து  இயக்குநர் தரணி, மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

“அப்போது விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தை நான் முடித்திருந்தேன். எனது உதவியாளர்களுடன், சென்னை மிட்லண்ட் தியேட்டரில்  தெலுங்கு படமான ‘ஒக்குடு’ படத்தை பார்க்கப்போனோம்.

முதல் காட்சியிலேயே படத்துடன் ஒன்றிப்போனேன். இங்கே ஒரு உண்மையை சொல்லவேண்டும். அந்த சமயத்தில் என்னிடம் மூன்று கதைகள் இருந்தன.

கபடி விளையாட்டு வீரர் சம்மந்தப்பட்ட கதை ஒன்று.

கலங்கரை விளக்கத்தில் தனது காதலியை மறைத்து வைத்திருக்கும், ஓர் இளைஞர் குறித்த கதை, இன்னொன்று.

மூன்றாவது கதை – ‘ரோடு டிராவல்’ பற்றிய கதை.

‘ஒக்குடு’ படத்தில் இந்த மூன்று விஷயங்களும் இருந்தன.

படத்தைப் பார்த்து முடித்ததும் நேராக தயாரிப்பாளர் ரத்னம் சாரை சந்தித்து ‘ஒக்குடு’ படத்தின் ‘ரீமேக்’ உரிமையை வாங்குமாறு கூறினேன். அவரும் அதன் உரிமையை வாங்கினார். விஜயை நாயகனாக ஒப்பந்தம் செய்தோம். இதுவே ‘கில்லி’ உருவான விதம்.

வித்யாசாகர், மெலடி பாடல்களில் அசத்துபவர். ‘கில்லி’ படத்துக்கு எல்லா பாடல்களும் ‘ஸ்பீடு’ பாடல்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். வித்யாசாகருடன் சண்டை போட்டு ‘ஸ்பீடு’ பாடல்கள் வாங்கினேன். அது, ‘அன்பான தகராறு’.

அந்த ‘தகராறு’ தான், ‘கில்லி’ படத்தின் அனைத்து பாடல்களும் இன்றைக்கும், ரசிகர்கள் தியேட்டரில் ‘டான்ஸ்’ ஆடும் அளவுக்கு  ‘ஹிட்’ அடிக்க காரணம்” என்று சிலாகித்தார் தரணி.

‘இரண்டாம் பாகம் வரும்’..

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு சின்ன விபத்து நேரிட்டது.

கொஞ்ச நாட்கள் அவர் ஓய்வில் இருக்கும்படி ஆகியது. இதனால் ‘அப்படி போடு’ பாடலை மட்டும் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், சூட் செய்தார்.

இந்தப் படத்தின், ‘ஹைலைட்’ பாடலான ‘அப்படி போடு’ பாடலை  எழுதியவர் கவிஞர் பா விஜய்.

‘ஒரேயொரு சூரியன் இருப்பதுபோல தான், ஒரேயொரு  பாடல் என்றால், அது அப்படி போடு பாடல் தான் – நான் எழுதிய கமர்ஷியல் பாடல்களில் இதுதான் பெஸ்ட்’ என்று பா. விஜய்  நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

‘கில்லி’ படத்துக்கு முன்பு, ஏ.எம். ரத்னம் தயாரித்த பல படங்கள் தோல்வி அடைந்து, அவர் நொந்து போய் இருந்தார். ‘கில்லி’யின் அமோக வெற்றியால் ரத்னம், பொருளாதார ரீதியாக மீண்டு வந்தார்.

“கில்லி’ ரீ- ரீலீசில்’ நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது சந்தோஷமாக உள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது” என்கிறார் ஏ.எம்.ரத்னம்.

விஜய்யை நடிக்க வைக்கும் திட்டம் உண்டுங்களா, ரத்னம் சார்?

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment