இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”.
ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி: விருமாண்டி படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப்படம் செய்துள்ளேன். மிகப்பெரிய மெனக்கெடல் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.
லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது.
ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், வெள்ளிக்கிழமை நாயகன் என்கிறார்கள். அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன், என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை, நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். ஒரு அருமையான படைப்பு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா: தற்காலத்திய ஆண் பெண் உறவில் ஒரு பிளவு ஏன் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக இந்தப் படம் பேசுகிறது. இயக்குநர் அதனை அழகாகப் படம் பிடித்துள்ளார்.
சில பாடல்களை மெட்டுக்களே தந்து விடும். ஜீவியின் இசையை, மெட்டைக் கேட்டவுடன் வார்த்தைகள் வந்து விழும். அப்படி ஒரு நல்ல பாடலை இப்படத்தில் எழுதியது மகிழ்ச்சி.
நடிகர் இளவரசு: பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும். ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன். ஆனால், இந்தக் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது.
ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிஹேவரியில் ஏற்படும் பிரச்சனை, எங்குக் கொண்டு செல்லும் என்பதை முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர்.
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்: 2020 ஏப்ரலில் என் முதல் படம் ஓடிடியில் வெளியானது. பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவால் தான் நான் வெளியே கொஞ்சம் தெரிந்தேன்.
இந்தப் படத்தின் ஐடியா வந்த போது நரேனிடம் சொன்னேன். அவர் மூலமாகத் தான் வருணிடம் கதை சொன்னேன். அவர் படங்களே பார்த்ததே இல்லை. எப்படிப் புரிந்து கொள்வார் எனத் தயக்கம் இருந்தது. ஆனால் அவருக்குப் பிடித்தது உடனே தயாரிக்கலாம் என்றார்.
ஜெகதீஷ் என் குறும்படத்தில் வேலை பார்த்த காலத்தில் கிம்பல் வைத்து ஒரே ஷாட்டில் ஒரு படம் எடுத்தோம். அப்போது ஆரம்பித்த பயணம், என் முதல் படத்திற்கே அவரைத்தான் கேட்டேன்.
இந்தப் படத்தில் அவர் விஷுவல் தான் ஞாபகம் வரும். ஐஸ்வர்யாவை அழகாகக் காட்டியுள்ளார்.
எனக்கு பர்ஸனலாக டப்பிங் பிடிக்காது. அதனால் தான் லைவ் சவுண்ட். சின்னச் சின்ன சவுண்ட் கூட ஷீட்டிங்கில் சிக்கலாகி விடும்.
திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி வரும். ஆனாலும் லைவ் சவுண்ட் பேசப்படும். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுகிற ஆர்டிஸ்டால் தான் முடியும். அதனால் தேடித் தேடி நடிகர்களைத் தேர்வு செய்தேன்.
ஜீவி நோ தான் சொல்வார் என நினைத்தேன். ஆனால் அவர் கதை நல்லாருக்கு நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டார்.
அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிக்கும்போது கதைகள் கேட்பார், மியூசிக் போடுவார், இந்திப் படம் நடிக்கிறார், தயாரிக்கிறார். அவரைப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு ஷாட்டிலும் பெட்டராக நடிக்க முயற்சிப்பார். இப்படம் அவரோட பெஸ்ட்டாக இருக்கும்.
முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ், டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.