தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், கவுதம் வாசுதேவ் மேனன். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என தமிழ் சினிமா கொண்டாடும் படங்களைக் கொடுத்தவர்.

அவருக்கு இது சோதனைக்காலம். நிதி நெருக்கடியே காரணம் என சொல்ல தேவை இல்லை. இதனால் கவுதம் இயக்கிய படங்கள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

ரொம்ப நாள் முடங்கி கிடந்த, அவரது ‘ஜோஷுவா’ திரைப்படம் அண்மையில் வெளியானது. அது, தோல்விப் படமாக அமைந்துவிட்டது. ஆனால் கவுதம் மேனன் துவண்டு போகவில்லை.

அவரது இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தைப் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் நடித்துள்ள இந்தப்படம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது.

தடைகளை உடைத்து ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்துவிட்டார் கௌதம் மேனன். ஆனால் படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்.

பல முறை ரிலீஸ் தேதியை அறிவித்த பிறகும் படம் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்து பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரமும் செய்யப்பட்டது.

தியேட்டர்களில் முன்பதிவும் ஆரம்பமானது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு இருந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்துள்ள கவுதம், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார்.

இப்போது தேர்தல் நேரம் என்பதால் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகப்போவதில்லை. எனவே வெள்ளித்திரையில் மின்னுவதற்கு தன்னந்தனியாக வருகிறது, துருவ நட்சத்திரம்.

விக்ரம் நடிக்க பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ படமும் வெளியீட்டுக்கு தயாராகவே உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின் , படத்தை வெளியிட உள்ளனர்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment