அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள, யாரும் எதிர்பாராத வகையில் ‘இளையதளபதி’ விஜய், அரசியலில் குதித்ததோடு கட்சி பெயரையும் அறிவித்து விட்டார்.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) எனும் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது விஜய்க்கு 68-வது படம்.
இந்தப் படத்தை முடித்து விட்டு, இன்னும் ஒரே ஒரு படத்துடன் திரையுலகிலிருந்து வெளியேறி, முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க உள்ளதாக விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
விஜய் நடிக்கும் 69-வது படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், அட்லீ ஆகியோரில் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அவர்கள் மூவருமே வேறு வேறு சினிமாக்களில் ‘பிஸி’யாக இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ், சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் விஜய்யை சந்தித்து இயக்குநர் ஹெச்.வினோத் கதை ஒன்று சொல்லியுள்ளார்.
அரசியலை களமாகக் கொண்ட இந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போயிற்று. எனவே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்துக்கு கொடுத்துள்ளார், விஜய்.
இந்தப் படத்தை டிவிவி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
‘சதுரங்க வேட்டை’ ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘நேர்கொண்ட பார்வை’ ‘துணிவு’ உள்ளிட்ட சினிமாக்களை இயக்கியுள்ள வினோத், ‘டாப்- 5’ டைரக்டர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-பாப்பாங்குளம் பாரதி.
#டிவிவி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் #TVV Entertainment Production #இயக்குநர் ஹெச்.வினோத் #Director H Vinoth #நடிகர் விஜய் #Actor Vijay #அரசியல் கதை #Political story